இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தை மீளாய்வு செய்ய ஐ.நா. நிபுணர்கள் குழு தயார்!

Spread the love

பெப்ரவரி 10, 2020

பெப்ரவரி 10-14 வரையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.வின் 120 வது அமர்வின்போது, இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களை மீளாய்வதற்கு ஐ.நா. செயற்குழுவொண்று முடிவெடுத்துள்ளது.

ஐந்து சுயாதீனமான அங்கத்தவர்களைக் கொண்ட இக் குழு, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள், குடிமைச் சமூகங்களின் (civil societies) பிரதிநிதிகள் மற்றும் இவ்விடயங்களில் உரித்துடையவர்களுடன் (stakeholders) சந்திப்புக்களை மேற்கொண்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஐ.நா.வின் பிரகடனத்தை .(Declaration on the Protection of All Persons from Enforced Disappearance) அமுற்படுத்துவதில் அரச நிர்வாகத்தின் அசமந்தப் போக்குகள், சட்டமயமாக்கப்பட்ட தடங்கல்கள், செயற்பாடுகள் குறித்துப் பெறப்பட்ட தகவல்களையும் இந்த நிபுணர்கள் குழு ஆராயும்.

அரச மற்றும் குழுக்கள் சம்பந்தப்பட்ட காணாமலாக்கப்பட்ட விடயங்கழும் இக் குழுவினால் பரிசீலிக்கப்படும்.

இக் குழுவின் 40 வது வருட நிறைவைக் கொண்டாடுமுகமாக, பெப்ரவரி 14 ம் திகதி, பலே டெ நாஷன்ஸ் அறை IX இல், காலை 11 மணிக்கு, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், உரித்துக்காரருக்கும் ஒரு காணொளி தகவற்பரிமாற்ற நிகழ்வொன்றும் இடம்பெறும். இதைத் தொடர்ந்து, 1 மணியளவில், அறை இலக்கம் 3 இல் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெறும்.

இச் செயற்குழுவின் இதர விடயங்கள் பிரத்தியேக சந்திப்பின் மூலம் பரிமாறப்படும்.

இந்த நிபுணர் குழுவில், உலகின் பல பாகங்களிலுமிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இடம்பெறுகிறார்கள். இக் குழுவின் தலைவராக ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த லூச்ச்சியானோ ஹசான் இருப்பார். உபதலைவராக தென் கொரியாவைச் சேர்ந்த டே-உங் பைக் செயற்படுவார். மற்றும் மொரோக்கோவைச் சேர்ந்த ஹுரியா எஸ்-ஸ்லாமி, கனடாவைச் சேர்ந்த பேர்னார்ட் டூஹெய்ம், லிதுவேனியாவைச் சேர்ந்த ஹென்றிக்காஸ் மிக்கேவிசியஸ் ஆகியோர் அங்கத்தவர்களாக இருப்பர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>