Sri LankaWorld

இலங்கைக்கு ஜேர்மனி 11 மில்லியன் யூறோ தொழில்நுட்ப உதவி

கொழும்பு ஜூன் 10, 2020: மூன்று திட்டங்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான 11 மில்லியன் யூறோ நிதியுதவியை, ஜேர்மனியிடமிருந்து பெறுவதற்கான ஒப்பந்தம் இலங்கை – ஜேர்மனி அரசுகளிடையே இன்று கைச்சாத்திடப்பட்டது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதில் 7 மில்லியன் யூரோக்கள், இலங்கையில் தொழிற்கல்வியைப் போதிக்கப் பயன்படும். தேவைகளுக்கேற்றவாறு கூட்டுறவு முறையில், இளையவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். மேலும் 3.5 மில்லியன் யூரோக்கள், இலங்கையின் சிறிய, நடுத்தரவர்க்க தொழில் முயற்சி ஆரம்பங்களுக்காக உபயோகிக்கப்படும். உலக தரத்தில் இலங்கை போட்டியிடும் அளவுக்கு அதை உயர்த்துவதற்கு இந் நிதி பாவிக்கப்படும். மீதி 0.5 மில்லியன் யூரோக்களும் புதிய திட்டங்களைத் தீட்டுவதற்கும், ஜேர்மானிய நிபுணர்களின் வருகை போன்றனவற்றிற்குப் பாவிக்கப்படும்.



இம் மூன்று திட்டங்களும் ஜேர்மனி அரசின் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜென்சி (GIZ) மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கை அரசாங்கத்தின், சிறிய மற்றும் நடுத்தரத் துறைகளுக்கான தொழில்ப் பயிற்சிகளை அளிக்கும் முயற்சிகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை ஜேர்மன் அரசு நீண்டகாலமாகச் செய்து வருகிறது.

இந் நிதியுதவி வழங்களுக்கான ஒப்பந்தம் இன்று நிதியமைச்சில் நடைபெற்றது. இலங்கை சார்பில் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகலவும், ஜேர்மன் அரசு சார்பில் இலங்கைக்கான கேர்மனியின் தூதுவர் ஜோர்ண் றோட்டும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.