இலங்கையில் அதிகாரப் பகிர்வு உறுதி!

அலம்பலும் புலம்பலும் | மாயமான்

ராஜபக்ச ராஜ்யத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் இடம் போதாது என்ற குறை இனித் தீரப் போகிறது. அதே வேளை அதிகாரப் பரவலாக்க விடயத்திலும் இலங்கை ஆட்சியாளர் இழுத்தடிக்கிறார்கள் என்ற சர்வதேசங்களின் குற்றச்சாட்டுக்கும் இனிமேல் இடமில்லாமல் போகப்போகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.

இலங்கை மக்கள் முன்னணி (SLPP) முன்னணி வாய்வெடித் தளபதி சரத் வீரசேகரா அம்பாறையில் நடைபெற்ற கூடமொன்றில் பெருந்திரளான சிங்கள மக்களின் கரகோஷத்தின் மத்தியில் “புதிய அரசியலமைப்பில்” மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டுவிடும் எனக் கர்ஜித்திருந்தார். தொடர்ந்து 13 ஆவது வாய்ப்பட்டைப் பாடிவரும் இந்தியாவுக்கு விட்ட எச்சரிக்கை வெடியாக அது அப்போது பார்க்கப்பட்டது. பின்னர் ஜெனிவா வாக்கெடுப்புக்கு முன்னால் “விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முயற்சி எடுங்கள்” என்று நந்தசேனர் பூவாணம் விட்டு இந்தியாவைக் குஷிப்படுத்தி வீரசேகர வெடியைச் சமாளித்திருந்தார். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிடினும் இந்தியா ஜெனிவாவில் வைத்து, மீண்டுமொருதடவை, 13 வது வாய்ப்பாட்டை ஒப்புவித்துவிட்டது. தற்போது மூன்று ‘பக்ச’ ராஜாக்களும் மாகாண சபை வாய்ப்பாட்டை ஒப்புவிக்கத் தொடங்கிவிட்டனர். விரைவில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுமெனத் தீர்மானமாகிவிட்டது.

இப்போது வாய்வெடித் தளபதி கடுப்பாகிவிட்டார். அவர் தனது சண்டித்தனப் பிக்குகளைக் களமிறக்கியிருக்கிறார். புதிய அரசியலமைப்பு நிறைவேறும்வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக்கூடாது என அவர்கள் காவிகள் களையத் தெருவில் உருக்கொண்டு ஆடுகிறார்கள்.

மாகாணசபைகளையும், 13 ஐயும் கண்ணில் காட்டமுடியாத நந்தசேநனரது இம் மனமாற்றம் எப்படிச் சாத்தியமானது? “அது இந்தியாவைப் பேய்க்காட்டி ஜெனிவாவில் வாக்களிக்க வைப்பதற்காக நந்தசேனர் சொன்ன பொய்” என்ற தொனியில் பிக்கு ஒருவர் சமாதானம் சொல்லியிருக்கிறார். நடக்கும் சம்பவங்களைப் பார்க்கப்போனால் நந்தசேனர் புத்த பிக்குவையா, வீரசேகரரையா, பொதுமக்களையா, சர்வதேசங்களையா அல்லது இந்தியாவையா பேய்க்காட்ட எத்தனிக்கிறார் என்பது புரியவில்லை. ஆனால் சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை.

பசில் ராஜபக்சவின் மனைவியார் புஷ்பா ராஜபக்ச கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் புரிந்து வந்தவர். அண்ணி ஷிராந்திக்கும் அவருக்குமிடையில் இருந்த குடுமிச் சண்டையே அதற்குக் காரணம் எனப் பேசப்பட்டது. தற்போது அவர்களுக்கிடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்று மோதல் தவிர்ப்பு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. பச்சை மட்டை அமெரிக்கரான புஷ்பா இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்.

பசிலரின் மனைவி புஷ்பா ராஜபக்ச வருடப் பிறப்பும் அதுவுமாக மங்களகரமாக விளக்குக் கொழுத்தியது தேவை கருதித்தான் எனக் கிசு கிசு எழுந்துள்ளது. பக்ச ராஜாக்கள் அதிகாரப் பரவலாக்கத்துக்குத் தயார் செய்கிறார்கள். தமிழர்கள் இதுகுறித்துப் – கொஞ்சக் காலத்துக்காவது – புளகாங்கிதமடையத் தேவையில்லை; அதாவது தமது குடும்பத்தின் அதிகாரத்தை மட்டுமே பக்ச ராஜாக்கள் இப்போது பரவலாக்குகிறார்கள்.

