இலங்கையின் புதிய ஒழுங்கு
கோதாபய ராஜபக்ச பதவி விலகுவாரா?
சிவதாசன்
#Go Home Gota என்ற சுலோகம் இப்போது உருக்கில் வார்க்கப்பட்ட ஆயுதமாக நாட்டின் ஒவ்வொரு இளைய சந்ததியினரினாலும் கைகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றம், சமையைல் வாயு, பெற்றோல் என்று வரிசைகளில் நின்ற முதியவர்களினதும், பெண்கள் குழந்தைகளினதும் வாடி வதங்கிப்போன உடல்கள் இப்போது துடிப்பான வசதிகொண்ட இளைய தலைமுறையினரால் நிரப்பப்பட்டிருக்கிறது.
இவ்வரிசைகளைத் தம்பக்கம் சாய்த்துக்கொள்ள அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் எடுத்த பகீரத முயற்சிகள் வெற்றியீட்டவில்லை. இது ஒரு புதிய வெளிப்பாடு. இப் புதிய தலைமுறை உணவுக்காகக் குரலெழுப்பவில்லை. ஜனாதிபதியும், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்பதே அவர்களது தற்போதைய கோரிக்கை. குறிப்பாக, ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பமே நாட்டைக் கொள்ளையடித்துவிட்டதென்ற கருத்து சாதாரண மக்களிடமும் சென்றுவிட்டதுமல்லாது அது நாளுக்கு நாள் பலம் பெற்றும் வருகிறது. விடுமுறை நாட்களைக் கொடுத்து இந்த இளையவர்களை வீட்டுக்கு அனுப்பலாம் என்ற அரசாங்கத்தின் கனவும் பலிக்கவில்லை. அவர்கள் எங்கும் போவதாகவில்லை. பலம் முற்றியிருந்தும் அவர்களது கைகள் மீரிகம ஆர்ப்பாட்டக்காரர்களைப் போல கற்களை எடுக்கவில்லை. மாறாக இன்னும் பதாகைகளையே பிடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த போராட்டம் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஒரு முற்றிலும் வித்தியாசமான இலங்கையை உருவாக்குவதற்கு அது போதுமானது.
அடுத்து என்ன நடக்கலாம்?
6.9 மில்லியன் மக்களின் வாக்குகளில் பதவியைக் கைப்பற்றியதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஜனாதிபதிக்கு நாட்டின் உண்மையான நிலைமை இப்போது புரிந்திருக்கும். அதே 6.9 மில்லியன் மக்கள் தன்னை வீட்டுக்கு அனுப்பத் துடிக்கிறார்கள் எனபதும் அவருக்குத் தெரியும். அதற்கு அவர் தயாராக இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் தமது பாதுகாப்புக்காக அவரைத் தடுக்கிறார்கள் போலத் தெரிகிறது. இந் நிலைமையில் அவருக்கு இருக்கக்கூடிய பாதைகள் என்ன?
அரசியலமைப்பின் 38 ஆவது கட்டளையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவரின் பதவி பறி போவதற்கு சில படிமுறைகள் கொடுக்கப்படுகின்றன. அவை:
- அவரின் மரணத்தினால்
- அவரது கைப்பட சபாநாயகருக்கு எழுதிக் கொடுக்கும் பதவி விலகல் கடிதத்தின் மூலமாக
- அவரது குடியுரிமை இழக்கப்படும் சந்தர்ப்பத்தில்
- ஜனாதிபதி தேர்தல் முடிந்து 31 நாட்களில் பதவி ஏற்காவிட்டால்
- அவரது மனநிலை அல்லது உடல்நிலை பாதிப்பின் காரணமாக அவர் கடமை தவறுகிறார் என ஒரு பா.உ. சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில்
- அவர் வேண்டுமென்றே அரசியலமைப்புச் சட்டத்தை மீறியோ, தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டோ, ஊழல் புரிந்தோ, பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகவோ நிரூபிக்கப்படும் பட்சத்தில்
- அரசியலமைப்புச் சட்டத்தின் 130 (a) கட்டளையின் பிரகாரம் உச்ச நீதிமன்றம் அவர் பதவிக்குத் தகாதவர் எனத் தீர்மானிக்கும் பட்சத்தில்
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் மேற்படி எந்தவொரு அம்சத்திலும் அவர் சிக்குப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. நீதிமன்றங்களும் ஆட்சியாளரின் ஆதரவாளரினால் நிரப்பப்பட்டிருப்பதால் சுதந்திரமான மக்கள் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க அவை தயாராகவும் இல்லை. இச் சூழ்நிலையில் அவர் தானே முன்வந்து பதவியைத் துறக்க வைப்பதற்கான போர்ராட்டத்தை முன்னெடுப்பதுவே ஒரே வழி.
