இலங்கையில் திலீபன் நினைவுநாளை அமைதியான முறையில் நடத்துவதற்கு உதவி செய்க! – ஐ.நா. விடம் நா.க.த.அரசு கோரிக்கை
திலீபன் நினைவுநாளை இலங்கையில் அமைதியான முறையில் நடத்துவதற்கு உதவியைக் கோரி, ஐ.நா.சபையின், அமைதியான கூடலுக்கான சுதந்திரத்திற்கும், கருத்துக்களைத் தெரிவிக்கும் சுதந்திரத்துக்கும் பொறுப்பான விசேட அறிக்கையாளருக்கு, நாடுகடந்த தமிழீழ அரசு அவசர கோரிக்கையொன்றை அனுப்பியிருக்கிறது.
இலங்கையில், பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்கி, பல மாஜிஸ்திரேட்டுகள் திலீபன் நினைவுநாளை அனுட்டிப்பதைத் தடை செய்ததை அடுத்து நா.க.த.அரசு இக் கோரிக்கையை விடுத்திருக்கிறது.
தமிழர் பிரதேசங்களில் அரசு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதைத் எதிர்த்து, திலீபன் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்தார்.
இத் தடையை நீக்கும்படி கோரி, இரண்டு நாட்களுக்கு முன்னர், அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஜனாதிபதி ராஜபக்சவுக்குக் கடிதம் எழுதியிருந்தன. ” இத் தடை, எமது மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மழுங்கடித்து, அவர்கள் மனங்களில் தீராத வலியை ஏற்படுத்துகிறது” என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நா.க.த. அரசின் வேண்டுகோள், ‘குளோபல் டிலிஜென்ஸ்’ (Global Diligence LLP) என்ற சர்வதேச மனித உரிமைகள், சட்ட நிறுவனத்தால் ஐ.நா.சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights (“ICCPR”)) 21 வது சரத்தின் பிரகாரம், அமைதியான கூடல் என்பது பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டி, இவ் விடயத்தில் ஐ.நா.வின் உடனடியான நடவடிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசு வலியுறுத்தியிருக்கிறது.