Spread the love

கொறோனாவைரஸ் தாக்கத்தினால் பாதிப்படைந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

நேற்று, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவைச் சந்தித்த, சீனாவின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹூ வே, இதைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இறுக்கமான நட்பை அனுசரித்துத் தாம் இவ்வுதவியைச் செய்ய முன்வருவதாக அவர் கூறியதாக ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதே வேளை சீனாவை கொறோனாவைரஸ் தாக்கியபோது இலங்கை அளித்த ஆதரவையும் தூதுவர் சுட்டிக்காட்டியதாக அலுவலகம் மேலும் தெரிவித்தது.

சீன அரசாங்கமும், முன்னணி சீன நிறுவனங்களும் இலங்கைக்கு இவ்வுதவிகளைச் செய்ய்ம் எனத் தூதுவர் கூறியதாக அறிய முடிகிறது.

சீன அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நிவாரண உதவியாக, 20,000 பரிசோதனைப் பொதிகளையும், 10,000 KN95 முகவாய்க் கவசங்களையும், 100,000 சிகிச்சையாளர் கவசங்களையும், 10,000 (PPE) உடற் கவசங்களையும், 1,000 கண் கவசங்களையும், 50,000 சிகிச்சைக் கையுறைகளையும், இந்த வாரம் பதில் தூதுவர் ஹூ வே கையளித்திருந்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருக்கிறார்.

சில நாடுகள் செய்வதுபோல் நிலைமையை அரசியலாக்குவதையும், களங்கப்படுத்துவதையும் விட்டு விட்டு, இந்த இடர்க் காலத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென பதில் தூதுவர் ஹூ, அமைச்சர் வன்னியாராச்சி மற்றும் ஊடகங்களுக்கும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  கருணா விவகாரம் | எப்படிச் சுழற்றப் போகிறார்கள் ராஜபக்சக்கள்?