இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இனிமேல் இடம் பெறாது – ஜனாதிபதி
இலங்கையிந் 9 தாவது பாராளுமன்றதின் இரண்டாவது அமர்வு இன்று (ஜன்.18) நடைபெற்றது. பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்துப் பேசிய ஜ்னாதிபதி கோத்தாபய ராஜபக்ச “இனிமேல், தன்னுடைய ஆட்சிக் காலத்தில், மனித உரிமை மீறல்கள் எதுவும் நடைபெற மாட்டாது மட்டுமல்ல எவராவது அவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கவும் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களையும் நியமங்களையும் அனுசரித்துப் போகும் நாடென்ற வகையில், இலங்கைக்கு முன்னால் சர்வதேசங்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் சில கருத்து முரண்பாடுகளைக் களையவேண்டிய பொறுப்பும் எமக்கிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
“எனது பதவிக் காலத்தில் எவ்வித மனித உரிமை மீறல்களும் நடைபெறுவதை அரசாங்கம் அனுமதிக்க மாட்டாது. எதிர்காலத்திலும் அப்படியான மீறல்கள் நடைபெறுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. மூன்று தசாப்த பயங்கரவாதத்தினால் எல்லா சமூகங்களுமே பாதிக்கப்பட்டிருந்தன. 2009 இல் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் நாட்டில் சமாதானத்தை நாம் தோற்றுவித்துள்ளோம். இருப்பினும் வரலாற்றின் இருண்ட பக்கங்களை அழித்து பாதுகாப்பான நாடொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலம் சகல மக்களும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழிசெய்வோம். இனம், மதம், அரசியல் சார்பு ஆகியவற்றைக் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமைப்படவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் மக்கள் நிலைமை சீர்பெற நாம் பெருமளவிலான முதலீடுகளைச் செய்துள்ளோம். நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, போரின்போது வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமிருந்த 90 வீதமான நிலங்களை விடுவித்து விட்டேன். இவ்விடங்களில் பாதுகாப்பை நிலைநிறுத்தியதோடு, அமைதியான வாழ்சூழலையும் ஏற்படுத்தியிருந்தோம். தொடர்ந்தும் மீதியான நிலங்களை விடுதலை செய்ய நாம் ஆவன செய்வோம். போரின்போது காணாமலாக்கப்படுவது தனியே ஒரு பகுதியின் பிரச்சினை அல்ல. அவர்கள் எல்லோருக்கும் அதியுச்ச நீதி கிடைக்க நாம் வழி செய்வோம். இனவாதத்தை நாம் மறுக்கிறோம். இந்நாட்டின் சகல மக்களும் பாதுகாப்பாகவும், சகல உரிமைகளுடனும், மரியாதையுடனும் வாழ்வதையே இவ்வரசாங்கம் விரும்புகிறது. எனவே, தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களை ஒருவரையொருவர் மோதிக்கொள்ளத் தூண்டும் பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளும்படி நான் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என ஜனாதிபதி தனது பேச்சின்போது தெரிவிதிருக்கிறார்.