இலங்கையர்களே தீர்வைக் காணவேண்டும், வெளிநாட்டாரல்ல – எரிக் சொல்ஹெய்ம்

கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்காக முன்னாள் சமாதானப் பேச்சாளர் எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டி | பேட்டி கண்டவர் கலானி குமரசிங்க

கே: சமாதானப் பேச்சுவார்த்தையப் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?

அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரும், தம்மிடையே சமாதனப் பேச்சு வார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்காக 1998 இல் நோர்வேயை அணுகினார்கள். நோர்வே தூர தேச நாடாக இருந்த படியாலும், இலங்கை மீது எதுவித அக்கறையும் கொண்ட ஒரு நாடல்ல என்பதாலும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இணக்கமாக இருந்த படியாலும் அவர்கள் நோர்வேயை அணுகியிருந்தார்கள்.

முதலிரு வருடங்களில் கொழும்பில் எல்லாமே இரகசியமாக நடைபெற்றன. விடுதலைப் புலிகள் தரப்பின் முயற்சிகளை ஜனாதிபதி சந்திரிகாவும், வெளி விவகார அமைச்சர் கதிர்காமரும் மட்டுமே அறிந்திருந்தார்கள். 2000 ஆம் ஆண்டில் புலிகள் சந்திரிகா மீது தாக்குதல் தொடுத்ததைத் தொடர்ந்து உயிர் பிழைத்திருந்தார். அதன் பிறகே அவர் எமது சமாதான முயற்சிகளைப் பகிரங்கப் படுத்தினார். 2001, 2002 இல் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. முதலிரு வருடங்களில் அது ஆச்சரியப்படத் தக்க வகையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இரு தரப்பிலும் எவருமே கொல்லப்பட்டிருக்கவில்லை.

ஒஸ்லோ பிரகடனம் என அழைக்கப்பட்ட இவ்வொப்பந்தம் இலங்கைப் பிரச்சினைக்கு சமஷ்டி அமைப்பு மூலம் தீர்வு காண்பதை மையமாகக் கொண்டிருந்தது. இது நடைபெற்றபோது விடுதலைப் புலிகள் அவர்களது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார்கள். பலம் குன்றி இருந்த காரணத்தினால் தான் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு இழுத்துவரப் பட்டார்கள் என கொழும்பிலிருந்த பலர் அப்போது கூறினார்கள். ஆனால் புலிகள் அப்போதுதான் ஆனையிறவைக் கைப்பற்றி யாழ் குடாநாட்டிலிருந்து அனைத்து இராணுவத்தினரையும் வெளியேற்றத் தயாராக இருந்தார்கள். விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய முடக்கத்தைக் கொண்டுவந்திருந்தது. எனவே. சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலத்தில் அவர்கள் அதியுச்ச பலத்தோடு இருந்தார்கள் என்றே கூறுவேன்.

படிப்படியாக சமாதான முயற்சிகள் குழப்பமடைந்துபோய் இருதரப்பிலும் கொலைகள் ஆரம்பித்தன. அரச தரப்பைவிடப் புலிகள் அதிகம்பேரைக் கொன்றார்கள். மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்ற காலம் தொடக்கம் அவரது ஆட்சியைக் குழப்புவதற்காகக் புலிகள் பல தெருவோரக் குண்டுகளை வெடித்தார்கள். அதே வேளை மஹிந்த ஆட்சிக்கு வருவதற்குப் புலிகளே காரணமாகவும் இருந்தார்கள்.

கே: இலங்கை அரசியல் தலைமைகளிடம் தூராப் பார்வை இல்லாமையால் தான் தீர்வொன்றைப் பெற முடியாமல் போய்விட்டது எனக் கூறினீர்கள். அதைபற்றி சற்று விரிவாகக் கூற முடியுமா?