பாராளுமன்ற மீளொளுங்கு
இப்படியான சூழ்நிலையில் ஜனாதிபதியைப் பதவியிழக்கச் செய்யும் முயற்சிகளில் சில:
- பாராளுமன்றத்தில் தற்போதுள்ள 225 ஆசனங்களில் ஆளும் கட்சி தரப்பிடமுள்ள பெரும்பாலான ஆசனங்கள் எதிர்க் கட்சியுடனேயோ அல்லது சுயாதீனாமாகவோ செல்ல ஆளும் கட்சி உறுப்பினர்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்துதல்.
- இதைச் சாத்தியமாக்கும் வகையில் தற்போது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை அரச ஆதரவிலிருந்தும் துண்டிக்கும் வகையில் போராட்டங்கள் முன்னெடுத்தல்.
- இதனால் அமையப்போகும் புதிய அரசாங்கத்தின் பிரதமராக நேர்மையுள்ள, அனைத்துச் சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒருவரை அமர்த்துவது நாட்டின் அன்றாட பரிபாலனத்துக்கு அவசியமானது.
- இப் புதிய அரசாங்கம் கோதாபயவைப் பதவியிலிருந்து விலகும்படி அழுத்தம் கொடுக்கலாம். அவர் பதவி விலகினால் எஞ்சியிருக்கும் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்துக்கு ஒரு சம்பிரதாய ஜனாதிபதி ஒருவரை சபாநாயகர் நியமிக்கலாம். இப் பதவிக்கு தேசியப் பட்டியல் மூலம் கொண்டுவரப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த ஒரு பெண்ணை நியமிப்பதன் மூலம் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பமும் உண்டு.
- ஜனாதிபதி கோதாபய பதவி விலக மறுத்தால், எதிரணியின் பலம் மூன்றில் இரண்டு பங்கை எட்டுமானால் (150), உடனேயே 20 ஆவது திருத்தத்தை மீளப்பெற்றுவிட்டு, திருத்தப்பட்ட 19 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதன் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பறித்து, அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும்.
- அதிகரிக்கப்பட்ட அதிகாரங்களுடைய அரசாங்கத்தில் அமைச்சர்களுடைய எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், தரமானவர்களுக்கும், இன, மத பேதமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்ட முறையில் அமைச்சரவை இருக்க வேண்டும். நேர்மையான, மூன்று சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்.
- இப்படி உருவாக்கப்படும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலுக்கு உடனடியான தீர்வைக் கொண்டுவர வேண்டும். நிலைமை சுமுகமாக வரும்வரை இன்னுமொரு தேர்தலுக்கு சாத்தியமில்லை என்பதைப் போராட்டக் காரர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- 2025 இல் அடுத்த பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும்வரை போராட்டஙகளை முன்னெடுத்த இளைய தலைமுறை தமக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவார்களா அல்லது ஏற்கெனவே இருக்கும் ஊழல் மலிந்த கட்சிகளில் மாற்றஙகளை ஏற்படுத்துவார்களா என்பது தெளிவாகும்.
- தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு சிங்கள மக்களிடையே பிரபலமான கற்றோரும், கலைஞர்களும், ஒதுங்கியிருந்த நேர்மையாளர்களும், நியாயவாதிகளும் தமது ஆதரவைத் தெரிவித்து வருவது நம்பிக்கையளிக்கிறது. இனக்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கருத்துக்களும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ்த் தரப்பினரின் நிலைப்பாடு
நாடு குழம்பியிருக்கும் நிலையில் தமிழர் தரப்புக்கு இரண்டு தேர்வுகளே உண்டு. ஒன்று தென்னிலங்கைப் போராட்ட சக்திகளுடன் இணைந்து அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவது. புதிய பாராளுமன்ற ஒழுங்கு ஊழலற்ற ஒன்றாக அமையுமானால் அவர்களோடு இணைந்து தமிழருக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது. இதில் புலம் பெயர் தமிழரையும் பங்காளிகளாக்குவது அவசியம். ராஜபக்சக்களால் சீரழிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டமைக்க இன்னும், குறைந்தது, ஐந்து ஆண்டுகளாவது எடுக்கும். இதில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு எப்படி இருக்கப்போகிறது என்பதற்கான ஒரு road map ஒன்றை இப்போதே தயாரித்து வைப்பது நல்லது.
