இலங்கையில் மனித உரிமைக் காவலர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் – சர்வதேச மன்னிப்புச் சபை
ஜனவரி 17, 2020

இலங்கையில், மனித உரிமை அமைப்புகள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர் மிரட்டப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் குறித்து வெளியாகும் பல தகவல்கள் குறித்து தாம் அக்கறை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று கருத்துத் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அது, பேச்சுச் சுதந்திரத்தை மதிக்கும்படியும், சட்ட அமுலாக்கல் என்ற பெயரில் அவர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்தும்படியும், துன்புறுத்தப்பட்டதாக ஏற்கெனவே பதிவிலுள்ள வழக்குகளை விசாரிக்கும்படியும் அது அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
மே 2019 முதல் ஜனவரி 2020 வரை, மனித உரிமை மற்றும் ஊடக அமைப்புகளின் செயலிடங்களுக்கு, அதிகாரிகள் பல தடவைகள் திடீர் வருகை தந்து விசாரணைகளை மேர்கொண்டமை பற்றிய அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளனவெனவும் அச் சம்பவங்களை மிரட்டல்களாகவும், துன்புறுத்தல்களாகமே பார்க்கமுடியுமென சர்வதேச மன்னிப்புச் சபை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘லங்காதீப’ ஊடகவியலாளர், முன்னாள் ‘லேக் ஹவுஸ்’ அதிபர், ‘தி லீடர்’ ,’வொய்ஸ் ரியூப்’ ஆகியவற்றின் இரண்டு ஊடகவியலாளர்கள், ‘தினப்புயல்’ ஆசிரியர் மற்றும் ‘நியூஸ் ஹப்’ ஊடக அலுவலகம் உட்படப் பலர் மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறைந்தது 12 தனிப்பட்டவர்கள் / அமைப்புகளின் அலுவலகங்களுக்கு காவற்துறையினர் சென்று அவர்களது பணி தொடர்பாக விசாரணை செய்ததாகப் பெறப்பட்ட முறைப்பாடுகள் மீதான பதிவுகள் தம்மிடம் உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
“இச் சம்பவங்கள் மே 2019 இலிருந்து, வடக்கு, கிழக்கு, மேற்கு மாகாணங்களில் மேலெழுந்தவாரியாக நடத்தப்பட்டிருந்தனவெனினும், நவம்பர் 2019 இற்குப் பிறகு தொடர்ச்சியாக நடபெற்று வருகின்றன” என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
“வெவ்வேறு பாதுகாப்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகளை, மனித உரிமைக் காவலர்கள் மீது கடந்த பல வருடங்களாக நடைபெற்ற மிரட்டல்கள், தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை ஏற்கெனவே திரட்டியிருக்கும் தகவல்களைப் பின்னணியாகக் கொண்டே பார்க்கப்படும்” என அது தெரிவித்துள்ளது.
இப்படியான மிரட்டல்களின் மூலம், அமைப்புகளையும், தனிமனிதர்களையும் தொடர்ந்தும் மனித உரிமைப்பணிகளைச் செய்யமுடியாதவாறு தடுக்கும் முயற்சியாகவே பார்க்க முடியும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
“குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights (ICCPR)) உட்பட்ட பல உடன்படிக்கைககளில் கையெழுத்திட்ட நாடென்ற வகையில், மனித உரிமைக் காவலர்களைப் பாதுகாக்க வேண்டிய சர்வதேசக் கடமை இலங்கைக்கு உண்டு. மகாள் அமைதியாகக் கூடுவதற்கும், கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் உரிமையுண்டு என்பதற்கு இவ்வுடன்படிக்கை உத்தரவாதமளிக்கிறது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.