இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா? – எண்ணை ஊற்றும் அரசியல்வாதிகள்
மாயமான்
இலங்கையில் நடைபெற்று முடிந்த இனப்போரின் இறுதிநாட்களில், முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் நடைபெற்ற சம்பவங்கள் சர்வதேசங்களினால் வரையறுக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ என்ற வரைவுக்குட்படுகிறதா என்ற விவாதம் இலங்கைக்கு வெளியிலும் பலவித மேடைகளிலும் ஏறி இறங்குகிறது. இவ்விவாதத்திற்கு இதுவரை எவரும் உறுதியான தீர்ப்பொன்றை வழங்குவதற்கு அஞ்சுகிறார்கள் என்றாலும் அது அடிக்கடி சர்வதேச அரங்கங்களில் ஏறி இறங்குவது ஒருவகையில் இறந்த, இருக்கின்ற தமிழர்களுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்.
கனடாவில் இவ்விடயத்தைப் பற்றித் தமிழர்களை விட அதிகமாக நினைவுக்குக் கொண்டுவருபவர் ஒரு தமிழரல்லாத மத்திய கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் கெளரவ கார்ணெட் ஜெனியஸ் அவர்கள். தமிழர்கள் அதிகம் வாழாத சஸ்கச்செவன் மாகாணத்தில் உள்ள ஷேர்வூட் பார்க் என்ற தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் மிக நீண்டகாலமாகத் தமிழர் சார்பில் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருபவர். தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சர்வதேச அபிவிருத்தி நிழலமைச்சராக இருக்கும் இவர் கடந்த வாரம் ஆளும் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் தற்போதைய ஐ.நா.வுக்கான கனடிய தூதுவராக இருப்பவருமான பொப் றேயை விவாதத்துக்கு அழைத்து வென்றிருக்கிறார். இதனால் லிபரல் கட்சி தலையில் முக்காட்டைப் போடவேண்டி ஏற்படலாம். இது தேர்தல் காலம் இல்லையென்றபடியால் கொஞ்சம் வாய்ப்பாகப் போய்விட்டது.
‘இனப்படுகொலை’ என்பது ‘தலைமை வாத்தியாரால்’, அவர் விரும்பினால், விருப்பமில்லதவர் மீது மட்டும் பாவிக்கப்படும் ஒரு பிரம்பு. அது இலங்கையின் மீது விழுவதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. ஆனால் சமீபத்தில் முள்ளிவாய்க்காலை விட முப்பதாயிரம் மடங்கு குறைவான உயிரழிவுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் யூக்கிரெய்ன் களத்தில் ரஸ்யாவினால் நடத்தப்பட்டது போர்க்குற்றம் எனத் ‘தலைமை வாத்தியார்’ கூறியதும் அதைக் கனடா உடபட மற்ற வாத்திமாரும் கைதட்டி வரவேற்றதும் நமது பா.உ. கார்னெட் ஜெனியஸைக் கொஞ்சம் உசுப்பிவிட்டிருக்கவேண்டும். அவர் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஆளும் லிபரல் கட்சியை மீண்டும் வம்புக்கு இழுத்துவிட்டார். மாட்டுப்பட்டவர் பொப் றே.
நடந்தது இதுதான்-சுருக்கமாக- லிபரல் கட்சியினால் நியமிக்கப்பட்ட ஐ.நா. வின் தூதுவரான பொப் றேயிடம் ஜெனியஸ் இப்படிக் கேட்டார். ” திரு றே அவர்களே இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என உங்களது லிபரல் அரசாங்கம் எப்போதாவது உறுதிசெய்திருக்கிறதா?” இதற்குப் பதிலளித்த பொப் றே அவர்கள் ஒருமுறை ஆடிப்போய்விட்டதாகவே என்னால் பார்க்க முடிந்தது. உறுப்பினர் ஜெனியஸ் கேள்வியைத் திருத்தி நேரடியாக் கேட்பதாகக் கூறி ‘நெத்தியடியான கேள்வியாக’ அதை மீண்டும் கேட்டார். பொதுவாக வார்த்தைகளை நேர்த்தியாகப் பாவித்துப் பேசும் ஒரு Rhodes Scholar ஆன பொப் றே தன்னைச் சுதாரித்துக்கொண்டு “எனக்குத் தெரிந்தவரையில் அப்படியில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் லிபரல் அரசு இனபபடுகொலை என்ற வார்த்தைகளைப் பாவித்திருக்கிறது. ஆனால் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்று லிபரல் அரசு தீர்க்கமாகக் கூறியதாக எனக்குத் தெரியாது” எனக் கூறினார்.
