Spread the love

இலங்கையில் கோவிட்-19 தொற்று அதி வேகமாகப் பரவி வருகிறது எனவும், நேற்றய (23) ஒரு நாட் தொற்று எண்ணிக்கை 865 எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பு, மருதானை, தெமட்டக்கொடை, பையாகல, பேருவளை, அளுத்கம ஆகிய இடங்களில் ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போதய தொற்றுப் பரவல் பேலியகொட மீன் சந்தையிலிருந்து ஆரம்பித்துள்ளதெனவும், கடந்த சில நாட்களில் இச் சந்தைக்குச் சென்றவர்கள் அண்மையிலுள்ள பொதுச் சுகாதார அதிகாரியைத் தொடர்புகொள்ளும்படியும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

சென்ற வாரம், இம் மீன்சந்தைக்குச் சென்றவர்களில் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனிக்குட்படுத்தப்பட்டனர் எனவும் அவர்களோடு தொடர்புடையவர்கள் பலர் இன்னமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் எனவும் அறியப்படுகிறது. இது தொடர்பாகப் பல மீன்பிடித் துறைமுகங்கள் நேற்று மூடப்பட்டன.

சுகாதார அமைச்சின் கணிப்பின்படி உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நாட் தொற்று 866 எனவும், இதுவே இதுவரையில் அறிவிக்கப்பட்ட அதியுச்ச ஒருநாட் தொற்று எனவும் கூறப்படுகிறது. இத்துடன், நாட்டின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 7,156 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கேகாலை, கொழும்பு, குருநாகலை ஆகிய மாவட்டங்களில் இதுவரை, 35 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதே வேளை, கொறோனாத் தொற்றுக் கட்டுப்பாட்டில் இலங்கை உலக நாடுகளிலேயே முதலிடம் வகிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

“கொரோணாவை ஒழித்துக்கட்டுவதில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவைப் போல் அர்ப்பணிப்பாகச் செயற்படும் தலைவர்கள் எவருமில்லை” என அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email