கண்டி அரண்மனையில் புதனன்று மந்திரிசபை சத்தியப்பிரமாணம்!
ஆகஸ்ட் 9, 2020:
புதிய மந்திரிசபை புதனன்று கண்டியில் சத்தியப்பிரமாணம்
வெள்ளியன்று சத்தியப்பிரமாணம் எடுப்பதாக இருந்த நிகழ்வு புதன் கிழமைக்கு முற்போடப்பட்டிருக்கிறதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந் நிகழ்வு, கண்டி அரச மாளிகையின் மக்கள் அரங்கில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடவை மந்திரிசபை குறுகிய எண்ணிக்கையைக் கொண்டிருக்குமெனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் அமைச்சுகள் வழங்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ச பிரதமராகச் சத்தியப் பிரமாணம்
இலங்கையின் 16 வது பாராளுமன்றத்தின் பிரதமராக, சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் எடுத்தார்.

களனி ராஜமஹா விஹாரவில் நடைபெற்ற இவ் வைபவத்தில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராகச் சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளார்.
குருநாகலை மாவட்டத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர்கள் இன்று தேர்தல் ஆணையத்தின் மூலம் வர்த்தமானி அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
19 வது திருத்தத்தை மாற்றியமைக்க சமாகி ஜன பலவேகய ஆதரவளிக்கும் – சஜித்

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு சமாகி ஜன பலவேகய கட்சி ஆதரது தருமெனவும் ஆனால் அதை முற்றாக நீக்குவதற்கு தாம் ஆதரவு தரப் போவதில்லை எனவும் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கணிசமான அலவு குறைக்கப்பட்டதும், சுயாதீன நிறுவனங்கள் அரசியல் தலையீடு இலாது தொடர்ந்து செயற்படுவதற்கு வழைவகுத்தமையும் அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்.
“இலங்கையில் சகல இனங்களும் சமத்துவமானவை, அவற்றில் எதையுமே சிறுபான்மை இனமென்று கூறக்கூடாது என்பது அரசியலமைப்பின் 19 வது திருத்தத்திந் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை நாம் மாற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம். மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளை, நாட்டின் இறைமை, பாதுகாப்பு ஆகியவற்றையும் எமது கட்சி பாதுகாக்க உறுதிபூண்டுள்லது” என சஜித் பிரேமதாச ஊடகங்கள் முன்னிலையில் பேசும்போது குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்கிறார்

பொது பல சேனாஅமைப்பின் தலைவர் கலகொடத்த ஞானசார தேரருக்கு, தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படுவதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. “எங்கள் மக்கள் சக்தி” கட்சி மூலம் அவர் இப் பதவியைப் பெறுகிறார்.
நடந்து முடிந்த தேர்தல்களில் எங்கள் மக்கள் சக்தி கட்சி 67,758 வாக்குகளைப் பெற்றிருந்தது. இதன் மூலம் அக் கட்சிக்கு 1 ஆசனம் தேசியப் பட்டியலில் கிடைக்கிறது.
ரணில் தேசியப் பட்டியல் மூலம் உறுப்பினராவதற்கு மறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சி, இத் தேர்தலில் ஒரு ஆசனத்தையேனும் பெறாத நிலையில், அக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நியமனத்தைக் கட்சித் தலைவர் என்ற முறையில் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் “43 வருடங்களாகப் பாராலுமன்ற உறுப்பினராக இருந்த நான் பின் கதவால் பாராளுமன்றம் போக விரும்பவில்லை” எனக் கூறி அவர் அப் பதவியைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந் நிலைப்பாடு, கட்சியில் மீண்டும் உட்பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சி விதிகளின்படி, யாருக்கு இந் நியமனப்பட்டியல் மூலம் பதவி கிடைக்கிறதோ, அவரே கட்சியின் தலைவாராகவும் இருக்க வேண்டும்.
இந் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் காரியவாசம் நியமனப் பட்டியல் இடத்தைப் பெற விரும்புவதாகவும், ஆனால் கட்சி நிர்வாகத்துக்கு அதில் அதிக இஷ்டமில்லை எனவும் அறியப்படுகிறது. இதே வேளை, இப் பதவியை ருவான் விஜேவர்த்தனாவுக்குக் கொடுப்பதற்குக் கட்சியின் நிர்வாகம் விரும்புவதாகவும், அவருக்கு அப்பதவியைப் பெறுவதற்கான பாரம்பரை உரிமை உண்டெனவும் கூறப்படுகிறது.