Sri Lanka

இலங்கையில் பிறந்த வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடக் குடியுரிமை

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் நிரந்தர வதிவிடப் பிரஜைகளாகுவதற்கு உகந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கேற்ற வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வதிவிடக் குடியுரிமை வசதிகளை அரசாங்கம் செய்துள்ளது.

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் பொதுப் பாதுகாப்பு அமைச்சரால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின்படி வெளிநாடொன்றில் வதியும் இலங்கையில் பிறந்த ஒருவருக்கு அல்லது இன்னுமொரு நாட்டின் பிரஜை ஆகியதால் இலங்கைக் குடியுரிமையை இழந்த ஒருவருக்கு அல்லது இலங்கையில் பிறக்காத இலங்கைப் பிரஜை ஒருவரின் குடும்பத்தினருக்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியுண்டு. இவ்விண்ணப்பத்திற்கான கட்டணம் US$1000 ஆகும். இலங்கைப் பிரஜையின் வெளிநாட்டுக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தலா US$400 கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்குள் வருவதற்கும் அங்கு வதிவதற்கும், கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளைப் பெறுவதற்கும், சட்டப்படியான எந்தவொரு தொழிலில் ஈடுபடுவதற்கும், வியாபாரம் முதலான முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் சொத்துக்களை மாற்றவும், சுவீகாரம் செய்யவும் அல்லது விற்கவும் அனுமதியுண்டு.