இலங்கையின் பொருளாதாரம்: முயலா ஆமையா?
ஜெகன் அருளையா

நாவன்மையுள்ள ஒருவரின் பேச்சைக் காணொளியில் கேட்டேன். பல பேச்சாளர் அடிக்கடி கூறுவதைப் போலவே அவரும் கூறினார் “இலங்கை வாழ் மக்கள் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”. வனங்கள், கடற்கரைகள், மிதமிஞ்சிய மனித வளங்கள் என அபரிமிதமான இயற்கையின் கொடைகளால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படியிருந்தும் இந்நாடு வறுமையால் சீரழிந்து 2022 இல் வங்குரோத்தாகிப் போனது.
இது எனக்கு ஈசாப்பின் நீதிக்கதையொன்றையே ஞாபகப்படுத்தியது: முயலும் ஆமையும் கதை. வேகத்திற்குப் பெயர் போன முயல் அணுகுமுறைக்குப் பெயர் போன ஆமையிடம் ஓட்டப் போட்டியில் தோற்க நேர்ந்தது. இயற்கை தனக்களித்த திறமைகளுக்காக ஆசீர்வதிக்கப்பட்டதெனத் தன்னைத் தானே மெச்சிக்கொண்ட முயல் ஓட்டப் பாதையில் தூங்கப் போய்விட்டது. இம் முயலைப் போலவே ஆசீர்வதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரமும் தூங்கிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கைகளில் எமது தூங்கும் இலங்கை நன்றாகவே விபரிக்கப்பட்டிருக்கிறது. எமது நாடு பல தசாப்தங்களாகவே ‘அலைக்கழிந்து கொண்டிருக்கிறது’ என்கிறது அந்த அறிக்கை.

“கடந்த பல தசாப்தங்களாக ஏற்றுமதிகள் (பெரும்பாலும் பண்டங்கள்) வெகுவாகக் குறைந்திருந்தன; முதலீடுகள் தடுமாற்றம் கண்டன…ஏற்றுமதிகளில் மாற்றுவழிகளைக் காண்பதில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை – ஆடைகளும் தேயிலையுமே இன்னமும் ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னிடம் வகிக்கின்றன, போக்குவரத்தும் பிரயாணமுமே சேவைத்துறைகளெனக் கருதப்படுகின்றன” என்கிறது இவ்வறிக்கை. எமது நடப்புக் கணக்கின் (current account) இருப்பில் பணம் போதுமானதாக இருக்கிறது என்பதைக் கொண்டாடுபவர்கள் அது இறக்குமதிக் குறைவினால் கிடைத்த இலாபமே தவிர ஏற்றுமதியினால் கிடைத்த வருமானமில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு கடனட்டை உரசலுடன் திசைமாறிவிடக்கூடியது இந்தக் களியாட்டம்.
“இலங்கையின் இதுவரை பயன்படுத்தப்படாத ஏற்றுமதித் திறன் வருடமொன்றிற்கு US$ 10 பில்லியன்கள். இது முழுமையாகப் பாவிக்கப்படின் ஏறத்தாழ 142,500 பேருக்கு வேலைகளை வழங்கக்கூடியதாகவிருக்கும்” என்கிறது உலக வங்கியின் அறிக்கை. US$ 10 பில்லியன் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(GDP) 10%த்திற்கு மேலானது! இது, கணக்கில் மந்தமானவர்களுக்கு “பெரும் தொகை”.
“இந்த பயன்படுத்தப்படாத ஏற்றுமதித் திறனின் பெரும் பங்கு ஆசியாவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 2020 இல், இலங்கை ஏற்றுமதி செய்யத் தவறிய பண்டங்களின் 70% த்திற்கு மேலானவை 5 ஆசிய நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டியவை: சீனா ( US$ 3.5 பில்லியன்கள்), இந்தியா (US$ 1.5 பில்லியன்கள்), யப்பான் (US$ 1 பில்லியன்), இந்தோனேசியா (US$ 0.7 பில்லியன்), தென் கொரியா (US$ 0.5 பில்லியன்). வணிக ராஜதந்திரம் இப் பிராந்தியத்தில் முறையாகச் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு இலங்கையின் ஏற்றுமதித் திறன் போதுமானதாக இருக்கிறது” என்கிறது இந்த அறிக்கை.
” உங்கள் சேவையில்?: சேவைத்துறைசார் அபிவிருத்திக்கான வாக்குறுதி” என்னும் தலைப்பில் உலக வங்கியால் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இன்னுமொரு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 2017 இற்கான இலக்கங்கள் காட்டுவதைப் பார்க்கின் இலங்கையின் ஏற்றுமதி பெரும்பாலும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, களஞ்சியம் போன்ற உடலுழைப்புச் சேவைகளாகவே இருக்கின்றன. அதே வேளை இந்தியாவின் ஏற்றுமதி பெரும்பாலும் நிதி, தகவல் தொழில்நுட்பம், நிபுணத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைசார் சேவைகளாகவே இருக்கின்றன.
எனது இக்கட்டுரையின் நோக்கம் வடமாகாணம், எனவே அங்கு நாம் நகர்வோம். இதற்கென நான் டிசம்பர் 20, 2024 இல் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையைப் பார்க்கவேண்டி ஏற்பட்டது. பொருளாதாரத்தில் நலிந்துபோன வடமாகாணம் என்பதுபற்றியே பலரும் அடிக்கடி பேசுவார்கள். இலங்கையின் சரிவோடு ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரச் சரிவு அளப்பரியது. வடக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சியைப் பார்க்கும்போது நாம் தூங்கிய முயலின் சோம்பேறிச் சகோதரர் எனவே கூறவேண்டும்.
வடக்கின் வறுமை ஒரு அரசாங்கத்தின் சதி எனப் புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலர் நம்புகிறார்கள். இது பெரும்பாலும், பொருளாதார பலமிக்க புலம் பெயர் தமிழர்கள் உட்பட, தனியார் துறையின் தோல்வி எனவே நான் எண்ணுகிறேன். தனியொருவரின் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்கைப் பார்க்கும்போது வடக்கு மட்டுந்தான் வறுமைப்பட்ட மாகாணமென்பதல்ல. வடக்கு, ஊவா, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் தென் மாகாணங்கள் அனைத்தும் வடமாகாணத்தைப் போலவே வறியவை தான். மேற்கு மாகாணத்தின் மொத்த உற்பத்தியின் 50% த்திற்கும் கீழேதான் இவை அனைத்தும் அடங்கும்.