இந்த் விவாதத்தில் யார் வென்றார் என்பதில் எனக்கு ஆர்வமில்லை. கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே கேள்வி வேறு யாரிடமிருந்தோ ஏதாவது ஒரு வடிவத்தில் வரும் அதற்குரிய மறுமொழியும் எமக்குப் பரிச்சயமான இன்னுமொரு வடிவத்தில் இருக்கும் என்பதை இப்போதே கூறிவிட முடியும். ‘தலைமை வாத்தியாரையும்’ மீறி இலங்கை குழப்படி விட்டால் மட்டுமே கனடிய பாராளுமன்றத்தில் அது ஒரு ‘இனப்படுகொலை’ என்று ஓங்கி ஒலிக்கும். ஆனாலும் இந்த விவாதம் சில கிசு கிசுக்களைத் தமிழர் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. அது ஒருவகையில் local politics.
சில மாதங்களுக்கு முன்னால் தமிழரும், ஸ்காபரோ ரூஜ்பார்க் பாராளுமன்ற உறுப்பினருமான கெரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடிய பாராளுமன்றத்தில் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை முதன் முதலாகச் செய்திருந்தார். அவர் முதன் முதலாக இத் தொகுதியில் தேர்தலுக்கு நின்றபோது இவ்வார்த்தைப் பிரயோகத்தைச் செய்யவில்லை என்பதும் அதனால் தமிழ் உணர்வாளர்கள் பொங்கியெழுந்திருந்தார்கள் என்பதும் மறைக்கப்படமுடியாத ஒன்று. எனவே இரண்டு தவணைகள் முடிந்து தமிழர்களின் ஆதரவின்றியே தேர்தலில் வெல்லக்கூடிய சாத்தியங்கள் இருக்கும்போதும் அவர் ‘இனப்படுகொலை’யைப் பாராளுமன்ற அரங்கில் ஒலித்தது உணர்வாளர் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் மூலம் லிபரல் அரசாங்கம் ‘இனப்படுகொலை’ப் பிரகடனத்திலிருந்து நாசூக்காக நழுவிக்கொண்டிருந்தது என்பதை உணர்வாளர் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள். ஜெனியஸோ அதை விடுவதாக இல்லை. லிபரல் அரசாங்கம் அதிப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்யவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறார்.
பொப் றேயின் பதிலில் அவரது நழுவல் தன்மையும், லிபரல் அரசாங்கத்தை இக்கட்டில் கொண்டுவருவதைத் தவிர்க்க முயல்வதும் இலகுவாகப் பிடிபட்டுவிடுகிறது. ” இனப்படுகொலை’ என்பது இரண்டு அரசுகளுக்கிடையில் (state actors) சர்வதேச நீதிமன்றத்தில் செய்யப்படவேண்டிய அங்கீகாரம்” என அவர் பதிலளித்திருப்பது அவசியமற்ற அதிகப்பிரசங்கித் தனம். ‘இனப்படுகொலை’ பற்றிய வரைவிலக்கணத்தை ஜெனிவா ஒப்பந்தம் தெளிவாக முன்வைக்கிறது. அதன்படி பார்த்தால் இதுவரை நடைபெற்ற இனக்கலவரங்கள் எல்லாமே ‘இனப்படுகொலை’ என்ற வரைவுக்குள் அடக்கப்படவேண்டியவை. GPS cordinates சுட்டிகளால் குறியிடப்பட்டு ‘பாதுகாப்பு வலயம்’ என அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மீது குண்டுகளை வீசி அப்பாவித்தமிழ் மக்களைக் கொன்றது – அந்த இடத்தில் குழுமி நின்றவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மட்டுமே – இக்கொலைகள் ஏவப்பட்டன. எனவே அது ஒரு இனப்படுகொலை என இலகுவாக வரைவு கொள்ளமுடியும். ஆனால் ‘தலைமை வாத்தியார்’ அதை ஏற்றுக்கொள்ளவில்லையே. யூக்கிரெய்ன் விடயத்தில் அவர் எந்தவித தயக்கமின்றி உடனேயே பிரகடனம் செய்துவிட்டார். இந்த வேளையில் ஜெனியஸ் போன்றோர் ‘இனப்படுகொலை’ விடயத்தை எடுப்பது மட்டுமல்லாது அதை மறைமுகமாகவேனும் யூக்கிரெய்னுடன் ஒப்பிட்டுப் பேசுவதன் மூலம் பலத்த எதிர்ப்பைச் சம்பாதிக்கவும் கூடும். அப்படியிருந்தும் அவர் அதைத் துணிச்சலாகச் செய்திருக்கிறார். அவர் ஸ்காபரோவிலோ அல்லது மார்க்கத்திலோ வாழ்பவராக இருந்தால் அது ஒரு political stunt என ஒதுக்கி விடலாம். அவரது தொகுதி சஸ்கச்செவனில் இருக்கிறது.
தமிழர் விடயத்தில் கனடாவினால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே. அதனால் லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சிகளிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் முள்ளிவாய்க்கால் அநியாயங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நீதி கிடைக்கும்வரை அந்த விளக்கு எரிந்துகொண்டுதான் இருக்க வேண்டும். அதற்கு எண்ணை ஊற்றுபவர்கள் ஆனந்தசங்கரியாக இருந்தாலென்ன ஜெனியஸாக இருந்தாலென்ன அரசியலை ஒதுக்கிவிட்டு அவர்களை ஆதரிக்க நான் தயார்.