Spread the love

1980 களில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்கிய பிரித்தானிய கூலிப்படையான கீனி மீனி சேவைவகள் (Keenie Meenie Services (KMS) ) என்ற நிறுவனம் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இப் போரின்போது KMS நிறுவனம் பிரித்தானிய அரசின் சார்பில் அதன் அனுசரணையோடுதான் இலங்கை அரசுக்கு உதவி செய்திருந்தது என இவ் விடயம் பற்றி புலன்விசாரணைகளைச் செய்த ஊடகவியலாளர் ஃபில் மில்லர் வெளிக்கொணர்ந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, KMS கூலிப்படையின் நடவடிக்கைகளின்போது போர்க்குற்றங்கள் புரியப்பட்டனவா என விசாரிக்க வேண்டுமென ஃபில் மில்லர் விடுத்த கோரிக்கைகளுக்கமைய லண்டன் மெற்றோபொலிற்றன் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்தது. அதற்காக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் KMS தொடர்பான ஆவணங்களை லண்டன் பொலிசார் கோரியிருந்தனர். ஆனால் இதற்கு வெளிவிவகார அமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் KMS கூலிப்படையின் நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை அறிய ஃபில் மில்லர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தடங்கல்களைக் கொடுத்துவருகிறது. இது சர்வதேச உறவுகளைப் பாதிக்கும் என அது காரணம் தெரிவிக்கிறது. இருப்பினும் ஆவணக் காப்பகத்திலிருக்கும் கோப்புகளை 20 வருடங்களுக்குப் பின்னர் பகிரங்கப் படுத்தலாம் என அரசாங்க விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் இக் குறிப்பிட்ட கோப்புகளை 60 வருடங்களுக்கு (2046 மட்டும்) வெளியிடத் தேவையில்லை என அரசாங்கம் இப்போது தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் மீதான வழக்கை தீர்ப்பாயத்துக்குக் கொண்டு செல்ல, கடந்த இரண்டு வாரங்களாக மில்லர் பொதுவெளியில் நிதி சேர்க்கிறார். இவ்வழக்கு அநேகமாக அடுத்த வருடம் தீர்ப்பாயத்துக்குச் செல்ல வாய்ப்புண்டு. இதில் வெற்றி பெற்றால் இவ்விடயம் தொடர்பான முழுக் கோப்புகளும் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அப்போது மார்கிரெட் தட்சர் அரசுக்கும் KMS கூலிப்படைகளுக்குமுள்ள உறவு தெரிய வருமெனெ மில்லர் கூறுகிறார்.


மில்லர் எழுதி வெளிவந்திருக்கும் நூலில் எப்படி தட்சர் காலத்து அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் KMS இலங்கையின் அதிரடிப்படைகளுக்குப் பயிற்சியளித்தனர் எனவும் இதன் பலனாக 1987 இல் கொக்கட்டிச்சோலை படுகொலையை அதிரடிப்படை மிருகத்தனமாக மேற்கொண்டிருந்தது எனவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் படுகொலையின்போது 85 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இச் சம்பவத்தின்போது பாவிக்கப்பட்ட உலங்குவானூர்தியை KMS கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரே ஓட்டியிருந்தார் எனவும் அப்போது கூறப்பட்டது.

இக்காலகட்டத்தில் KMS இன் ஈடுபாடு பற்றி நன்கு அறிந்திருந்த, முன்னாள் ஈரானுக்கான பிரித்தானிய தூதுவரும், மார்கிரெட் தட்சரின் விசேட ஆலோசகருமான சேர் அந்தொனி பார்சன்ஸ் 1996 இல் இறந்து போனார்.

அக் காலத்தில் பல தமிழ் பிரிவினைவாதிகள் கம்யூனிச சிந்தனைகளைக் கொண்டிருந்தார்கள் எனவும் அதனால் ரஷ்யாவின் உதவிகளை அவர்கள் பெறக்கூடுமென பிரித்தானிய அரசு நம்பியிருந்தது எனக் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் தமிழ் தகவல் நடுவம், மில்லரின் நூலில் உள்ள விடயங்கள் பற்றி ஐ.நா. வின் கூலிப்படைகள் பற்றி ஆராயும் செயற்குழுவுக்குத் தெரிவித்ததன் காரணமாக அக் குழுவும் இக் கோப்புகளைப் பகிரங்கப்படுத்தும்படி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் கேட்டிருந்தது.

தற்போது வெளிவிவகார அமைச்சு, 1980 களில் KMS நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களைக் கொண்ட கோப்புகளைப் பகிரங்கப்படுத்த மாட்டோமெனவும் அதற்குப் பதிலாக தாம் லண்டன் பொலிசாரிடம் அவற்றைக் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email