Spread the love

ஜூலை 17, 2020: இனங்களுக்கிடையேயான பூசல்கள், சிறுபான்மையினருகெதிரான வன்முறைகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் என 2019 ம் ஆண்டு, இலங்கையில் ஒட்டுமொத்தமாக மனித உரிமைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுச் செயலாளர் டொமினிக் றாப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் மீதான வெளிநாடுகள் மற்றும் மொதுநலவாய செயலகத்தின் 2019 ஆண்டு அறிக்கையில், மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் 40/1 இல் இணங்கியிருந்ததற்கமைய, போருக்குப் பின்னான நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மிகவும் தாமதமாகவே செயற்படுகிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் நடைபெற்றுள்ளன. 2019 இன் இறுதிப் பகுதியில், மனித உரிமைக் காவலர்கள், குடிமைச் சமூக உறுப்பினர்கள் மீது அதிகரித்த கண்காணிப்பும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்பட்டன” என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த மார்ச் மாதம், மனித உரிமைகள் சபையின் தீர்மானம் 30/1 இன் நிறைவேற்றப்படாமல் எஞ்சியிருக்கும் அம்சங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் 2 வருட் அவகாசம் வழங்கப்பட்டது. காணாமற் போனோருக்கான அலுவலகம் நிறுவப்பட்டமை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை எனப் பலவற்றில் முன்னேற்றம் கண்டமை தொடர்பில் பிரித்தானியா, இலங்கையை வரவேற்கும் அதே வேளை அரசியலமைப்புத் திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டம் மாற்றப்படுதல் போன்ற விடயங்களில் மேலும் முன்னேற்றங்கள் தேவை என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களெனக்கூறிக் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டுவிட்டாலும், பலர் இப்போதும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையின மக்கள் காலவரையற்ற வகையில் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது இலங்கையில் வழக்கமாகிவிட்டது”

“தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறைகளும், கலவரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது ஒருவர் இறந்தும், பல பள்ளிவாசல்களும், வீடுகளும், வியாபார நிலையங்களும் சேதப்படுத்தப்பட்டன. முஸ்லிம் மக்களுக்கும், தண்ஜ்சம் கோரியோர், புகலிடம் கோரியோர் மீதான அச்சுறுத்தல்களும் பாகுபாடுகளும் பிரயோகிக்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தை அவமதித்தவர் எனக் குற்றம்சாட்டப்பட்ட, தீவிர பெளத்த தேசிய இயக்கமான பொது பல சேனாவின் தலைவரான ஞானசார தேரரை, விடுதலை செய்திருந்தார். அப்போது சிறுமான்மையினரின் உரிமைகள் குறித்து பிரித்தானிய அமைச்சர்கள் இலங்கை அமைச்சர்களுத் தமது கரிசனையைத் தெரிவித்திருந்தனர்”

“பிரித்தானியா மற்றும் சர்வதேச பங்காளிகள் எச்சரித்த போதும், இறுதி போரின்போது பல மோசமான மனிதௌரிமை மீறல்களைச் செய்த இராணுவப் பிரிவுக்குத் தலைமைதாங்கிய மேஜர் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவை, அப்போதைய ஜனாதிபதி, இராணுவத் தளபதியாக நியமித்தார்”

Related:  கொறோணாவைரஸ் தடுப்பு மருந்து | ஒக்ஸ்ஃபோர்ட் மனிதப் பரீட்சை வெற்றி!

“2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நடைபெற்று முடிந்திருந்தாலும், கட்டுப்பாடற்ற பிரச்சாரச் செலவுகள், அரசாங்கத்தின் வளங்கள் பாவிக்கப்பட்டமை, பாகுபாடுகளைக் காட்டிய ஊடகங்கள் என்பன சகல தரப்பினருக்கும் சமமான சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கவில்லை. பொய்யான தகவல்கள், பக்கம் சார்ந்த செய்திகள், வெறுப்பேற்றும் இணையவழிப் பிரச்சாரங்கள் ஆகியன முன்னிடம் பெற்றிருந்தன. தேர்தலுக்குப் பின்னர் சில ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டும், விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டும் வருகின்றனர்”“மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் இவை தொடர்பான குற்றச் செயல்கள் ஆகியவற்றை விசாரணை செய்துகொண்டிருந்த முக்கிய பொலிஸ் அதிகாரிகள் கடந்த நவம்பரில் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். பொலிசாரின் நடவடிக்கைகளை விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணையமொன்று நிறுவப்படுமெனக் கூறப்பட்டது”

” 2019 இன் இறுதியில், சட்டம் மற்றும் இடைக்கால நீதி விவகாரங்களில் பணியாற்றிவந்த பல செயற்பாட்டாளர்களைக் கண்காணித்தும், அச்சுறுத்தியும் இருந்ததாகப் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றன” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email