கொழும்பிலிருந்த இரு பெரும் அரசியல் கட்சிகளான யூ.என்.பி. யும், எஸ்.எல்.எஃப்.பி. யும் ஒருபோதும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர்கள் பாராளுமன்றத்துக்காகவும் ஆட்சிக்காவும் எப்போதும் போட்டியிடுபவர்களாகவே இருந்தார்கள். இந்த இரு கட்சிகளாலும், ஒரு பொது வேலைதிட்டத்துக்காக இணங்க முடியாமலிருந்தமை சமாதான முயற்சிகளுக்குக் குந்தகமாக இருந்தது. யூ.என்.பி.யின் முயற்சியால் இணக்கம் காணப்பட்டால் அதை மற்றக் கட்சிக்காரர் குழப்பிவிடுவார்கள் என அவர்கள் பயந்தார்கள். அப்படித் தான் மற்றத் தரப்பும். புலிகளுடன் ஒரு இணக்கப்பாட்டைக் காண்பதை விட்டுவிட்டு இரண்டு கட்சிகளும் தமக்கிடையே சண்டை பிடிப்பதிலேயே அதிக சக்தியை விரயம் செய்தார்கள்.

கே: பின்னோக்கிப் பார்க்கையில், ஒரு சமாதான இணைப்பாளர் என்ற வகையில் எப்படி வித்தியாசமான முறைகளில் விடயங்களை அணுகியிருக்கலாம் என இப்போது எண்ணுகிறீர்கள்?

இந்த இரண்டு பிரதான கட்சிகளையும் திருப்திப்படுத்த நோர்வேயினால் முடியாமல் போய்விட்டது. சில வேளைகளில் இந்தியாவோடு கொஞ்சம் நெருக்கமாகப் பணியாற்றியிருக்கலாமோவென்று எண்ணுகிறேன். கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளுடன் பேசுவதைவிட வெளிநாடுகளோடு நாங்கள் அதிகம் பணியாற்றியிருக்க வேண்டும். இலங்கையில் உள்ள மதத் தலைவர்களுடன் நாங்கள் கூடுதலாகப் பணியாற்றியிருக்கலாம். நான் பல தடவைகள் கண்டிக்குச் சென்று அங்குள்ள மஹாநாயக்கர்களோடு பேசியிருக்கிறேன். பெளத்த தலைவர்களோடு அதிக தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் எந்று தோன்றுகிறது. இலங்கையில் மதம் பல வழிகளிலும் மக்களின் வாழ்வோடு பிணைந்திருக்கிறது.

பிரபாகரனை அதிக தடவைகள் சந்திக்க எமக்கு அனுமதி தந்திருக்க வேண்டும். பிரபாகரனை அதிகம் பேர் சந்தித்திருக்க நாம் வழிசெய்து கொடுத்திருக்க வேண்டும். அவரது பார்வை மிகவும் ஒடுக்கமானது. அவர் இந்தியாவை அதிகம் புரிந்திருக்கவில்லை. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை க் கொன்றது ஒரு முட்டாள்தனமான குற்ற நடவடிக்கையைப் போன்றது. உலகத்தைப்பற்றிய அவரது புரிதல் மிகவும் குறைவானது. அவரைப் பலர் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய தலைவர்களைப் பிரபாகரனைச் சென்று பார்க்கும்படி நாம் வற்புறுத்தினோம். ஆனால் அரசாங்கம் அதற்குத் தடைவிதித்து விட்டது. பிரபாகரனை வெளியார் பார்ப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. நானும் சில நோர்வேஜியர்களும் மட்டுமே அவரைச் சந்தித்த வெளிநாட்டுக்காரர்கள். எனக்குத் தெரிய, அந்த 15 வருடங்களில் பிரபாகரன் ஒரு சிங்களவரையயோ அல்லது இந்தியரையோ சந்தித்திருக்கவில்லை. அவர் சந்த்தித்த அனைவரும் தமிழர்களே. வேற்றினத்தவர்களைச் சந்தித்திருந்தால் உலகம் பற்றிய வித்தியாசமான பார்வை அவருக்கு கிடைத்திருக்கும்.

