Satire | கடி-காரம்

இலங்கைக்குப் புகழ் சேர்க்கும் இராணுவம்

கடிகாரம்

குருநாகல், இயக்ககப்பிட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகன் ஒருவரைக் காலால் எட்டி உதைக்கும் காட்சியொன்று காணொளி வடிவில் பரவி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரி ஒருவர் இன்னுமொரு இராணுவச் சிறுவன் பிடித்து வைத்திருக்கும் ஒரு பொதுமகன் மீது எட்டி உதைப்பது காட்டப்படுகிறது. ஒரே ஒரு உதையைக் கொடுத்தபின் அந்த அதிகாரி வெற்றிக் களிப்பில் வீர நடை போட்டுக்கொண்டு மேலும் உதை வாங்க விரும்பும் பொதுமக்கள் இருக்கிறார்களா எனத் தேடிப் போவது கண்கொள்ளாக் காட்சி.

இச் சம்பவம் குறித்து அவரிடம் பின்ன்னர் விசாரித்தபோது இம் மக்கள் அந் நிலையத்துக்கு வந்து வரிசையில் நின்றதே தன்னிடம் உதை வாங்குவதற்கு எனவும், ஆனாலும் இச்சம்பவத்தின்போது தனது உதை அப் பொதுமகன் மீது படாது நேர தூரத்தைக் கணித்துத் தான் செயற்பட்டிருந்தார் எனவும் இதன் மூலம் இலங்கை இராணுவம் எப்படியான பயிற்சிகளைப் பெறுகிறது அது எவ்வளவு ஒழுக்கமுள்ளது என்பது தெரிகிறது எனவும் வேண்டுமானால் உதை வாங்கியவரிடமே இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் (வீரகேசரி ஜூலை 4, 2022) எனவும் தெரிவித்திருக்கிறார்.

இக் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் பெயர் லெப்டினண்ட் கேணல் விராஜ் குமாரசிங்க எனவும் இலங்கை தேசிய காவற்படையின் கட்டளை அதிகாரி எனவும் இவரது செயலால் இலங்கையின் மொத்த இராணுவமுமே பெருமையடைகிறது எனவும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

“இச் சம்பவத்தைக் காட்டும் சமூக வலைத்தளங்கள் ஏதோ நானாகப் போய் அவரை உதைத்தது போல உருமாற்றிய படங்களையும், காணொளிகளையும் பரவ விட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. அவரே எனது காலை நோக்கி வேகமாக வந்தார், நான் பயிற்றுவிக்கப்பட்ட மாதிரியே சாமர்த்தியமாக என் காலை உயர்த்தி அவரிடமிருந்து தப்பி விட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இச் சம்பவம் மொத்த இராணுவத்தினருக்கும் பெருமை சேர்த்த ஒன்றாக இருப்பதால் இக் காணொளியைத் தாம் இதர இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கும் கற்கை நெறியில் ஒரு அங்கமாக இணைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இக் காணொளியை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அதிகாரியின் அங்க அசைவுகளை அவதானிப்பதற்காக விசேட அவதானிப்புக் குழுவொன்றை இராணுவத் தலைமைப்பீடம் நியமித்துள்ளதென இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்தின தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் தென்னிலங்கையில் காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையே நெருக்கம் அதிகரித்து வருவது நல்ல விடயம் எனத் தெரிவித்த அவர் இச் சம்பவத்தின் பின்னர் குறிப்பிட்ட அதிகாரிக்குப் பதவி உயர்வும் ஜனாதிபதி விருதும் வழங்கபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அபிப்பிராயத்தைக் கேட்க எமது நிருபர் ஊர்க்குருவியை அனுப்பியிருந்தபோதும் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு குருவியை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டது. (Disclaimer: இது ஒரு சோடிக்கப்பட்ட செய்தி)