இலங்கையின் பொருளாதாரத் தோல்விக்கு ராஜபக்சக்களே காரணம் – உச்ச நீதிமன்றம்
பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து நாடு வங்குரோத்து நிலைமைக்குப் போனதற்கு முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த, பசில் ராஜபக்ச ஆகியோரே காரணம் எனவும் 2019 முதல் 2022 வரை நாட்டின் பொருளாதாரத்தை தவறான வழியில் நிர்வகித்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமாகி மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் மீறிவிட்டார்கள் எனவும் நேற்று (14) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அது மட்டுமல்லாது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால், பேரா. டபிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல, முன்னாள் ஜநாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கி நிதிச்சபை அங்கத்தவர்கள் உட்படப் 13 பேர் மக்களின் நம்பிக்கையை மீறிச் செயற்பட்டிருந்தார்கள் எனவும் இதன் மூலம் அவர்கள் அரசியல் சாசனத்தின் கட்டளை 12(1) ஐ மீறியிருக்கிறார்கள் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதன்மை நீதிபதி ஜயந்தா ஜயசூரியா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் இவ்விசாரணையை நடத்தியிருந்தாலும் நீதிபதிகள் ஜயந்த ஜயசூரியா, புவநேக அளிவிகார, விஜித் மலால்கொட மற்றும் மூர்து ஃபெர்ணாண்டோ ஆகியோர் இத்தீர்ப்புக்கு ஆதரவாகவும் நீதிபதி பிரியந்த ஜயவர்த்தன எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
சமாகி ஜனபலவேகய கட்சியின் உறுப்பினர் பேரா. மஹிம் மெண்டிஸ், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயவர்த்தன, ஜூலியன் பெளலிங், ஜெஹான் கனகரெட்னா, சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பின் இலங்கைக் கிளை ஆகியோருட்படப் பலர் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு அடிப்படை உரிமைகள் மீதான புகார்களை அடுத்து உச்ச நீதிமன்றம் இவ்விசாரணையை மேற்கொண்டிருந்தது.
2019 இல் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ‘வியத்மக’ என அழைக்கப்பட்ட கற்றோர் குழுவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ராஜபக்ச பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதிலொன்று தமது பணக்கார உயர்மட்ட நண்பர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது. இந்நடவடிக்கையால் அரசு ரூ.681 பில்லியன் வருவாய்க் குறைவை எதிர்கொண்டது. இதை சமாளிக்க அடுத்த நடவடிக்கையாக பல ட்றில்லியன் ரூபாய் பண நோட்டுக்களை அச்சடிக்க வேண்டி ஏற்பட்டது. இதன் நேரடி விளைவாக பண வீக்கம் பன்மடங்கு பெருகி நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது.
நாட்டின் பொருளாதார சரிவைக் கண்ட நிபுணர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடும்படி எச்சரித்திருந்தும்கூட அப்போது அரசாங்கத்தில் இருந்த அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அதற்கு உடன்படாமையால் நாடு வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
நாடு எதிர்நோக்கும் தொடர் பொருளாதாரச் சிக்கலுக்கு இவர்களே காரணம் எனவும் இது தொடர்பாக அவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வழக்கைத் தொடுத்தவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டிருந்தனர்.