Spread the love
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 வது அவர்வில் ஆணையாளர் மிஷெல் பக்கெலெ வின் பேச்சின் சாராம்சம்

பெப்ரவரி 27, 2020

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இன்னுமொரு விசாரணைக் குழுவை நியமிப்பதென இலங்கை தெரிவித்த ஆலோசனையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணயாளர் மிஷெல் பக்கெலெ நிராகரித்துள்ளார்.

இலங்கையின் முந்தய அரசு இணைப் பிரேரணை செய்து நிறவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானம் 30/1 அந்நாட்டின் அரசியலமைப்புக் எதிரானதெனச் சுட்டிக்காட்டி நேற்று (புதன்) இலங்கை அத்தீர்மானத்திலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததோடு, மாற்றுத் தீர்வாக, பொறுப்புக்கூறல் விடயங்களை நிறைவேற்ற உள்ளகப் பொறிமுறையொன்றை உருவாக்குவோம் எனவும் கூறியிருந்தது.

இத் தீர்மானம் நிறைவேற்றுப்படும்போது, முந்தய அரசின் பிரதமர் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், இணைப்பிரேரணை பற்றிய விடயங்களை அமைச்சரவையிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ சமர்ப்பித்து அங்கீகாரம் பெறாமல் ஐ.நா.விற்குச் சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரணானது என தற்போதய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.


இந்த தீர்மானத்தில், இலங்கையில் இறுதிப்போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றியும், இனப்படுகொலை நடைபெற்றுள்ளதா என விசாரிக்கும் பொருட்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு நீதிபதிகள், ஜூரர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்கலாம் என்பது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. இதற்கு ரணிலின் அரசு (அமைச்சர் மரப்பாண) பின்னர் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இது இணைக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து தப்பிப்பதற்காகவே தற்போதய அரசு தீர்மானத்திலிருந்து வெளிவருவதாக அறிவித்தது.

இலங்கை மீதான அறிக்கையொன்றை மனித உரிமைகள் சபையில் இன்று சமர்ப்பித்துப் பேசிய ஆணையாளர் பக்கெலெ, கடந்த காலங்களில் இலங்கையின் உள்ளகப் பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயங்களில் தொடர்ச்சியாகத் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, இன்னுமொரு விசாரணை இவ்விடயத்தி மேலும் முன்னெடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லையெனத் தெரிவித்தார்.

“இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமலும், முந்தய காலங்களைப் போல மனித உரிமை மீறல்கள் நடைபெறமாட்டாது என்பதற்கு, இலங்கையின் சகல இன மக்களுக்கும் ஒரு உத்தரவாதமுமில்லை எனவும்” அவர் 43 வது அமர்வில் பேசும்போது குறிப்பிட்டார்.

“அரசு, அந்நாட்டின் சகல மக்களினதும், சகல சமூகங்களினதும், குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களினதும் தேவைகளை அங்கீகரித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். கடந்த சில வருடங்களாகத் தேட்டம் செய்யப்பட்ட நன்மைகளிலிருந்து நல்லிணக்க முயற்சிகளைத் தொடர்ந்து கட்டியெழுப்புங்கள், குறிப்பாக, காணாமால் போனோருக்கான அலுவலகம், அரசியல், மூலவள ஆதரவுடன் இழப்பீடுகளை வழங்குதல் போன்ற விடயங்களை நிற்ஐவேற்றும்படி அரசாங்கத்தை நான் ஊக்கப்படுத்துவேன். சகல சமூகங்களிலுமிருந்தும் காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதியும், நிவர்த்தியும் வழங்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் சுயாதீன நிறுவனங்கள், 19 வது திருத்ததின் கீழ் பலப்படுத்தப்பட்டமை என்பது ஜனநாயகக் கட்டமைப்பின் முக்கிய தூண் எனவும், குடிமைச் சமூகங்கள், சுயாதீன ஊடகங்கள் என்பன இயங்குவதற்கான வெளிகள் பாதுகாக்கப்படுவது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related:  நல்லிணக்கத்தை முன்னெடுக்க மேலும் நடவடிக்கைகள் தேவை - ரணில்

“பல சிவிலியன் தொழிற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் கீழ்க் கொண்டுவரப்பட்டமை, மனித உரிமைக் காவலர்கள், ஊடகத்துறையினர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மீதான புலனாய்வுக் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டமை, அவர்கள் துன்புறுத்தப்படுதல் தொடர்பாகச் சமீபத்தில் கிடைக்கும் தகவல்கள் கவலை தருவனவாக உள்ளன. தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரைக் குறி வைத்து மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு, கொள்கையுருவாக்க நடவடிக்கைகள், வெறுப்பைக் கக்கும் பேச்சுக்கள் என்பன பாரபட்சமானதாகவும், சீரற்றதாகவும் காணப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

தனது முந்தய மீறல்களுக்கான தண்டனைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமை, பாதுகாப்புத் துறையில் அவற்றை ஏவுவர்கள், செயற்படுத்துபவர்கள் தொடர்பாகா எதுவித மறுசீரமைப்புக்களையும் செய்யாமை போன்றவையே இலங்கையின் அடிப்படைப் பிரச்சினையாகும் எனவும், நீதித்துறையில் காணப்படும் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் உண்மையான நீதிவழங்கலுக்குத் தடையாக உள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கம் அறிவித்த மாற்று அணுகுமுறை, முந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்ட ஐ.நா. தீர்மானம் 30/1 இன் மூலம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பல அரிய முயற்சிகளையும் பின் தள்ளிப் போடுகிறது என அவர் கவலை தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email