EconomySri Lanka

இலங்கையில் பணத்தை இடுகை செய்யுங்கள் – இலங்கை மத்தியவங்கி ஆளுனர்

ஏப்ரல் 02, கொழும்பு: “உங்கள் பணத்தை இலங்கையிலுள்ள நிதி நிறுவனங்களில் இடுகை செய்யுங்கள் ” என இலங்கை மத்தியவங்கி ஆளுனர் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களைக் கேட்டுள்ளார்.

இவ் விடுகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக மந்திரிசபையும் அறிவித்திருக்கிறது.

கொரோனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் இலஙகைக்கு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளை நோய்க்கட்டுப்பாட்டு முயற்சிகளில் அரசாங்கத்தின் செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டு இலங்கையரின் பண வைப்புகள் சிறிதளவு நிவாரணத்தைத் தர வாய்ப்புண்டு.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஸ்மன் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். அட்டியக்கல ஆகியோர் இணைந்து, புலம் பெயர்ந்து வாழும் இலங்கையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கைக்கு உதவி செய்யும் வழியில், வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பிலிருக்கும் பணத்தை இலங்கை வங்கிகே கணக்குகளில் இடுகை செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப் பணத்தை வைப்பிடும்போது அதற்கு அரசினாலோ, மத்திய வாங்கியாலோ அல்லது வேறு எந்த அதிகாரிகளிடமிருந்தோ எந்தவித இடையூறுகளும் ஏற்படமாட்டாது என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

வெளிநாட்டு நாணயத்தில் அனுப்பப்படும் பணத்திற்கு, வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடுகளோ, வரி அறவிடப்படுதலோ இருக்காதென்றும், வங்கியின் இரகசியம் காக்கும் முறைமை இறுக்கமாக நிர்வகிக்கப்படுமெனவும் அவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

“அப்படியான பண வைப்புகள் நாட்டின் கோவிட்-19 பரவலினால் அல்லலுறும் மக்களது நிவாரணத்துக்கும் அதே வேளை நாட்டின் நலிந்துபோகும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மிகவும் உதவியாகவிருக்கும் ” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.