இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனம் – வெள்ளி (06) நள்ளிரவு முதல்
நேற்று பாராளுமன்ற முன்றலில் இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைகளைப் பிரயோகித்தததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து ஜனாதிபதியால் நாடு தழுவிய ரீதியில் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி (06) நள்ளிரவு முதல் இச் சட்டம் நடைமுறைக்கு வருமென ஜநாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டும், பண்டங்கள், சேவைகள் வழங்கல் நிர்வாகம் சீராக இருக்கவேண்டுமென்பதற்காகவும் இப் பிரகடனத்தைச் செய்வதாக ஜநாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இதே வேளை பாராளுமன்றத்திலிருந்து வெளிவரும் வேளையில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்ட மாணவர்களின் கோபத்துக்கும், வாய்த்தர்க்கத்துமுள்ளாகியதாக அறியப்படுகிறது. ‘ஹொறுகோகம’ எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வார்ப்பாட்டக் களத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக இன்று மாலை பொலிசார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை ஆகியவற்றைப் பிரயோகித்தனர். அதையும் மீறி மாணவர்கள் பொலிசாரின் இரண்டு நிரை இரும்பு வேலிகளையும் தள்ளிக்கொண்டு உள்ளே போக எத்தனித்தனர். கண்ணீர்ப் புகைத் தாக்குதல்களினால் குழந்தைகளும் சிறுவர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
இக்களேபரத்தின்போது பாராளுமன்றத்தில் இருந்த அரசாங்க உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது. ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்தும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரைக் கேட்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் வெளிவரும்போது மாணவர்கள் அவர்கள் மீதும் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொட்டியதாக கூறப்படுகிறது.
உதவி சபாநாயகர் இரண்டாவது தடவையும் பதவி விலகினார்

இதே வேளை இன்னுமொரு சுவாரசியாமன செய்தியும் கொழும்பு வட்டாரங்களை நகைப்பில் ஆழ்த்தி வருகிறது.
பலத்த பரபரப்புகளின் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நேற்று (05) பதவியேற்றப்பட்ட உதவி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய இரண்டாவது தடவையாகவும் பதவியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது.
சுதந்திரக் கட்சியினால் பிரேரிக்கப்பட்டு 148 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட சியம்பலப்பிட்டியாவுக்கு ஆதரவாக ரணில் விக்கிரமசிங்க போன்றோரும் பிரச்சாரம் செய்திருந்தார்கள். இது தொடர்பாக கூட்டமைப்பு பா.உ. சாணக்கியனுக்கும் விக்கிரமசிங்கவுக்குமிடையில் தொடர்ந்த்தும் தர்க்கம் நிலவி வருகிறது. சமாகி ஜன பலவேகய கட்சி வேட்பாளர் இம்தியாஸ் மரிக்கார் 65 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இந்நிலையில் அக் கட்சியிநால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் தோல்வியடையும் சாத்தியங்கள் உண்டு. இதன் காரணமாக மாணவர் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் மேலும் வலிமையடைவதற்கான அறிகுறிகள் உண்டு எநக் கொழும்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது.