இலங்கையில் கடும் மழையால் 10 பேர் உயிரிழப்பு – பல மாட்டங்களில் மண் சரிவு, ஆறுகள் பெருக்கெடுக்கும் நிலை

  • 8 மாவட்டங்களைச் சேர்ந்த 220,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • 55,000 குடும்பங்கள் நிர்க்கதி
  • 5375 பேர் 67 இடைத் தங்கல் முகாம்களில் தஞ்சம்
  • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மண்சரிவால் மரணம்
  • புத்தளம், களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிப்பு

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 197.5 மி.மீ மழை பெய்துள்ளது எனவும் இதனால் 8 மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அறியப்படுகிறது. இதே வேளை, காலநிலை மேலும் மோசமாகலாமென காலநிலைத் திணைக்களம் எச்சரித்துள்ளது. களனி கங்கையில் நீர்மட்டம் அதிகரித்ததால் சீதாவாக்க, கடுவளை, பியகம, கொலன்னாவ, களனி, கொழும்பு மற்றும் இவற்றை அண்மித்த பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதென நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களு, அத்தனகல, மா ஒயாக்களில் நீர் ஏற்கெனவே நிரம்பி வழிகின்றது.

கேகாலையில் 197.5 மி.மீ, மொரலிய ஓயாவில், 188.2 மி.மீ., வொகன்வதுயாயவில் 165.4 மி.மீ., நீர் கொழும்பில் 156.2 மி.மீ. என மழை வீழ்ச்சிகள் பதிவாகியுள்ளன.

மேலும், 5,375 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை, மாத்தளை, மாத்தறை, ரத்தினபுரி, நுவர எலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயங்கள் இருப்பத்தாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.