NewsSri Lanka

இலங்கையில் மலையகத் தமிழர் மிகவும் இழிவான நிலையில் வாழ்கின்றனர் – ஐ.நா. நிபுணர்இனப்பரிமாணம் தற்கால அடிமைத்தளையை ஒத்தது

இலங்கைக்கு மிகவும் அத்தியாவசியமான வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் தேயிலை வர்த்தகத்தின் அடிநாதமான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மனிதாபமற்ற, மிகவும் இழிவான நிலையில் வாழ்கிறார்கள் என இலங்கைக்கு வருகை தந்த, ஐ.நா. விசேட தூதுவர் ரொமோயா ஒபொகட்டா தெரிவித்துள்ளார்.

“தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்கென இந்தியாவிலிருந்து 200 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்த்தும் பலவகையான புறக்கணிப்புக்களுக்கும் உள்ளாக்கப்படு வருகிறார்கள். இது தற்கால அடிமைப் பாவனையின் அம்சங்களைக் கொண்டிருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தின்போது வடக்கு-கிழக்கு மாகணங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், பின்னர் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளாப்ப்ட்டுவரும் மீறல்கள் ஆகியன ஐ.நா. மற்றும் சர்வதேச மட்டங்களில் பேசப்பட்டாலும், இலங்கையின் மலையகத் தமிழர்கள் மிகநீண்ட காலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இதுவரை எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டே வந்தன.

சுமார் 10 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இச்சமூகத்தில் குறைந்தது ஒன்றரை இலட்சம் பேராவது தோட்டங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களைது ஒரு நாட் சம்பளம் 1000 ரூபாய்கள். அதுவும் நாளொன்றுக்கு 18 முதல் 22 கி.கி. தேயிலைக் கொழுந்துகளைக் கொய்தால் மட்டுமே கிடைக்கும். மழையோ வெயிலோ, பூச்சிகள், அட்டைகளின் தொல்லைகளுக்குள்ளும் அவை பறிக்கப்பபட்டால்தான் இச் சம்பளம் கிடைக்கும்.

ஆடை, ரப்பர், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியுடன், தேயிலை, தனியாக $1.3 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டித் தருகிறது.

காலனித்துவ காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட 10 அடி x 12 அடி விஸ்தீரணமுள்ள வரிசை வீடுகளில் (line houses), ஒரு வீட்டில் 10 பேர் மட்டில், மிகக்குறைந்த சுகாதார வசதிகளுடன் இம் மக்கள் வாழ்கிறார்கள். காணிகளை வாங்கும் உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

“இந்திய அரசாங்கத்தால் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன என நான் அறிந்துள்ளேன் என்றாலும் ‘லைன் வீடுகளில்’ வாழும் தொழிலாளர்களின் நிலைமையையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்” என்கிறார் ஒபொகாட்டா.

மலையகத் தமிழர்களுக்கு 14,000 வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்தியா வாக்குறுதியளித்திருந்தாலும்,. அது மிகவும் நத்தை வேகத்திலேயே நகர்கிறது. இதற்கு காரணம் இவ் வீடுகளுக்கான காணிகளைப் பிரித்துக் கொடுக்கப் பெருந்தோட்ட உரிமையாளர்கள் (நிறுவனங்கள்) மறுப்புத் தெரிவிப்பமையே காரணமாகும் எனப்படுகிறது. வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த விசேட தூதுவர் அங்கு தொடர்ந்து பிரயோகத்திலிருக்கும் சாதிக் கொடுமைகள் குறித்தும் அம் மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்களுக்கு காணிகள் வாங்கும் உரிமை மறுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான பெண்களின் பரிதாபமான நிலை பற்றியும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். “இப்பணியாளர் மீது சுமத்தப்படும் ‘உற்பத்தி இலக்கை’ (production target) எட்டுவதற்காகப் பல பெண்கள் கழிப்பறை போவதையே தவிர்த்துக் கொள்கிறார்கள்” என்கிறார் அவர். கோவிட் தொற்று மற்றும் பொருளாதாரச் சீரழிவு காரணமாக ஏற்பட்டுள்ள விலையேற்றத்தைச் சமாளிப்பதற்காக இத் தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலைமைகளில் பணிபுரியவேண்டியுள்ளது. சம்பள உயர்வு கேட்கும் பணியாளர்கள் வேலையிலிருந்து உடனடியாகவே நீக்கப்படுகிறார்கள்.

நுண்கடன் பொறிகளில் சிக்கித் தவிக்கும் ஏழைக் குடும்பப் பெண்களின் பரிதாபகரமான நிலை குறித்தும் தூதுவர் ஒபொக்காட்டா கவனத்தை ஈர்த்துள்ளார். 30% முதல் 200% வரை வட்டி அறவிடும் இந்நுண்கடன் நிறுவனங்களின் தொல்லைகளைச் சமாளிக்க சில குடும்பங்கள் தமது குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பவேண்டியேற்படுகிறது. சில நுண்கடன் நிறுவன முகவர்கள் வட்டி செலுத்த முடியாத குடும்பங்களிலுள்ள இளம்பெண்களைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகிறார்கள். இதனால் இதுவரை 200 பெண்களுக்குமேல் தற்கொலை செய்துள்ளார்கள்.

“இந் நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அரசு வாக்குறுதியளித்திருந்தும் இதுவரை ஆக்கபூர்வமாக எதுவுமே நடைபெறவில்லை என்பது குறித்து நான் மிகவும் கவலைக்குள்ளாகியிருக்கிறேன்” என தூதுவர் ஒபொகாட்டா தெர்வித்துள்ளார்.

(நன்றி: ‘தி இந்து’ / மீரா சிறிநிவாசன்)