Sri LankaUS & Canada

இலங்கையில் கோவிட்-19 நோயினாற் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு கனடா நிதி உதவி

Media release

கொழும்பு, ஏப்ரல் 23, 2020: இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு நிவாரண உதவிகளை வழங்க கனடா முன்வந்திருக்கிறது. இதற்காக அது $56,000 கனடிய டாலர்களை (LKR 7.5 மில்லியன்) நிதி ஒதுக்கீட்டைச் செய்திருக்கிறது. உள் நாட்டு முயற்சிகளுக்கான கனடா நிதி ( Canada Fund for Local Initiatives -CFLI ) என்னும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதி, இலங்கையிலுள்ள தேசிய சமாதான சபை (National Peace Council ) மூலமாக நிர்வகிக்கப்படவிருக்கிறது.

இலங்கையிலுள்ள தேசிய சமாதான சபை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கோவிட் -19 பணிக்குழுவின் (Covid -19 Task Force ) சிவில் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. மாவட்ட ரீதியாக , தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள், மத நல்லிணக்க அமைப்புகள் ஆகியவற்றுடன் செயற்பாட்டுறவை ஏற்படுத்தியிருக்கும் தேசிய சமாதான சபை, இலங்கை முழுவதும் உலருணவுப் பொதிகளை வழங்கும். ஊரடங்கு உத்தரவும், நடமாட்டத் தடையும் பலரது இயல்பு வாழ்வுக்குப் பெரும் சவாலாக அமைவதனால் அதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத், தேசிய சமாதான சபை நிவாரண உதவிகளை வழங்கவுள்ளது.

இது பற்றிக் குறிப்பிட்ட இலங்கைக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கின்னன் ” உலகம் முன்னெப்போதுமில்லாத நெருக்கடியில் மூழ்கியிருக்கும்போது, இடர் தீர்க்கவெனத் திடசங்கற்பம் பூண்டு புறப்பட்டிருக்கும் தனிப்பட்டவர்கள், அமைப்புகள், பலபடி அரச அங்கங்கள் ஆகியவற்றைக் கண்டு என் மனம் புளகாங்கிதமடைகிறது” எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சமூகங்கள் இவ் வியாதியையும், அதனால் ஏற்பட்ட மோசமான பொருளாதாரத் தாக்கத்தையும் எதிர்கொள்ள, கனடாவின் இந்த ஆதரவு வழி செய்யுமெனத் தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். ” தேசிய சமாதான சபையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், நாடெங்கிலுமுள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை இனம் கண்டு உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்ய முடியுமென்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என மக்கின்னன் தெரிவித்தார்.

கோவிட்-19 கொள்ளை நோய்க்கெதிரான போரின் ஒரு அங்கமாகவும், சமூகத்தில் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம், இன, மத சமூகங்களிடையேயான நல்லிணக்கத்தை உறுதியாக்குவதில் தொடர்ந்து உழைப்பதற்கும் , இவ்வுலருணவு விநியோக முயற்சிகள், எழுந்துள்ள நெருக்கடிகளைத் தணிக்க உதவியாகவிருக்கும். அரச அதிகாரிகள் மற்றும் பங்காளி அமைப்புக்களின் உதவியுடன் இனம் காணப்பட்ட, பாதிக்கப்பட்ட தணிப்பட்டவர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தேசிய சமாதான சபை இவ்வுலருணவுகளை வழங்கும். மாற்றுத் திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அநாதை இல்லங்கள், நெடுநாட் பராமரிப்பு இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியனவும் இவற்றுள் அடங்கும்.

“இத்தருணத்தில் இனங்கள், மதங்கள், பிரதேசங்கள், நாடுகள் ஆகியவற்றைக் கடந்து மக்களுக்கிடையேயான ஒற்றுமை அவசியம். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கனடிய நிவாரண உதவி முயற்சிகளுடன் எங்களையும் இணைத்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என தேசிய சமாதான சபையின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

இப்படியான நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவது, இன, மத வேறுபாடுகளைக் கடந்து எதிர்காலத்தில் ஒற்றுமையாக வாழ்வதற்கான நல்லிணக்க முயற்சிகளை மேலும் உறுதியாக்கும். எப்போதும் போலவே, செழிப்பான, ஆரோக்கியமான, எல்லோரையும் உள்ளடக்கிய இலங்கையை உருவாக்குவதற்காக உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவது கனடாவுக்கும் பெருமை சேர்க்கிறது.

உள்ளூர் முயற்சிகளுக்கான கனடிய நிதி (CFLI) பற்றிய மேலதிக தகவல்களுக்கு பின் வரும் தொடுப்பை அழுத்தவும்:
;click here.

கோவிட்-19 தொடர்பான நிதியுதவியைப் பெற விரும்பும் அமைப்புக்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் தகமையறிதல் பற்றிய விபரங்களுக்கு, பின்வரும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: CFLIColombo@international.gc.ca

கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்பான மருத்துவத் தேவைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட மாட்டாது என்பதை இப்போதே அறியத் தருகிறோம்.

இலங்கைக்கான கனடியத் தூதுவர் அலுவலகம்.

High Commission of Canada
33A, 5th Lane, Colombo 3