இலங்கைச் செய்திகள்
20 வது திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 20 வது திருத்த சட்ட மூலம் நேற்று (22) பாராளுமன்றத்தின் முதல் வாசிப்பில் நிறைவேறியது.
பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகய அங்கத்தவர்களின் எதிர்ப்பின் மத்தியில், நீதி அமைச்சர் அலி சப்றியினால் இச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
சமாகி ஜன பலவேகய அங்கத்தவர்கள் கறுப்பு கைப்பட்டிகளையும், ‘No to 20’ எனப்படும் வாசகத்தைக் கொண்ட ‘பாட்ஜுகளையும்’ அணிந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சிலர் 20 வது திருத்தத்தை மறுக்கும் வாசகங்களுடனான பதாகைகளையும் வைத்திருந்தனர்.
பலத்த ரகளையின் மத்தியில் 20வது திருத்த சட்ட மூலத்தின் முதலாவது வாசிப்பு சபையில் நிறைவேற்றப்பட்டது.
பிள்ளையானுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்), பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கான இணைத் தலைமை பதவியை வழங்கியுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்திற்குச் சமூகமளித்திருந்த சந்திரகாந்தனுக்கு, இப் பதவிக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ராஜப்கச வழங்கினார்.
சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினராவதற்காக கனடிய குடியுரிமையைத் துறந்தார்

முந்நாள் வட மாகாண ஆளுனரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் தனது கனடிய குடியுரிமையைத் துறந்த பின்னரே அரசியலுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா பொதுஜன பெரெமுன கட்சியின் நியமன உறுப்பினராக அவர் பாராளுமந்றம் செல்கிறார்.
TV 1 தொலைக்காட்சியின் ‘Face the Nation’ நிகழ்ச்சியில், 20 வது திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமை பற்றிக் கேட்டபோது, “காலி மாவட்ட பா.உ. கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையுடன் உறுப்பினராக இருக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் போலல்லாது தான் அரசியலில் ஈடுபடுவதற்காகக் கனடிய குடியுரிமையைச் சுய விருப்பத்திலேயே துறந்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.