அதாவது, நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தல்களில், மேற்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவதற்காகவே பசிலரின் மனைவி புஷ்பா இங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். அல்லது, இலங்கை மக்கள் முன்னணியில் பெண்டிர்களுக்கு அதிகம் இடம் கொடுக்கப்படுவதில்லையென்ற குறையைப் போக்குவதற்காகவும் அவர் வரவழைக்கப்பட்டார் என ராஜாங்க முதன்மைப் பேச்சாலர் ரம்புக்வெல விரைவில் அறிக்கை விடலாம். (இரண்டாம் பேச்சாளர் கம்மன்பில மற்றப் பக்கம்).

புஷ்பா வந்தது மட்டுமல்லாது அண்ணி சகிதம் மங்கல விளக்கும் கொழுத்தி விட்டார். மார்ச் மாதம் ஜெனிவா வடிவத்தில் இலங்கை மீது தோன்றிய தூமகேது இன்னும் அடிவானத்தை விட்டு அகலாத நிலையில் இருவரும் மங்களகரமாகப் புதுவருடக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது ராஜ்யத்தில் விடயங்கள் சாதாரணமாகவே இருக்கின்றன என்பதை மகாஜனங்களுக்குக் காட்டுவதற்காகவிருக்கலாம்.

பக்ச ராஜாக்களில் பசிலர் கொஞ்சம் மண்டைக்காய் என்பார்கள். நந்தசேனரையும், மஹிந்தரையும் ஆட்சியில் இருத்தியவரே அவர் தான். அவரைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்து அமைச்சராக்கிவிட முயற்சிகள் நடைபெற்றன. அவருக்காகவே அவசரம் அவசரமாக 20 வது திருத்தத்தைக் கொண்டுவந்து இரட்டைக் குடியுரிமை என்ற தடை உடைக்கப்பட்டது என்றார்கள். மனிசன் கொஞ்சம் ரோசக்காரர், மறுத்துவிட்டார் என நினைத்திருந்தோம். ஆனால் விடயம் இப்போதுதான் வெளிக்கு வந்திருக்கிறது. மனைவி புஷ்பாவுக்கு முதலிடம் கொடுக்கவாகவிருக்கலாம்.

புஷ்பாவும் சாதாரணமான ஆளில்லை. அவர் ஒரு மூத்த சட்டத் தரணி. அத்தோடு பசிலரைவிடச் சிறந்த ஒருங்கமைப்பாளார். 1994 இல் மஹிந்தர் தொழிலமைச்சராக இருந்தபோது அவரின் கீழிருந்த பேரியக்கமே புஷ்பாதான் என்கிறார்கள். புஷ்பாவிற்கு அமெரிக்க பச்சை மட்டை கிடைத்ததும் பசிலர் குடும்பம் அமெரிக்கா சென்றது.

2005-2014 காலத்தில் லியா ஏபிமான் அமைப்பு, புஷ்பா அறக்கட்டளை ஆகியவற்றின் மூலமாக கம்பஹா, மாத்தறை மாவட்ட மக்களுக்கு பல நல்ல காரியங்களையும் புஷ்பா செய்திருக்கிறார். தற்போது பேசப்படும் முதலமைச்சர் பதவிக்கு 2014 இலேயே புஷ்பாவை முன்மொழிந்திருந்தார்களாம்.

புஷ்பாவே மேற்குமாகாணத்தின் முதலமைச்சர் என்பது இப்போதைக்கு உறுதியாகிவிட்டது. எனவே மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வடக்கு கிழக்கிலும் மாகாண சபைகளில் சலசலப்பு அதிகரிக்கப்போகிறது. அதற்காக அவை இயங்குமென்று நான் வாதாட வரவில்லை.

மேற்கு மாகாணத்தில் இப் பதவிக்காக வாக்குறுதியளிக்கப்பட்டுப் பல கனவுகளோடும் காத்துக்கொண்டிருக்கும் ரேணுகா பெரேராவுக்குப் பலத்த ஏமாற்றமாக இருக்கும். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ராஜபக்ச ராஜ்யத்தில் அவர்களது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே கனவு காணும் உரிமை இருக்கிறது. நம்பாவிட்டல் வீரவன்சர், கம்மன்பிலர், வாசுதேவரிடம் கேட்டுப் பாருங்கள்.