இலங்கைத் தமிழ் நடிகர் செல்வரத்தினம் சென்னையில் வெட்டிக் கொலை
தேன்மொழி பி.ஏ. தொலைக்காட்சித் தொடரில் வில்லனாக நடித்துவந்த இலங்கையைச் சேர்ந்த, 41 வயதுடைய, நடிகர் செல்வரத்தினம் கடந்த ஞாயிறன்று சென்னை எ,ஜி.ஆர். நகரில் விட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அகதியாகத் தமிழ்நாட்டிற்கு வந்த செல்வரத்தினம் அவரது நண்பரும் உதவி இயக்குனருமான மணி என்பவருடன் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினத்தன்று செல்வரத்தினத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் ஆனால் அவ்வழைப்பு பற்றிய விபரம் எதையும் மணிக்குச் சொல்லாமல் அவர் வெளியே போனார் எனவும் மணி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவர் புறப்பட்டுப் போய்ச் சிறிது நேரத்தில் மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் செல்வரத்தினம் கொலைசெய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டதகாவும் அவர் இதுபற்றிப் பொலிசாருக்குத் தகவல் கொடுத்ததாகவும் தெரிகிறது. ஞாயிறு அதிகாலை இக் கொலை நடைபெற்றிருக்கிறது.
வீதிக் கமராவின் பதிவுகள், ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் ஒரு ஆட்டோவில் வந்த நான்கு ஆண்கள் செல்வரத்தினத்துடன் வாக்குவாதப்பட்ட பின்னர் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்வரத்தினத்தின் மனைவியும் பிள்ளைகளும் விருதுநகரில் வாழ்ந்து வருகிறார்கள் எனவும் அவர் கடந்த 10 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் சிறிய பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் எனவும் தெரியவருகிறது. தேன்மொழி பி.ஏ. நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் 2019 முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இக் கொலை தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.