இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வெளிநாடுகளின் தலையீடு தேவையென்பது ஆபத்தானது – ஆனந்தசங்கரி

இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிநாடுகள் தலையிடவேண்டுமென்று கோருவது ஆபத்தை விளைவிக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அக்கறையுள்ள கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டுச் சில தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் எடுத்த முடிவுகளை ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் என செய்தி வெளியிடுவதை தமிழ் ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என மூத்த தமிழ் அரசியல்வாதியான ஆனந்தசங்கரி அவர்கள் கேட்டுள்ளார்.

“இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கென வெளிநாடுகளை அழைப்பது முட்டாள்தனமானது. அது உள்நாட்டு தீவிர அரசியல்வாதிகளையும், பெரும்பான்மையின மக்களையும் ஆத்திரமூட்டும். அது மட்டுமல்லாது இரு நாடுகளுக்குமிடையேயான சுமுகமான உறவையும் அது பாதிக்கும். இலங்கை ஒரு சுதந்திரமான நாடு.



“ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு நாடும் தலையிட விரும்பாது, மற்றைய நாடுகளும் அவற்றுக்கான வரம்புகளை அறிந்துவைத்துள்ளன. நிலைமையை தெளிவாகப் புரிந்துகொண்டுள்ள இந்த அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக்கக் கூடாது. எங்கள் பிரச்சினைக்கு சமஷ்டி ஒரு தீர்வாகாது என எல்லாக் கட்சிகளுமே ஏற்றுக்கொண்டுள்ளன. இதைத் தெரிந்துகொண்டும் சமஷ்டியே ஒரே தீர்வு எனக்கூறி மக்களை ஏமாற்றக்கூடாது.

“ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியுடனான தீர்வைத் தருவதாகக் கூறியபோது த.தே.கூட்டமைப்பு அதை எதிர்த்திருந்தது. மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சிக்கான கோரிக்கையுடன் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அப்படியிருந்தும் 2005 இல், 49% சிங்கள மக்கள் சமஷ்டிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அப்போது சமஷ்டி வேண்டாம் எனக் கோரிவிட்டு இப்போது கூட்டமைப்பினர் சமஷ்டி கேட்பது நகைப்புக்குரியது.

“இதைப் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு அருகதையேயில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்காக சில கட்சிகள் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இனப்பிரச்சினைக்கு இந்திய அரசியலமைப்பு மாதிரியொன்றே உகந்தது என தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு மேலான எந்தத் தீர்வுக்கும் இந்தியா செல்லுமெனெ நான் நம்பவில்லை.

“ஏராளமான சிங்கள மக்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு ஆதரவு தந்தார்கள். இந்தியா மாதிரியான அரசியலமைப்பைக் கொண்ட ஒரு தீர்வுக்காக இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதே நம்மிடம் இருக்கும் சிறந்த அணுகுமுறை. 22 அங்கத்தவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகியோரின் முழுமையான ஆதரவுடன் கூட, கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுக்கொடுக்க முடியவில்லை. 2015 முதல் 2020வரை நல்லாட்சி அரசில் உயர் பதவிகளை வகுத்திருந்த போதும்கூட அவர்களால் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இந்த வருடத்துக்கான மிகச்சிறந்த நகைச்சுவை இது.

“மக்கள் எவ்வளவு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டியவர்களாக உள்ளார்கள் என்பதை உணராது இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை எண்ணும்போது எனக்கு வேதனையாகவிருக்கிறது” என திரு வீ.ஆனந்தசங்கரி அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.