• Post category:WORLD
  • Post published:June 12, 2020
Spread the love

இலங்கையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அரசாங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட பாகுபாடு தொடர்கிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை கூறுகிறது.

இராஜாங்கச் செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோவினால் வெளியிடப்பட்ட, 2019 ம் ஆண்டுக்கான ‘சர்வதேச மதச் சுதந்திர அறிக்கை’ யில் இலங்கை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதச் சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துக்களின் படி, இலங்கயின் அரச பிரதிநிதிகள் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான ஒழுங்குபடுத்தப்பட்ட பாகுபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட மதம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களை, அதிகாரிகள் மேற்போக்காக விசாரித்தோ அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுவதோ நடைபெற்று வருகிறது.மதச் சிறுபான்மையினர் அல்லது அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம் அரச அதிகாரிகளும், பொலிசாரும், பெரும்பான்மையினர் பக்கமே சார்ந்துவிடுகின்றனர் என அவர்கள் கூறியதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

ஏப்ரல் 21 நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதன் சூத்திரதாரி சார்ந்த அமைப்பாகிய தேசீய தெளஹீத் ஜமாத் (NTJ) என்ற அமைப்புடன் மேலும் இரண்டு இஸ்லாமிய அமைப்புகளை இலங்க அரசு தடை செய்ததுடன், முகக் கவசங்கள் அணிவதையும் தற்காலிகமாகத் தடைசெய்திருந்தது.

குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு பாதுகாப்பு படைகளையும், பொலிசாரையும் சில இடங்களில் நிலைநிறுத்தியிருந்தாலும், காடையர்கள் முஸ்லிம் மக்களைத் தாக்கும்போது பொலிஸ் பார்த்துக்கொண்டு சும்மா நின்றது என முஸ்லிம் தலைவர்கள் கூறியிருந்தனர்.

மே 12-13 திகதிகளில், ஆளும் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த காடையர்கள், புத்த பிக்குகள் தலைமையில், குருநாகல, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளையும், கடைகளையும், மசூதிகளையும் தாக்கியழித்தனர். ஒரு முஸ்லிம் பொதுமகன் கொல்லப்பட்டார்.

இலங்கை மனித உரிமை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, “வடமேற்கு மாகாணத்திலுள்ள பல நகரங்களில் மசூதிகளையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் அழிப்பதற்கு காடையர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தனர்” எனக் கண்டறியப்பட்டிருந்தது.

ஏப்ரல் மாதம், ஷக்திகா சத்குமார என்னும் பெயருடைய எழுத்தாளர் ஒருவரைப் பொலிஸ் கைது செய்து நான்கு மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைத்திருந்தது. அதற்குக் காரணம் அவர் எழுதிய சிறுகதையொன்று பெளத்த மதத்தை அவமதித்துவிட்டது என புத்த பிக்குகள் சிலர் கொடுத்திருந்த முறைப்பாட்டினால் தான்.கிறிஸ்தவ, முஸ்லிம் மத வழிபாட்டு நிலையங்களைப் பொலிஸ் தொடர்ந்தும் இயங்கவிடாது, அரச சட்ட வரைமுறைகளைக் காரணம் காட்டித் தடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு சட்டங்கள் ஏதும் மீறப்பட்டிருக்கவில்லை.

பொலிஸ், இராணுவம் ஆகியவற்றின் உதவியுடன் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் இடங்களில் பெளத்தர்கள் புத்த கோவில்களைக் கட்டி வருகிறார்கள்.

அவ் வருடத்தில் தேவாலயங்கள் மீது 94 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன என தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி (National Christian Evangelical Alliance) தெரிவித்திருக்கிறது. இதற்கு முதல் வருடத்தில் (2018) 88 சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.

செப்டம்பர் 21 இல் ஆறு கிறிஸ்தவர்கள் தேவாலயத்துக்குப் போகும்போது கிராமத்தவர்களால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஐந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியிருந்தது. சமூகவலைத் தளங்கள் மூலம் சிறுபான்மையருக்கு எதிரான வன்முறைகள் தூண்டிவிடப்பட்டிருந்தன என குடிமைச் சமூகங்கள் தெரிவித்திருந்தன.

மே 15 அன்று, முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவகங்களில், சாப்பாடுகளில் கருத்தடை மருந்துகளைக் கலந்து கொடுப்பதன் மூளம் சிங்களவர்களின் இனப்பெருக்கத்தைக் குறைக்க அவர்கள் முனைகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி, முஸ்லிம்களைக் கல்லெறிந்து கொல்லும்படி ஞானசார தேரோ கேட்டிருந்ததாக ஊடக செய்தியொன்று தெரிவித்திருந்தது.

சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை வலியுறுத்தி, பொதுபல சேனா போன்ற அமைப்புகள் இதர மதச் சிறுபான்மையினரை ஒடுக்குவதும், முஸ்லிம் வியாபார நிலையங்களில் பொருட்களை வாங்க வேண்டாமென்று மேற்கொண்ட எதிர்ப்பியத்தால் பல வியாபார நிலையங்கள் மூடப்பட்டன எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதைக் கண்டித்தும் அதே ஏளை, மக்களை அமைதியாக இருக்கும்படியும், இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தைப் பேணும்படியும், அமெரிக்க தூதுவர் அறிக்கை மூலம் கேட்டிருந்தார். அரசியல் தலைவர்கள் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாத்து இன, மதஙகளுக்கிடையேயான நல்லிணக்கத்தைப் பேணவேண்டுமென்று தூதரக அதிகாரிகள் பலதடவைகள் கேட்டிருந்தனர்.

தூதரக அதிகாரிகள் மதத் தலைவர்களைச் சந்தித்து நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவித்ததுடன், அதைத் தொடர்ந்தும் முன்னெடுக்க அமெரிக்க அரசு தேவையான நிதியையும் ஒதுக்கியிருந்தது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email