இலங்கையின் செயற்பாடு சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட உறுதிகளுடன் முரண்படுகிறது – மனித உரிமைகள் காப்பகம்
சிறுபான்மையினர், செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்படுகின்றனர்
2021 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை இனங்களின் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தும், செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தியும், ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்தியும் நடந்துகொண்டதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கு அது வழங்கியிருந்த வாக்குறுதிகளை மீறியிருக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தனது 2022 இற்கான உலக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“சட்ட சீர்திருத்தத்தை மேற்கொள்வதாக சர்வதேச சமூகத்துக்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அளித்திருந்த வாக்குறுதியைச் செயற்படுத்தாதது மட்டுமல்லாது முன்னர் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதோடு இவை தொடர்பாக முந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிலர் மீது எடுத்திருந்த நடவடிக்கைகளையும் அவர் மீள்வாங்கிக்கொண்டார். சர்வதேசங்களின் விமரர்சிப்பிலிருந்து தம்மைக் காப்பார்றிக்கொள்வதற்காக வாக்குறுதிகளை வழங்கிக்கொள்ளும் அதே வேளை சிறுபான்மைச் சமூகங்களின் மீதான ஒடுக்குமுறைகளை அவரது நிர்வாகம் முடுக்கிவிட்டிருந்தது” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்கூலி தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் வெளியிடும் இவ்வறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமார் 100 நாடுகள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற நடவடிக்கைகளை மீளாய்ந்து நிரற்படுத்தி வருகிறது. 752 பக்க 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கை அதன் 32 ஆவது பதிப்பாகும்.
தான் வழங்கியிருந்த வாக்குறுதிகளையே ராஜபக்ச அரசாங்கம் மீறி தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்களையும், போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர்களையும் உயர் பதவிகளுக்கும், மனைத உரிமைகள் ஆணையம், காணாமற்போனவர்களுக்கான அலுவலகம் போன்ற சுதந்திர அமைப்புக்களுக்கும் நியமிப்பதன் மூலம அவற்றின் சுதந்திரத்தையும் நம்பகத் தன்மையையும் இழக்கச்செய்துள்ளது இந்த நிர்வாகம்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்களும், ஊடகவியலாளர்களும், சட்டத்தரணிகளும், முன்னர் பாதிப்புக்குள்ளாகியவர்களின் உறவினர்களும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டதோடு அமைதியான ஆர்ப்பாட்டங்களைத் தஅடுத்துநிறுத்தியுமுள்ளது. ‘பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்யப்படுகிறது’ என்ற பொய்க் குற்றச்சாட்டுகளைக் கொண்டு பல சிவில் அமைப்புக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை பயங்கரவாத விசாரணைப் பிரிவு நிறுத்தியிருக்கிறது. அவர்களின் நடமாட்டங்களைத் தொடர்ந்து விசாரிப்பதன் மூலம் பொலிஸ் தொடர்ச்சியாக தொந்தரவுகளைக் கொடுத்து வருகிறது என அவ்வறிக்கை கூறுகிறது.