Sri Lanka

இலங்கையின் குடிமக்களைவிட சேஷெல்லியர் முக்கியமாகிவிட்டார்களா? – சஜித் பிரேமதாச கேள்வி

35 சேஷெல்ஸ் நாட்டு மக்கள் சிகிச்சைக்காக இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளார்கள்

கொழும்பு மே 26, 2020: குவெயித் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேற முயற்சிக்கும் இலங்கையர்களை விசேட விமானத்தில் இலங்கைக்குக் கொண்டுவரும் முயற்சியை அரசு கைவிட்டபோதும், சேஷெல்ஸ் நாட்டுக் குடிமக்களை இலங்கைக்குக் கொண்டுவந்து மருத்துவம் செய்வதற்கு இணங்கியிருப்பது குறித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒரு நாடு தன் மக்களைப் பாதுகாப்பதற்குக் கடப்பாடு கொண்டது. ஆனால் எமது நாடோ தனது நாட்டு மக்களை உதாசீனம் செய்துவிட்டு, சேஷெல்ஸ் நாட்டு மக்களுக்கு அனுதாப ரீதியில் முன்னுரிமை வழங்கியிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்.

“உங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பில்லையா? என நான் அரசைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன். எமது நாட்டு குடிமக்கள் குவெயித்திலும், இதர மத்திய கிழக்கு நாடுகளிலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, நாடு திரும்புவதற்காக வாடுகிறார்கள். இதை இந்த அரசு கண்டுகொள்ள மறுக்கிறதா?



“பல இலங்கையர்கள் வாடிக்கொண்டிருக்கும்போது சேஷெல்ஸ் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? இதில் என்ன மர்மம் இருக்கிறது? அவர்களை நாட்டுக்குள் அனுமத்தித்ததின் பின்னால் உள்ள சூக்குமம் என்ன? ஏன் திடீரென்று இந்த அனுமதி வழங்கப்பட்டது? இதே அனுதாபம் உங்கள் நாட்டு மக்களில் காட்டியிருக்க முடியாதா? அவர்களது வலியை உங்களால் உணரமுடியாதா?

“இவர்கள் தேசபக்தர்கள். தேர்தலின் பின்னர் உங்கள் தேசபக்தர்களை மறந்துவிட்டீர்களா?” என சஜித் கேள்வியெழுப்பியுள்ளார்.

சேஷெல்ஸ் நாட்டிலிருந்து 35 பேரை இலங்கை அரசு அனுதாபத்தின் பேரில் இலங்கை மருத்துவமனைகளைல் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்துள்ளது. சேஷெல்ஸ் நாட்டின் மருத்துவ வசதிகளைவிட இலங்கையில் மிகத் திறமையான வசதிகள் உண்டென்ற காரணத்தினால் அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டார்கள் என வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் காண்டீபன் பாலசுப்ரமணியம் சமீபத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கும் சேஷெல்ஸ் நாட்டுக்குமிடையேயுள்ள உறவை மேம்படுத்தும் முகமாக, மனிதாபிமான ரீதியில் அந்நாட்டு மக்களைச் சிகிச்சைக்காக இங்கு கொண்டு வத்தோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மாலைதீவும் தனது நாட்டுமக்களை இலங்கைக்கு அனுப்பி சிகிச்சை செய்ய விரும்புவதாக அறியப்படுகிறது.

இதே வேளை, குவெயித்தில் இலங்கை வரக்காத்திருப்பவர்களில் 70 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதால் அவர்களை விசேட விமானமூலம் இலங்கைக்குக் கொண்டுவர இருந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.