Spread the love

ஆகஸ்ட் 31, 2020: சீன அரசின் கீழ் இயங்கும் கட்டுமான ஒப்பந்த நிறுவனமான, சீன தகவல் தொடர்பு, கட்டுமான கம்பனி (Chinese Communications Construction Company (CCCC) மீது, அமெரிக்கா வர்த்தகத் தடையை விதித்துள்ளமை அந் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றைப் பாரதூரமாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்குத் தலையிடியைத் தரப்போகும் சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்க வர்த்தகத் தடை 1
தென் சீனக்கடல் பிராந்தியம்

பல நாடுகளின் பொதுப்பாவனையிலிருக்கும் தென்சீனக் கடலில், அந் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, சீனா அத்துமீறிப் பல செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருகிறது. தன் பட்டி வீதித் திட்டத்தின் ஒரு படியாக இத் தீவுகளில் தனது கடற்படையை நிலைகொள்ள வைப்பதுவே சீனாவின் எண்ணமாகும். அமெரிக்காவும் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து வந்த போதிலும், அதைத் தடுத்து நிறுத்த அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியவில்லை. தற்போது அத்தீவுகளிலும், அப்பிராந்திய நாடுகளிலும் சீனாவின் சார்பாகக் கட்டுமானத்தை மேற்கொண்டுவரும் நிறுவனமான CCCC மீது அமெரிக்கா வர்த்தகத் தடையை விதித்துள்ளது.

இலங்கையில் US$1.4 பில்லியன் செலவில் கொழும்பு துறைமுக நகரம், மலேசியாவில் US$10.5 பில்லியன் செலவில் ரயில்வே திட்டம், பிலிப்பைன்ஸில் US$10 பில்லியன் செலவில் விமான நிலையம் எனப் பல நாடுகளிலும் இச் சீன நிறுவனம் நிர்மாணத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அத்தோடு, இச் சீன நிறுவனத்தின் கீழ் இயங்கும் வேறு சில சிறிய நிறுவனங்கள் மூலம் சீனா 157 நாடுகளில் 923 திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணித்த சீன துறைமுக பொறியியல் நிறுவனம் (China Harbour Engineering Company), இந்த தாய் நிறுவனமான CCCC யின் ஒரு அங்கமே. 2015 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்காக மஹிந்த ராஜபக்ச சார்பில் US$7.6 மில்லியன்களை இந் நிறுவனம் செலவு செய்தது என நியூ யோர்க் டைம்ஸ் 2018 இல் செய்தி வெளியிட்டிருந்தது. இத் துறைமுகத்தை விடவும், அம்பாந்தோட்டை நகர அபிவிருத்திக்காகவும் இந் நிறுவனம் பெருந்தொகையான பணத்தைச் செலவு செய்துள்ளது.

CCCC நிறுவனத்தின் 5 சேய் நிறுவனங்கள் உள்ளிட்ட 24 சீன நிறுவனங்களை, கடந்த புதனன்று, அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் தனது வர்த்தகத் தடைக்கான நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இத் தடையின் பிரகாரம், அமெரிக்காவின் அனுமதியின்றி, எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் இச் சீன நிறுவனங்களுடன் வாணிபம் செய்ய முடியாது. இதனால் சீனாவின் திட்டங்கள் நடைபெற்றுவரும் இலங்கை போன்ற நாடுகள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈரானுடன் ‘வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில்’ ஹுவாவே நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொண்டது என்பதற்காக அதன் முதன்மை நிர்வாகி ஒருவரை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்கி கனடா கைதுசெய்தது கனடா-சீன உறவில் பாரிய வெடிப்பு உருவாகக் காரணமாக அமைந்தது என்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

Print Friendly, PDF & Email
Related:  அம்பாந்தோட்டை துறைமுகம் எமது கட்டுப்பாட்டில் இல்லை - அரசாங்கம் வருத்தம்
இலங்கைக்குத் தலையிடியைத் தரப்போகும் சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்க வர்த்தகத் தடை

இலங்கைக்குத் தலையிடியைத் தரப்போகும் சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்க வர்த்தகத் தடை