இரண்டாவது தேர்வாக, தென்னிலங்கைப் போராட்டங்களில் எதுவித பங்கையும் எடுக்காமல் நடுநிலைமை வகிப்பது. தென்னிலங்கை இழுபறியில் பலம் ராஜபக்சக்களின் பக்கம் சாயக்கூடிய ஆபத்து இருக்குமானால் இரண்டாவது தேர்வு சாணக்கியமானது. ஆனால் பலம் இப்போது ஏறத்தாள மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டது. ஜே.வி.பி., சஜித் அணி, சுதந்திரக் கட்சி அணி, இடதுசாரிகள், தொழிற்சங்கவாதிகள் என்ற எந்தவொரு அணியின் பின்னாலும் படித்த இளைய தலைமுறை போகுமென்பது சந்தேகமே. இவர்கள் எல்லோருமே ஊழல் பெருச்சாளிகள் என்ற கூட்டணிக்குள் தள்ளப்பட்டவர்கள். நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் ஆரம்பத்தில் காணப்பட்ட பச்சை, சிவப்புக் கொடிகளையும், விசிறிகளுடன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் காவிகளையும் காணாதது வரப்போகும் புதிய ஒழுங்கு வித்தியாசமான பரிமாணத்தை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே முதலாவது தேர்வே தமிழருக்கு இப்போதைக்கு சாத்தியமானது.
அதே வேளை தமிழர் தேசத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்ற பதாகைகளின் நிழலில் நின்ற பலர் இப்போது பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். போர் முடிந்த பின்னர் இவர்களின் பங்களிப்பு என்று குறிப்பிடக்கூடியதாக எதுவுமில்லை. இனிவரும் காலங்களில் யார் தமது பிரதிநிதிகள் என்பதைத் தீர்மானிப்பதில் அதீத கவனம் செலுத்தவேண்டிய காலம் இது. உணர்ச்சிவசப்பட்டுக் கொடிகளின் கீழ் ஒன்றுபடும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். தென்னிலங்கையில் உருவாகும் புதிய ஒழுங்கு வடக்கு கிழக்கிலும் உருவாக இச்சந்தர்ப்பத்தை மக்கள் பாவித்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த இலங்கையின் இன்றைய நிலைக்கு 6.9 மில்லியன் சிங்கள மக்கள் எப்படிப் பொறுப்பானவர்களாகிறார்களோ அதே போன்று தமிழர் தரப்பும் தமக்கான பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். தரமான வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பதில் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் நகர்வு
புதிய ஒழுங்கு எப்படியான அரசியல் உருவாக்கத்தை (political morphing) எடுக்கப்போகிறது என்பது அறியப்படாதவரை இந்தியா ஒதுங்கியிருந்து அவதானிப்பது நல்லது. வெற்றிடத்தை நிரப்பப் பல புதிய, பழைய விசைகள் முயற்சிக்கலாம். ஆனால், இந்தியா எடுத்த தமிழர் சார் நிலைப்பாடு இன்னும் சிங்கள மக்கள் மனதில் ஆழமாகப் பதியப்பட்டிருப்பதால் என்னதான் அள்ளிக் கொட்டினாலும் அதை வாங்கிக்கொண்டு மீண்டும் இந்திய எதிர்ப்புடன் வீதிக்கிறங்க அவர்கள் தயாராகலாம். வயிறுகள் நிறைந்ததும் மனங்கள் காலியாவது வழக்கம்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கப் போகும் நிபந்தனைகள் பல கசப்பான மாத்திரைகளாக இருக்கப்போகின்றன என்பதில் சந்தேகமில்லை. எனவே தங்கள் மீட்பராகச் சிங்கள மக்கள் இந்தியாவை மீண்டும் நாடும் நிலை ஏற்படலாம். அப்போது இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தைப் பொருளாதார மீட்புடன் இணைத்து, சர்வதேசங்களின் அனுசரணையுடன் முன்னெடுப்பதே இன்னுமொரு ராஜபக்ச அரசியல் மீளவுருவாவதைத் தவிர்க்கும்.
ஒட்டு மொத்தமாக தென்னிலங்கையின் புதிய ஒழுங்கு, இலங்கையின் மீட்புக்கு இனங்களிடையேயான நல்லிணக்கம் அவசியமென்பதை உணருமானால் அதைச் செதுக்கியெடுக்க தமிழர் தரப்பும் தயாராக இருக்க வேண்டும். வைத்தால் குடுமி, வழித்தால் மொட்டை அரசியல் வென்றதாகச் சரித்திரம் இல்லை.