இலங்கையில் கன மழை | பல்லாயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு -

இலங்கையில் கன மழை | பல்லாயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு

Spread the love
வடக்கு கிழக்கில் பாதிப்பு அதிகம்!

டிசம்பர் 7, 2019

வடக்கு கிழக்கில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயரவேண்டி ஏற்பட்டுள்ளதென பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 79,000 க்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 798 குடும்பங்களைச் சேர்ந்த 2,507 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பேரிடர் மையம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் அவர்களது அறிக்கையின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,019 குடும்பங்களைச் சேர்ந்த 51,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 2,303 பேர் 15 முகாம்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிகிறது.

மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவென 16.6 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுவதாக மாவட்டச் செயலகம் பேரிடர் மையத்திடம் கேட்டிருந்தது.

இருப்பினும், முகாம்களில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களுக்கும், உறவினருடன் தங்கியிருப்பவர்களுக்கும் உலருணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக அரசு 1.7 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.

அதே வேளை வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் 64,448 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். இவர்களில் 2,611 குடும்பங்களிலிருந்து 8,478 பேர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 56 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டவையாகும். கிளிநொச்சியில் 23,344 பேர் பாதிக்கப்பட்டும், 6,090 இடம்பெயர்ந்துமுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 30,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள்.

நாட்டில் மொத்தமாக 70,000 குடும்பங்களைச் சேர்ந்த 235,906 பேர் பாதிக்கப்பட்டும் 4,083 குடும்பங்களைச் சேர்ந்த 13,310 பேர் இடம்பெயர்க்கப்பட்டுமுள்ளனர்.

பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுகின்றன என நீர்ப்பாசனப் பணிப்பாளர் ரிஜே. மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார். அனுராதபுரம், ராஜன்கணைய, அங்கமுவ குளங்களின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், திஸ்ச வீவ, அபய வீவ மற்றும் மஹாவிளாச்சிய குளங்கள் ஏற்கெனெவே நிரம்பி வழிகின்றன.

மஹாவலி ஆற்றின் கரையோரக் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதிப் புனித தலம் 8 அடி நீரில் அமிழ்ந்துள்ளது. யானைகள் பல கோவில் மேடுகளில் தஞ்சம் புகுந்துள்ளன. புத்த மிக்குகளுக்கு ஓடங்களில் உணவு வழங்கப்படுகிறது.

மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதென அறியப்படுகிறது.

நாடு முழுவதும், குறிப்பாக வட, வட மத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் முழுவதும் மழை தொடருமென காலநிலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, நீர்கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசந்துறை ஆகிய கரையோரப்பகுதிகளில் கடலில் அலை அதிகமாகவிருக்குமெனவும் காற்றின் வேகம் 50-55 கி.மீ. வேகத்தில் கானப்படலாமெனவும் காலநிலைத் திணைக்களம் எச்சரிக்கிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *