இலங்கையில் தேர்தல்கள் | தமிழ் மக்களின் தேர்வு விவேகமானதாகவே இருக்கும்


தலையங்கம்

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. தேர்தல் ஒழுங்காக நடைபெற்றால் ராஜபக்சக்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான சாத்தியங்கள் குறைவெனவே நாட்டு நிலைமைகள் தெரிவிக்கின்றன.

கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் சலிப்படைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குப் பணிநிமித்தம் சென்றவர்கள் பலர் ஊதியமுமின்றி, திரும்பவும் முடியாமல் சிக்கிப் போயிருப்பது பல வாக்காள குடும்பங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

உள்நாட்டில் பொதுச் சுகாதார சேவைகளிலுள்ள பணியாளர்கள் போன்ற பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். உணவுப் பண்டங்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. கிராமிய விவசாயிகளுக்கு உரம் விலை குறைக்கப்படுமெனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இவையெல்லாம் ராஜபக்சக்களுக்கு எதிராகத் திரும்பப்போகும் வாக்குகளல்ல. மாறாக, வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கப்போகும் வாக்குகள்.

பாராளுமன்றம் இல்லாது நிறைவேற்று அதிகாரம், சர்வ அதிகாரமாக கோதாபயவின் கைகளில் சிக்கியிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கிறது. உலகம் முழுவதுமே அப்படித்தான் என மக்கள் மன்னிக்கலாம். ஆனால் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நிலைமைகளை விவாதித்து திட்டங்களை நிறைவேற்ற நிறைவேற்று அதிகாரம் தயாரில்லை.

“ஜனாதிபதியின் கைகளில் அரசியலமைப்பு விலங்கு போட்டுள்ளமையே அரசாங்கத்தின் இயலாமைக்குக் காரணம்” என ராஜபக்சக்களின் பிரசாரப் பீரங்கிகள் முழங்குகின்றன. எதிர்க்கட்சிகளில் வாய் பேசக்கூடிய, சம்பிக்க, ராஜித போன்ற சிலர் மெளனிக்கப்பட்ட நிலையில், ‘சுய தனிமைப்படுத்தலில்’ சஜித் பிரேமதாச இணக்க அரசியலுக்காக ராஜபக்சக்களின் கைகளை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. ஐ.தே.கட்சி அடுத்த தலைமையின் கீழ் பார்த்துக்கொள்வோம் என விடுமுறை எடுத்துக்கொண்டிருக்கிறது.

ராஜபக்சக்களின் பொய்ப் பிரசாரங்களிலும், வார்த்தை ஜாலங்களிலும், நடிப்புக்களிலும் மக்கள் நம்பி, மஹாசங்கங்களின் வற்புறுத்தலுக்கு மறுக்க முடியாமல், இராணுவத்தின் உதவிகளுடன் வாக்குச் சாவடிகளுக்கு வருவார்களேயானால் கோதாபயவின் விலங்கு உடைபட வாய்ப்புண்டு. இதனால் அரும்பாடுபட்டு உருவாக்கிய 19 வது திருத்தம் 20 தினால் அடித்துச் செல்லப்படும். கவசமென்று நினைத்திருந்த நீதிமன்றம் ஏற்கெனவே தடம் புரண்டுவிட்ட நிலையில், இலங்கையைக் கடவுள் தான் காப்ப்பாற்ற வேண்டி ஏற்படப்போகிறது.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இரவோடு இரவாகப் பேரம் பேசுதல் ஆரம்பிக்கும். கோதாபயவின் வருகையோடு வருமானம் வற்றிக் கிடக்கும் ஊழல் அரசியல்வாதிகள் முக்காடுகளோடு அலைவார்கள். சீனத் தூதரகத்தில் இரவிரவாக விளக்குகள் எரியப்போகின்றன.

கற்றவர்கள், ஜனநாயகக் காவலர்கள், ராஜபக்சக்களின் ரிஷிமூலம் தெரிந்தவர்கள் அக்கறைப் படுகிறார்கள். மங்கள சமரவீர ஓய்வெடுத்துக்கொள்ளும் நிலையில் மேற்கு நாடுகளின் திட்டங்களைச் செயற்படுத்த வலுவான சக்திகள் களத்தில் இல்லை.

