இலங்கையில் தமிழ் மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளைச் செய்ய தமிழ்நாடு தயார் – முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அறிவிப்பு!
பொருளாதாரச் சீரழிவால் பாதிக்கபட்ட வட, கிழக்கு, மலையகத் தமிழர் நலன் குறித்து வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் முதல்வர் உரையாடல்
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தயாராகவுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய தூதரகத்தின் மூலம் இப்பொருட்களை விநியோகிக்க அனுமதி கேட்டு முதல்வர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் நேற்று (07) பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தியுள்ளார்.
அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஆகியவற்றைத் தூத்துக்குடி துறைமுகத்தினூடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசின் அனுமதையைக் கோரி அவர் வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மூலம் இப் பொருட்களின் விநியோகத்தைச் செய்யமுடியுமென முதல்வர் பரிந்துரைத்துள்ளாகத் தெரிகிறது.
அத்தோடு தமிழ்நாடு மீனவர் விவகாரம் தொடர்பாகவும் முதல்வர் வெளிவிவகார அமைச்சருடன் உரையாடியதாகவும் இது தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் பதிலளித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.