ஆனால் வட மாகாணத்தின் இலக்கங்கள் வறுமையை நோக்கிய சரிவையே காட்டுகின்றன. குறிப்பாக அதிர்ச்சி தருவது , வடக்கின் உச்சமெனக் கருதப்படும் விவசாயத் துறை. இது இரண்டாம் கீழ்நிலை மாகாண வளர்ச்சியின் மூன்றில் ஒன்று என்ற நிலைக்குத் தாழ்ந்திருக்கிறது.

கொழும்பின் நட்சத்திர ஓட்டல்களில் கேளிக்கைகளுடனும் பரஸ்பர துதிபாடல்களுடனும் 2024 முடிவுக்கு வந்திருக்கிறது: விருதுகள் வழங்கல்கள் மற்றும் வணிக மேல்தட்டுகளின் முதுகுத் தட்டல்கள் வேறு. எமது இயற்கை மற்றும் மனித வளங்களையும் சாதனைகளையும் போற்றி மதுக்கிண்ணங்கள் உயர்த்தி வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. சந்தர்ப்ப வறுமையால் கடைநிலை ஊழியத்திற்குத் தள்ளப்பட்டவர்களால் இக்கிண்ணங்கள் வழங்கப்பட்டும், அகற்றப்பட்டும், கழுவப்பட்டும் இருக்கலாம்.
நாங்கள் சிறுவர்களாகவிருந்தபோது, 1970 களில் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வந்திருந்த, தற்போது இறந்துபோன, எனது மாமனார் மீன் சந்தைக்கு ஒருமுறை எங்களை அழைத்துப் போனார். 1970 களில் இங்கிலாந்தில் பாண் தூள் தூவிப் பொரித்த மீன் துண்டங்களைச் சாப்பிட்டுப் பழகிப்போன எங்களுக்கு செதில்களும் இறகுகளும் கொண்ட மீன்களைப் பார்ப்பது பரவசம் தரும் அனுபவமாகவிருந்தது. அப்போது எமது மாமனார் எமக்குச் சொன்ன புத்திமதி ” கவனம், யாராவது உங்கள் முதுகுகளில் தட்டினால் அது அவர்கள் தங்கள் கைகளைத் துடைப்பதற்காகத்தான் ”
( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன் tam@veedu.com)
Image Courtesy: Tamilsirukathaikal.com