இந்தியாவுக்கும் இதே நிலை தான். சீனாவின் பட்டு வீதித் திட்டத்தின் மாற்றுத் திட்டமாக அயல் நாடுகளோடு நல்லுறவுகளைப் பேணுவது என்பதில் இந்தியா பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான் என்று பல நாடுகளுக்கும் சீனா வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறது. இலங்கை பணத்துக்காகவும், பயத்துக்காகவுமே இந்திய சார்பென நடிக்கிறதே தவிர விசுவாசமான அயலுறவு அங்கில்லை என்பதை மோடி அரசு உணர்வதாக இல்லை.

இலங்கையில் தலையிடுவதற்கான ஒரே ஒரு காரணம் தமிழர் பிரச்சினை தான். அதற்கான ஒரே ஒரு தொடுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான். ஆனால் சமீப காலங்களில் கூட்டமைப்பின் மீது மோடி அரசு அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மாற்றுத் தலைமைகள் அல்லது பேசக்கூடிய அந்தஸ்துள்ளவர்கள் என்று எவரும் இல்லாத நிலையில் தமிழ் மக்கள் இந்தியாவை நம்பியிருப்பதால், இப்போதைக்குப் பிரயோசனம் எதுவும் இல்லை. இந்தியாவோ அல்லது மேற்கு நாடுகளோ ஜனநாயக முறையில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவர்களோடோ அல்லது பலமான குடிமைச் சமூகம் (Civil Society) ஒன்றுடனோதான் பேச முனைவார்கள். பிஷப் ராயப்பு இல்லாமல் குடிமைச் சமூகமும் இல்லாமற் போய்விட்டது. எனவே பலமான தமிழ் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு இத் தேர்தலில் பாராளுமன்றத்திற்குப் போக வேண்டும். இப்போதுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தான் அந்தப் பலம் இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது முன்னெப்போதும் இல்லாத விமர்சனம் இருக்கிறது என்ற தோற்றப்பாடு இருக்கிறது. சமூக வலைத் தளங்கள் திறந்து விட்ட பொது வெளி அகன்றிருக்கிறது. பொறுப்பற்ற, கட்டற்ற கருத்துக்களும் விமர்சனங்களும் பொதுமகனை இலகுவாக வந்தடைகின்றன. இந்த சமூக ஊடகத்தின் proliferation சகல அரசியல்வாதிகள் மீதும் சேறுகளை அள்ளி வீச வாய்ப்பளித்திருக்கிறது. முன்னய காலங்களில் வானொலிகளும் அச்சூடகங்களும் மட்டுமே இதைச் செய்தன.

அதற்காக கூட்டமைப்பிலுள்ளவர்கள் புனிதர்கள் என்பதல்ல. இப்போதுள்ள நிலையில், ஏனைய கட்சிகளிலுள்ளவர்களை விட கூட்டமைப்பில் பல ஆளுமைகள் இருக்கின்றார்கள். சிறந்த தலைமை இருக்கிறது. முன்னேறுவதற்கு நிறைய இடமுண்டு. ஆனாலும், by default, கூட்டமைப்பே தமிழ் மக்களுக்குரிய ஒரே தேர்வு.தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் ஆயுத வடிவம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டது (அது மெளனிக்கப்பட்டிருக்கிறது எனக் கூறுபவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் பிழைப்புவாதிகள்) ஆனால் அது தோற்கடிக்கப்பட்ட விதம், தமிழர்களுக்கு இலங்கை அரசும், சர்வதேசங்களும், ஐ.நா.வும் சேர்ந்து இழைத்த கொடுமைகள், ஆகியவற்றுக்கான பரிகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அதற்கான போராட்டம் தொடரத்தான் வேண்டும். வடிவம் எப்படியிருக்கும் என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும். அதுவரை அது அணைந்து போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வல்லமை இப்போதைக்கு கூட்டமைப்பிடம் மட்டும்தானுண்டு. ராஜபக்சக்களின் அராஜக அரசாங்கத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்கொள்ளக்கூடிய ஆளுமை கூட்டமைப்பிடம் மட்டும்தான் உண்டு.

ஈழத்தமிழ் மக்கள் அநேகமான அரசியல்வாதிகளைவிட விவேகமானவர்கள். பல தேர்தல்களில் அவர்கள் தெளிவான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள். இம் முறையும் அவர்களது நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உள்ளூர் நிலைமைகளைப் பிரதிபலிக்குமென்றே நம்புகிறோம். அவர்களின் தீர்ப்பு சரியானதாகவே இருக்கும்.

****