இலங்கையில் இன்று முதல் பொதுமுடக்கம் பிரகடனம்

இன்று (ஆகஸ்ட் 20) முதல் ஆகஸ்ட 30 வரை இலங்கையில் பொது முடக்கம் ஒன்றை அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. தினமும் இரவு 10 ம்ணி முதல் அதிகாலை 4 மணி வரை இப் பொதுமுடக்கம் நடைமுறையிலிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மஹாநயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஜனாதிபதி இந்த முடிவை எடுக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்னா ஜயசுமன ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

நாட்டின் நிலைமையை அவதானித்து, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கிணங்கி பொதுமுடக்கமொன்றை அறிவிக்கும்படி மல்வத்து பீடாதிபதி வண. திப்பாட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்களபித்தன தேரர் மற்றும் அஸ்கிரிய பீடாதிபதி வண. தம்மசித்தி சிறி பகானந்த தேரர் ஆகியோர் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர். அதே வேளை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் பொதுமுடக்கமொன்றை அறிவிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தன.

இதற்கிணங்க மேற்படி பொதுமுடக்கத்தை சுகாதார சேவைகள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். இப் பொதுமுடக்கத்தின்போது அவசரகால சேவைகள் என அறிவிக்கப்பட்ட அனைத்தும் தடைகளின்றி நடைமுறையிலிருக்கும் எனவும் மக்கள் இப் பொதுமுடக்கத்தின்போது கட்டுப்பாடுகளை மீறி நடக்க நேர்ந்தால் இப் பொதுமுடக்கம் மேலும் நீடிக்கப்பட வாய்ப்புண்டு எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இன்றய நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,000 த்தைத் தாண்டியும், இறந்தவர்களின் எண்ணிக்கை 190 ஐ எட்டியும் உள்ளது.