இலங்கையில் 'அறம்' அறங்காவல் நிறுவனத்தின் பணிகள் -

இலங்கையில் ‘அறம்’ அறங்காவல் நிறுவனத்தின் பணிகள்

செப்டம்பர் 29, 2019

இலங்கையைத் தளமாகக் கொண்ட அறங்காவல் நிறுவனமான ‘அறம்’ இலங்கயில் போரினால் பாதிக்கப்பட்ட பிந்தங்கிய பிரதேசங்களின் கல்வி மற்றும் மருத்துவப் ப்பணிகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வருகின்றது.

இப் பணிகளின் தொடர்ச்சியாக இந்த மாதம் துணுக்காய்ப் பிரதேசத்திலுள்ள கல்விளாங்குலம் கிராமத்தில் கல்வி நிலையமொன்றை நிறுவியிருக்கிறார்கள். கல்விளாங்குளம் ஏ9 பாதையிலிருந்து 25 கி.மீ. உள்ளே இருக்கிறது.இக் கல்வி நிறுவனம் கல்விளாங்குளம் மற்றும் அதற்கு அயற் கிராமங்களிலுள்ள, வசதி குறைந்த 75 மாணவர்களுக்கு வாரம் 7 நாட்களும் மாலை வகுப்புக்களை வழங்க உத்தேசித்துள்ளது. தற்போது இங்குள்ள மாணவர்கள் 8 கி.மீ தூரத்திலுள்ள மல்லாவிக்குச் சென்று இக் கல்வியைப் பெறவேண்டியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமப்புறப் பாடசாலைகளில் பயிற்றப்பட்ட கணித, ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளது. இக் கிராமப்புற மாணவர்களை அகில இலங்கை சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் பணியைச் செய்வதற்கு ‘அறம்’ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இக் கல்வி நிலையத்தின் திறப்புவிழா வைபவம் கல்விளாங்குளம் மகாவித்தியாலய அதிபர் நிக்சன் ராசேந்திரம் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்வி வலயப் பணிப்பாளர் திரு.கே.சத்தியபாலன் அவர்கள் நிலையத்தைத் திறந்து வைத்தார். இன் நிலையத்தின் கட்டுமானச் செலவின் பெரும்பாகத்தை திரு சுதாகரன் அவர்களின் குடும்பத்தினர் காலஞ்சென்ற அவரது மனைவி நிருஜா சுதாகரன் அவர்களின் நினைவாக ஏற்றிருந்தார்.

இந் நிலையம் அமைவதற்கான காணியை கல்விளாங்குளம் அபிவிருத்திச் சபை வழங்கியிருந்தது. மாணிக்கம் கட்டுமான நிறுவனம் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் உழைத்து குறுகிய காலத்தில் இக் கட்டிடத்தைச் செவ்வனே கட்டி முடித்திருக்கிறார்கள். கல்விளாங்குள மக்களும் சமூகமாக ஒன்றிணைந்து பல கட்டுமானப் பணியாளர்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுத்து இந்த நல்ல காரியம் நிறைவேற வழிகோலியிருக்கிறார்கள்.

டாக்டர் மயூரதன் (Consultant JMO, NP), திரு.குகனேந்திரன், டாக்டர் சிறீலக்சாயினி (Radiologist), டாக்டர் திருவேரகன் (DMO) மற்றும் திரு ரகுவர்மன் ஆகியோர் ‘அறம்’ நிறுவனத்த்ஹின் சார்பில் இத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளாரகள்.

‘அறம்’ அறங்காவல் நிறுவனம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு தர்ம ஸ்தாபனம். போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேச மக்களுக்கும் இதர பிரதேசங்களிலுள்ள வறுமையான மாணவர்களுக்கும் கல்விச் சேவையை வழங்குவதே ‘அறத்’தின் தலையாய நோக்கங்களில் ஒன்று. அறம்’ நிறுவனம், சுமார் 1000 மாணவர்களுக்கு 40 ஆசிரியர்களின் உதவியுடன் கல்விச் சேவைகளை வழங்கி வருகிறது.

இப் பணி செவ்வனே நடந்தேறுவதற்கு சகல வழிகளிலும் உதவிகளைப் புரிந்த அத்தனை பேருக்கும், உலகம் பூராவும் இருந்து இப் பணிகளுக்காக நிதி உதவிகளைச் செய்து வருபவர்களுக்கும் ‘அறம்’ நிறுவனம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related:  பொய்த் தகவல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு

‘அறம்’ நிறுவனத்தின் பணிகளைப் பற்றி மேலும் தகவல்களை அறிய: https://www.facebook.com/aramtrustfund/

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)