IndiaNews

இலங்கைத் தமிழ் அகதிகளுட்பட 2 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

எதிர்வரும் 2022 தைபொங்கல் தினத்தை முன்னிட்டு, 20 பண்டங்களை உள்ளடக்கிய பொங்கல் பரிசொன்றை அன்பளிப்பாக வழங்கும் திட்டமொன்றைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரிசி மற்றும் குடும்ப அட்டைகளை வைத்திருக்கும் அனைத்து தமிழ்நாட்டுக் குடும்பங்களுக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்குமாக மொத்தம் 2 கோடி குடும்பங்களுக்கு இப் பரிசு வழங்கப்படவுள்ளது.



டிசம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்ட அரசாணையின் பிரகாரம் வழங்கப்படவிருக்கும் இவ்வுணவுப் பொதியில் அரிசி, சர்க்கரை, முந்திரிப்பருப்பு, பாசிப்பயறு, முந்திரிவத்தல், ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை, முழு அளவிலான கரும்பு ஆகிய பண்டங்கள் அடங்கும். இவை அனைத்தையும் துணியாலான அல்லது மஞ்சப்பாயிலான பைகளில் வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளின் பாவனையைத் தவிர்க்கும் முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்க அரசு முன்வந்துள்ளது.

ஜனவரி 3 அன்று ஆரம்பிக்கப்படவிருக்கும் இத் திட்டத்தின்படி 2,15,48,060 குடும்பங்களுக்கு (சுமார் 22 மில்லியன்) குடும்பங்களுக்கு வழங்கப்படவிருக்கும் இப்பொதிகளுக்கான செலவு 2.15 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும்.

இப் பொங்கல் பரிசுத் திட்டம் முந்தய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால், கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக, அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இத் திட்டத்தின் பிரகாரம், அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் வகியில் உணவுப் பொருட்களும் பண உதவியும் வழங்கப்பட்டது.