இலங்கையில் மக்கள் போராட்டம் மீண்டும் தொடங்கலாம் – சர்வதேச நாணய நிதியம்
2024 இல் தேர்தல்கள் நடைபெற்றால் சமூக அமைதியின்மை மீண்டும் உருவாகி அதனால் இலங்கையின் பொருளாதார மீட்புத் திட்டம் சீர்குலைந்து போவதற்கான சாத்தியம் இருக்கிறது என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்திருக்கிறது.
“சர்வதேச நாணய நிதியத்தின் பொர்ளாதார மீட்புத் திட்டத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான நிதித் தேவையும் கூடவே அதை நடைமுறைப்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களும் அதிகமாகி வந்திருக்கின்றன. சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் வரலாறு மோசமாக இருப்பது, மாறுகின்ற அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் ஆகியனவே இவ்வாபத்திற்கான காரணிகள். எனவே இநிச்சயமின்மையையும் மாறும் சூழ்நிலைகலையும் சமாளிக்கவல்ல தற்காலிக காப்புத் திட்டங்களும் கொள்கைகளும் விழிப்பு நிலையில் இருத்தல் மிகவும் அவசியமானது” என சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு குறிப்பிடுகிறது.
2024 இல் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக அரசாங்க மட்டத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் மீதான ஒருவித சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. எரிபொருள், வலு வழங்கல் துறைகளில் அதிகரித்த வரிகள் மற்றும் செலவு மீட்பு காரணமாக மக்களிடையே ஏற்படும் வருமான வீழ்ச்சி, ஊழலைக் குறைக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை மற்றும் பின்போடப்பட்டுவரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் காரணமாக மக்களிடையே அமைதியின்மை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
வரிக்குறைப்பு மற்றும் நாணயம் அச்சிடுதல் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென நினைத்துச் செயற்பட்ட நிலையிலிருந்து இலங்கை மாறிக்கொண்டு வருகிறது. அதே வேளை இப்படியான காலங்களில் அரசாங்கங்கள் தடம்புரளும் வரலாறுமுண்டு. இக்காலகட்டத்தில் தேசியவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவது வழக்கம். 1920 களில் அமெரிக்க மத்திய வங்கி பரீட்சிக்க ஆரம்பித்த திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக ஜேர்மனியில் பண வீக்கம் அதிகரித்து அதன் தொடர்ச்சியாகவே தேசியவாதிகள் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. இலங்கையில் 1955, 56 காலகட்டத்திலும் இதே போன்ற தேசிய எழுச்சிகள் தோற்றம் கண்டன. இதைத் தொடர்ந்து சில வருடங்களில் இலங்கையிலும் மத்திய வங்கி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக நாணயம் அச்சிடுதல் ஆரம்பிக்கப்பட்டது.
2024 இல் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் காரணமாக தற்போது இலங்கையில் எடுக்கப்பட்டுவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகள் ஸ்தம்பிதமடையக்கூடிய சாத்தியங்கள் உண்டென்பதால் இன்னுமொரு மக்கள் எழுச்சி ஏற்படும் ஆபத்து இருக்கிறது என சர்வதேச நணய நிதியம் எச்சரித்திருக்கிறது.
