இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட அனுமதியோம் – சீனா

Spread the love

ஜனவரி 15, 2020

ஜனாதிபதி ராஜபக்ச சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன்

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடுவதற்கு சீனா அனுமதிக்காதென இலங்கைக்கு உறுதியளிக்கிறோம் என இலங்கை வந்துள்ள அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் பிரதான பங்காளியாகவிருந்து, அதன் இறைமை, ஒருமைப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றைப் பேணுவதற்குத் தாம் எப்போதும் துணையாகவிருப்போம் என அமைச்சர் வாங் மேலும் தெரிவித்தார்.

நேற்றுக் காலை ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்த பின்னர் அமைச்சர் வாங் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவுக்கு அளித்த பேட்டியின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார விடயத்தில் இலங்கை சுதந்திரமாக இருக்கவேண்டுமென்ற ஜனாதிபதி ராஜபக்சவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பாக, அடுத்த மாதம் அவரது சீனா வருகையின் போது, தொழில்நுட்பம், சுற்றுலா, உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பான துறைகளில் எப்படி உதவிகளைச் செய்யலாம் என ஆலோசிக்கப்படும் என அமைச்சர் வாங் தெரிவித்தார்.

“இலங்கையின் நிலப்பரப்பு சிறியதாகவிருந்தாலும் அது பொருளாதார ரீதியாக விரைவில் பலமாந நாடாக மாறும். இலங்கை இக் குறிக்கோளை எய்துவதற்கு சீனா பக்கபலமாகவிருக்கும்” என அமைச்சர் வாங் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் பழைய நண்பன் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையிட்டு அவர் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜனாதிபதி ராஜபக்சவுடன் மேற்கொண்ட உரையாடலுக்குப் பிறகு, ஏற்கெனவே இரு நாடுகளிடையேயும் இருக்கும் பரஸ்பர உறவை மேலும் உறுதியாக்கிக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறதென அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்சவும் அமைச்சர் வாங்கின் வருகையை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றதோடு, ஜனாதிபதி (சீனாவின்) சி ஜிங்பிங் தனது பெருமதிப்புக்குரியவர் எனவும் ஜனாதிபதி சி யின் வறுமை ஒழிப்புக் திட்டங்களைத் தானும் தனது கொள்கைகளில் ஒன்றாக வரித்துக்கொண்டதாகவும் ராஜபக்ச தெரிவித்தார். சீனாவுக்கு வருகைதரும்படி தன்னை அழைத்ததற்கு அமைச்சர் வாங்க் கிற்கு அவர் நன்றி தெரிவித்தார். தான் பல தடவைகள் சீனாவுக்குச் சென்று வந்ததைக் குறிப்பிட்டு “சீனா தனக்கு அன்னியமானதல்ல” எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இலங்கையின் பூகோள நிலைப்பாடு காரணமாக அது அரசியல் ரீதியாகப் பல சவால்களை எதிர்நோக்குகிறது எனவும், பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான நாடாக உருவாகுவதன் மூலமே அரசியல் ரீதியாகவும் சுதந்திரமடையலாம் எனவும் ராஜபக்ச தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>