இலங்கையின் வெள்ள அனர்த்தம்
மாயமான்
இயற்கை அனர்த்தங்கள் உலகுக்குப் புதியனவல்ல. ஆனால் பெரும்பாலான தருணங்களில் அவ்வழிவுகளுக்கு முன்னால் போதுமான அளவுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளைத் தருமளவுக்கு உயிர்களின் பரிணாம வளர்ச்சி சில சமரச செயற்பாடுகளையும் சமாந்தரமாகவே வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறது.
உதாரணத்திற்கு 2004 ஆழிப்பேரலை தாக்குவதற்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அண்மையில் பெருந்தொகையான பாம்புகள் தரையை நோக்கி நகர முற்பட்டன என்றொரு செய்தி வந்திருந்தது. கடலினடியே பெரு வேகத்துடன் ஆழிப்பேரலை வந்துகொண்டிருக்கும் விடயம் ஏதோ ஒரு வகையில் அவ்றறுக்கு ‘அறிவிக்கப்பட்டிருந்தன’ எனவே கருதவேண்டியிருக்கிறது. பல்லுயிர்கள் வாழும் ஒரு சுமுகமான சூழலில் அவற்றினிடையே ஒரு பரஸ்பர உறவு (symbiotic relationship) உருவாகுவது இயற்கை என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஆழிப்பேரலையின் போது அந்தமான் நிக்கோபார் தீவுகளிலில் வாழ்ந்த பலர் மலைப்பகுதிகளுக்குச் சென்றுவிட்டதால் உயிர் பிழைத்தார்கள். தென்னமெரிக்காவில் பூகம்பம் வரப்போகிறது என்பதை கோழிகள் மூலம் மக்கள் முற்கூட்டியே அறிந்துகொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுவார்கள். 2004 ஆழிப்பேரலை கரைகளை மூர்க்கமாகத் தாக்குவதற்கு முன்னர் கடல் தன்னை இரண்டு மூன்று கி.மீட்டர்களுக்கு பின்னோக்கி சுருக்கிக்கொண்டு விட்டது பலருக்கும் தெரியும். இது சில மணி நேரத்துக்கு நீடித்தது. மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். பலர் கடலுணவுகளை இலவசமாகப் பெற்றுக்கொண்டார்கள். இயற்கையின் இந்த சமிக்ஞையை பாம்புகள் தெரிந்துகொண்ட அளவுக்கு மனிதனால் இயலவில்லை. ஆழிப்பேரலை பற்றி மனிதன் உருவாக்கிய கருவிகளை விட இயற்கை உருவாக்கிய உயிரினங்கள் மிக வேகமாக உய்த்துணர்ந்து விட்டன.
பல்லாயிரம் வருடங்களாக இயற்கை என்ற பொறியியலாளன் உருவாக்கி, நெறிப்படுத்தி வந்த ஆறுகள், மலைகள், குளங்கள், ஏரிகள் எல்லாம் தமக்கான பாதைகளை மிகவும் திண்ணமாகத் தீர்மானித்திருந்தன. கரையோரங்களில் நெடிதுயர்ந்து வளரும் மரங்களின் வேர்கள் மண்ணரிப்பையும் மண் சரிவையும் தடுத்து மேடுகளுக்கும், மலைகளுக்கும் அத்திவாரமிட்டு வந்தன. வணிகப் பயிர்களுக்காக அவற்றையெல்லாம் தகர்ந்த்துவிட்டு காலம் காலமாக நீர் தமக்கென வ்குத்திருந்த பாதைகளில் மறிப்புக் கட்டி இயற்கையை விட நானே சிறந்த பொறியியலாளன் என்ற மமதையில் மனிதன் செய்த மடத்தனமான கரியங்களுக்கான வெகுமதியே எமக்கு முன்னாலுள்ள அனர்த்தம்.
சீனப் புரட்சியின்பின் ஆட்சியைக் கைப்பற்றியதும் மா சே துங் முதலில் இட்ட கட்டளை பல மில்லியந் மக்களுக்கு உணவூட்டி வந்த நெற்பயிர்களுக்கு குந்தகமாகவிருந்த பறவைகளை முற்றாகக் கொன்றொழிக்கும்படி. அதை வெற்றிகரமாக நிகழ்த்திய புரட்சிப் படைகள் அறுவடைக்குத் தயாராகியபோது பயிகள் முழுவதையும் வெட்டுக்கிளிகள் துவம்சம் செய்திருந்தன. விளைவு? பல மில்லியன் மக்கள் பஞ்சத்தால் மரணம். இயற்கையின் சமரசத்தோடு விளையாடாதீர்கள் என்று அது காலம் காலமாக எச்சரித்துக்கொண்டுதான் வருகிறது. நாம் தான் கவனிப்பதில்லை.
2004 ஆழிப் பேரலையின்போது பெரும்பாலாகப் பாதிக்கப்பட்டது கரையோரப் பகுதிகள். இலங்கையின் கரையோரத்தின் 40% தமிழ் நிலத்தில் தான் இருக்கிறது. நிவாரணத்திற்கென சர்வதேசம் அள்ளிக் கொடுத்தபோது அப்பணம் தமிழர் பகுதிகளுக்கு வழங்கப்படக்கூடாது என வெற்றிகரமாகப் போர்க்கொடி தூக்கியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் (ஜே.வி.பி.). தற்போதைய அனர்த்தம் அவர்களது அறிவுக்கண்களைத் திறக்க வேண்டும்.
நேற்று ஒரு முகநூல் பதிவைப் பார்த்தேன். பாதிக்கப்பட்டவொரு தமிழ்ப் பிரதேசத்தில் குளமொன்று உடைப்பெடுக்கும் ஆபத்து இருக்கிறதென்று ஒரு நன்மனதாளர் உதவிக்கு அறைகூவல் விடுத்தபோது வெகு சொற்பமானவர்களே உதவிக்கு வந்திருந்தனர் எனவும் அவர்கள் அனைவருமே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். இளையவர்கள் எவரும் அப்பக்கமே எட்டியும் பார்க்கவில்லை எனவும் பதிவாளர் ஆதங்கப்பட்டிருந்தார். இத்தனைக்கும் அங்கு கூடியவர்களில் பலர் சிங்கள இராணுவத்தினர்.
இந்த அனர்த்த நிவாரணத்தின்போது தமிழர்களைக் காப்பாற்றுவதற்காகப் பல இராணுவத்தினர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வேளையில் இனம், மதம் அனைத்தையும் மீறி எல்லோரும் எல்லோருக்கும் உதவி செய்வது அவசியம். வாரி வழங்குங்கள். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபம்.