கே: பிரபாகரனுக்கு அரசியல் தெளிவோ, பூகோள அரசியலறிவோ இல்லை எனப் பலதடவைகள் கூறியுள்ளீர்கள்.அவரோடு அதிக நேரம் சந்திக்க முடிந்திராதபோது அவரது அறிவு பற்றி எப்படி உங்களால் மதிப்பீடு செய்ய முடியும்? தெளிவாக்க முடியுமா?

நான் பிரபாகரனுடன் நீண்ட நேரங்களைச் செலவழித்திருக்கிறேன். ஆனால் முதன்மைப் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்துடனேதான் மிக நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன்.

ஐரோப்பியர்களுடனோ, அமெரிக்கர்களுடனோ, இந்தியர்களுடனோ அல்லது இதர நாட்டவர்களுடனோ அவர் சந்தித்துப் பேசியிருந்தால் வித்தியாசமான ஒப்பீடுகளை அவர் செய்துகொண்டிருப்பார்.

நான் பிரபாகரனுக்கு வித்தியாசமான பார்வைகளைப் பற்றிக்கூறியிருந்தால் அவற்றை என்னிடமிருந்து கேட்பதற்கு அவர் மறுத்திருப்பார். சமாதானப் பேச்சுவார்த்தயின்போது அன்ரன் பாலசிங்கம் ஒரு ஹீரோ என்பேன். பிரபாகரன் சில வேளைகளில் அன்ரன் பாலசிங்கம் சொல்வதைக் கேட்பார், சில வேலைகளில் கேட்கமாட்டார். அப்படிக் கேட்காதபோது அவர் பல தவறுகளை இழைத்திருக்கிற்ரார். மரபுவழி இராணுவமாக மாறாமல் கெரில்லா படையாக இருக்கும்படி அன்ரன்பாலசிங்கம் கூறியதைக் கேட்காதமையினால் தான் 2009 இல் அவரது போராட்டம் முடிவுக்கு வந்தது. பாலசிங்கம் முனவைத்த ஆலோசனை முற்று முழுதாக சமஷ்டி முறையான ஒன்றல்ல.

கே: விடுதலைப் புலிகளை அரசாங்கம் தோற்கடித்த பிறகு, தனது தேவைகளுக்காக அது இஸ்லாமிய வெறுப்பைக் காரணமாகக் காட்டி முஸ்லிம்களைத் தனது புது எதிரியாக வரித்துக்கொண்டிருக்கிறதா?

இதற்கு இரண்டு பார்வைகளுண்டு. முஸ்லிம் பயங்கரவாதம் என்பது நிஜமான ஒன்று. உயிர்த்த ஞாயிறு தினத்திலன்று பல கொடுமையான கொலைகள் நடந்தேறின. அரசாங்கம் அதைத் தீவிரமாக எடுத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாதக் குழுக்கள் மீது அதிக அவதானம் செலுத்த வேண்டும். சில வேளைகளில் அவர்கள் வெளிநாட்டுக்காரரால் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதைவிட முஸ்லிம் மக்களையும். இலங்கையிலுள்ள நான்கு மதங்களையும் மரியாதையோடு நடத்துவது மிகவும் அவசியம். இலங்கையில் அனைத்து மதச் சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்களை இணைத்து நடப்பதும் அவர்களை எதிரிகளாக நடத்தாமல் இருப்பதும் முக்கியமானது.

கே: இனப்போர்க் காலத்திலும் முஸ்லிம்கள் அரசுடனேயே இருந்தார்கள். ஒருபோதும் அரசுக்கு எதிராக அவர்கள் இயங்கவில்லை. தேவாலயத் தாக்குதல்களுக்கு முன்பதாகவே புத்த துறவிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் போவதைப் பார்க்கும்போது அது இஸ்லாமிய அச்சம் காரணமானது போல எனக்குத் தெரிகிறது. இல்லையா?

