IndiaNews & AnalysisSri Lanka

இலங்கைக் கடலில் இந்திய மீனவரை அனுமதிக்க தேவானந்தாவுக்கு அதிகாரமில்லை – கம்மன்பில

இலங்கைக் கடலில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என அரசாங்க வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

“மந்திரிசபையின் அனுமதியில்லாது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தவினால் தனியாக அப்படியொரு கொள்கையை வரித்துக்கொள்ள முடியாது. இது தொடபாக அமைச்சர் தேவாநந்தா அமைச்சரவைக்கு எதுவித முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை” என அரசாங்கத்தின் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவருக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்ததையடுத்தே கம்மன்பில ஊடகங்களுக்கு இச் செய்தியைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடற்படைக்கு எவ்வித அறிவிப்பும் தரப்படவில்லை எனவும், அத்துமீறி இலங்கைக் கடலெல்லைக்குள் நுழையும் இந்தியப் படகுகளைத் தாம் தொடர்ந்தும் தடுத்து வைப்போம் என கடற்படைத் தலைவர் இண்டிகா டி சில்வா தெரிவித்திருந்தார்.

மார்ச் 25 அன்று 5 படகுகளில் இலங்கைக் கடலெல்லைக்குள் வந்த 54 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்து பின்னர் விடுவித்திருந்தது.

 

இந்திய காவற்படகினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் படகு

அதே வேளை, இன்று ஈரானிலிருந்து இலட்சதுவீப தீவுகள் மூலம் கடத்தப்படதெனக் கருதப்படும் 300 கி.கி. ஹெரோயின் போதைப்பொருட்கள் மற்றும் 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 ரவுண்டு ரவைகளுடன், 5 இலங்கையர்களைக் கொண்ட படகொன்றை இந்திய காவற்படகு கைதுசெய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள்: எல்.வை. நந்தனா, எச்.கே.ஜீ.பி. தேசப்பிரிய, ஏ.எச்.எஸ். குணசேகர, எஸ்.ஏ.சேனரத், ரி.ரணசிங்க, டி.நிசாங்க ஆகியோராவர்.

இதற்கு முன்னர், மார்ச் 18 ம் திகதி, போதைப்பொருள், ஆயுதங்கள் சகிதம் 19 இலங்கையரை இந்தியா கைதுசெய்திருந்தது.

இப் போதைப்பொருளும், ஆயுதங்களும் ஈரானிலிருந்து கடத்தி வரப்பட்டு நடுக்கடலில் வைத்து இலங்கைப் படகுக்கு மாற்றப்பட்டன எனவும், இது பற்றித் தமக்கு முற்கூட்டியே கிடைத்த தகவலைக்கொண்டு தாம் இப்படகைக் கைப்பற்றியதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.