இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கடுமையாக அவதானிக்கும்படி ஐ.நா. ஆணையத்துக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை



நாளை (செப்.13) ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் அமர்வின்போது இலங்கையின் தற்போதய மனித உரிமைகள் நிலவரம் பற்றிய ஆணையாளர் மிஷேல் பக்கெலெயின் வாய்வழி அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் மூன்னெடுப்புக்களைக் கடுமையாக அவதானிக்கும்படி மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch (HRW)) ஐ.நா.மநித உரிமைகள் சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரியப்பட்டதிலிருந்து இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது எனவும் அரசின் சுயாதீன அங்கங்கள், மக்களாட்சி, நீதி பரிபாலனம் ஆகியன பலவீனப்படுத்தப்பட்டுள்ளன எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அங்கத்துவநாடுகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அங்கு தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எச்சரிக்கையோடு அணுகும்படியும், சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளை அனுசரிக்கும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும்படியும் ஐ.நா. அங்கத்துவநாடுகளை அது கோரியுள்ளது.

“2019 இல் கோதாபய அரசு பதவி ஏற்றதிலிருந்து, இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறிதளவு முன்னேற்றங்கள்கூட மீளப்பெறப்பட்டுவிட்டன. சர்வதேசங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பும், கொடுக்கப்படும் அழுத்தங்களுமே அங்கு அச்சத்துடன் வாழும் சிறுபான்மை இன மக்களும், செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் எதிர்நோக்கும் ஆபத்துக்களைக் குறைக்கும்.

மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களையும் அரச பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு செய்வதும், அச்சுறுத்துவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் எந்த நேரமும் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள்.

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக இதுவரை 311 பேர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் 2 வருடங்களுக்கு மேலாகச் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவராவது இன்றுவரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்படவில்லை.

சிவில் சமூக அமைப்புகள், இலாபநோக்கற்ற அமைப்புகள் ஆகியவற்றை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணித்தும் விசாரணை செய்தும் வருகிறார்கள்.



2008-2009 காலப்பகுதியில் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கடற்படைத் தளபதியை ஆகஸ்ட் 2021 இல் சட்டமா அதிபர் விடுதலை செய்திருக்கிறார். ஆனால் இக்குற்றச்சாட்டுகளை விசாரித்து, தளபதியைக் குற்றவாளியாகக் கண்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகராவைக் ஒன்றரை வருடங்களாகச் சிறையில் வைத்திருந்தனர்.

இதேவேளை, இலங்கையில் உள்ளார்ந்த பொறிமுறை ஒன்றின் மூலம் அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கடந்த மாதம் அரசாங்கம் நகரிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அறிக்கை கொடுத்திருந்தது. உள்ளக சட்ட வரம்புகளுக்குள் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன என வெளிவிவகார அமைச்சு ராஜதந்திரிகளுக்கான தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா US$ 500 வழங்கி, அவர்களது எதிர்பார்ப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவதெனவும் இதன் மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுக்கலாம் எனவும் நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்திருக்கிறார்.

‘புதைபொருள் ஆராய்ச்சி’ என்ற போர்வையில் தமிழர்ளுக்குச் சொந்தமான காணிகளை அரசு திட்டமிட்டு அபகரிப்பது இன்னும் தொடர்கிறது. இதில் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைப் புத்த பிக்குகளும், பாதுகாப்பு படைகளும் அச்சுறுத்துகிறார்கள்.

எனவே சர்வதேச அரசுகள் இவ்விடயத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானிய அரசு ஆகியன, தொடர்ச்சியாக மனித உரிமைகள் விடயத்தை இணைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அத்தோடு, ஆணையாளர் மிஷெல் பக்கெலெ சிபார்சு செய்ததன் பிரகாரம், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் அடையாளப்படுத்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்றவற்றைச் சர்வதேசங்கள் மேற்கொள்ளவேண்டும்.

இலங்கையில் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருப்பது பற்றி எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசு இவ்விடயத்தில் மிகவும் விழிப்போடு இருக்கிறது என்பதை அனுசரித்து ஐ.நா. அங்கத்துவநாடுகள் இவ்விடயத்தில் தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுக்கவ்ண்டும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்கூலி தெரிவித்துள்ளார்.