சமாதானப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம்கள் தமக்குத் தனியான பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கோரினார்கள். ‘இது புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நடக்கும் இருதரப்புப் பேச்சுவார்த்தை’ எனக்கூறிப் புலிகள் அதை நிராகரித்துவிட்டர்கள். அதன் விளைவு, முஸ்லிம் தலைவரான ராவுஃப் ஹக்கிமை அரசாங்கம் தமது பிரதிநிதிகளில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டது. இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் தனிநாட்டுக் கோரிக்கையை ஒட்டுமொத்தமாக நிராகரித்திருந்தது.

கே: போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு ஐ.நா.மனித உரிமைகள் சபை தீர்மானங்கள் மூலம் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன, ஆனால் அவற்றின் மூலம் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக மிகச் சொற்பமான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை மீளெழுப்ப உங்களைப் போன்ற வெளிநாட்டுக்காரர்களால் என்ன செய்ய முடியும்?

இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையர்களே தீர்வைக் காணவேண்டுமென்பதையே நான் நம்புகிறேன். வெளிநாட்டார் தேவையில்லை. எப்படியிருந்தாலும் இலங்கை சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் ஆகிய மூவருக்குமுரிய நாடு. அது இந்தியருடையதோ, ஐரோப்பியருடையதோ அல்லது அமெரிக்கர்களுடையதோ அல்ல. எனவே தீர்வு உள்ளகமாகவே காணப்பட வேண்டும். சர்வதேச சமூகம் இதற்கு ஆதரவை மட்டுமே தர முடியும். ஒப்பீட்டளவில் இந்தியா ஒன்றே இதில் சம்பந்தப்படக்கூடிய முக்கியமான வெளிநாடு. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கான சுய நிர்ணய உரிமையை வழங்கும் 13 வது திருத்தத்தையே அவர்கள் வற்புறுத்துகிறார்கள். அதை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமானால் இந்த உலகத்தின் மூலை முடுக்கெல்லாமிலிருந்து அதற்கு ஆதரவு கிடைக்கும். அமெரிக்காவோ, ஐரோப்பாவோ அல்லது சீனாவோ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டாது.

கே: 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் முன்மொழியப்பட்ட தீர்மானம். நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அது பல எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. பொறுப்புக் கூறல் முயற்சிகள் மூலம் மனித உரிமைகள் சபயின் தலையீடு நல்லிணக்கத்தைக் கொண்டுவருமென நான் நம்பவில்லை. அது சமூகங்களை மேலும் தூரத் தள்ளிவிடுகிறது.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தபோது இப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும்படி கேட்டிருந்தார். அவர் அதைத் திணிக்கவில்லை. தமிழர் அதிகமாக வாழும் மாகாணங்களில் அவர்களுக்கான சுய ஆட்சியை அங்கீகரிக்கும்படி மட்டுமே அவர் கேட்டிருந்தார். தமது நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படக்கூடாது எனபதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

அந்தக் காலத்தில் சிங்கள மக்களிடமிடமிருந்தும், சில வேளைகளில் தீவிரவாதிகளிடமிருந்தும், என்மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது அதைவிட மோசமாக, ‘நான் தான் பிரபாகரனைக் கொன்றேன் எந விடுதலைப் புலிகளிந் ஆதரவாளர்களால் நான் விமர்சிக்கப்படுகிறேன். இவ் விமர்சனங்கள் எல்லாம் முற்றிலும் பெறுமதியற்றவை. அவற்றைபற்றி நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. இது மக்களின் வாழ்வும் சாவும் சம்பந்தப்பட்டது. இலங்கைக்கு அமைதியைக் கொண்டு வந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். அதில் நாங்கள் வெற்றியடையமுடியாமல் போய்விட்டது தான் எனது மிகப்பெரிய கவலை. அதனால் பெருந்தொகையான இலங்கை மக்கள் இறக்க நேரிட்டுவிட்டது

கே: உங்கள் தரப்பில் ஏதாவது தோல்விகளைப் பற்றி வருந்தியதுண்டா?

எங்களால் எதையுமே திணிக்க முடியவில்லை. ஜனாதிபதி சந்திரிகா மீதோ அல்லது திரு பிரபாகரன் மீதோ சமாதானத்தைக் கொண்டுவருமபடி அழுத்தத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. இரு தரப்பும் எங்களுக்குத் தந்த கட்டளைகளை மட்டுமே நாம் செய்யக்கூடியதாகவிருந்தது. சமாதானத்துக்காகப் போரிடுவதை நிறுத்தும்படி நான் யாரிடமும் கூறமாட்டேன். உலகில் இன்று பல போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சமாதான முதயற்சி அது ஆபத்தான விடயம் தான். அநேகமான சந்தர்ப்பங்களில் அது தோல்வியையே சந்திக்கும். ஆனாலும் அதற்காக சமாதானம் செய்துவைப்பவர்கள் அதிகம் இவ்வுலகுக்கு வேண்டும்

கே: இலங்கையில் இன்னுமொரு ஆயுதப் போராட்டம் தோன்றுவதற்கான சாத்தியமுண்டா?

  Q   Would there be another armed struggle in Sri Lanka?

இலங்கையில் இன்னுமொரு ஆயுதப் போராட்டம் நடைபெறுமென நான் நிநைக்கவில்லை. மக்கள் ஆயுதப் போராட்டத்தினால் சலிப்படைந்து விட்டர்கள். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமையே போருக்குக் காரணம் என நான் நினைக்கிறேன். தமிழரின் பார்வையில் இலங்கை எப்படி இருக்கிறது என அறிந்தால் சிங்கள் மக்கள் இப் பிரச்சினையை இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். தமிழர்கள் தமது நாட்டிலேயே இதண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். ஒரு பொலிஸ் ஸ்டேசனில் போய் அதிகாரிகளுடன் தமது மொழியில் பேசமுடியாதுள்ளார்கள். இலங்கை முன்னேற வேண்டுமானால் தமிழ்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்,

கே: புலம்பெயர்ந்த இலங்கையர்களுடன் உறவைப் புதிப்பிப்பது பற்றி நீங்கள் எந்ந நினைக்கிறீர்கள்? அதில் முதலீடு செய்வது முக்கியமெனக் கருதுகிறீர்களா?

புலம்பெயர் இலங்கையர்கள் முக்கியமான பங்கை ஆற்றவேண்டியவர்களாக இருக்கிறர்ர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாக இருப்பினும் சில சிங்களவர்களும் உள்ளார்கள். இவர்கள் எலோரும் ஓரளவு சிறப்பாக வாழ்கிறார்கள். மிகவும் உயர்ந்த கல்வியைக் கற்றவர்கள். எனது நாடான நோர்வேயில், இளம் தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் நோர்வேஜியர்களைவிடத் திறமையாகச் செயலாற்றுகிறார்கள். கனடா, ஜேர்மனி, பிரித்தானியா எங்கும் இதே நிலைமை தான். இப்படியானவர்களின் திறமைகளை இலங்கையில் நல்ல பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், வேலைவாய்ப்புகளிலும், தொழிற்சாலைகளிலும், சுற்றுலாத் துறையிலும் முதலிட்டால் இலங்கையை அது முன்நோக்கி நகர்த்தும். சமாதான முயற்சிகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கவேண்டும் ஆனால் அம் முயற்சிகள் இலங்கையர்களாலேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் புலம்பெயர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளை அவர்களது விமர்சன, அறிவுசார் மற்றும் தார்மீக ஆதரவும் அவசியமானவை