இலங்கைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல்!
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்
மே 11 முதல் 31 வரை நடைமுறையிலிருக்கும்
2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை
இலங்கையில் கோவிட் தொற்று கட்டுப்பாடற்கு பரவுவதை அடுத்து அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. இதன் பிரகாரம், இலங்கைக்குப் பயணம் செய்யும் பயணிகள், அவர்கள் தடுப்பூசி எடுத்திருந்தாலுங்கூட, 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
பொது சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவிக்கப்பட்ட இக் கட்டுப்பாடு மே 11 முதல் மே 31 வரை நடைமுறையிலிருக்கும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கை அறிவிப்பின் திருத்த இணப்புகளால இக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் வெளிநாடுகளின் ராஜதந்திரிகள், அவர்களது குடும்பங்கள் அனைவருக்கும் இப்புதிய கட்டுப்பாடுகள் செல்லுபடியாகும்.
ஏற்கெனவே ஒழுங்குசெய்யப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு வந்திருக்கும் அரச அதிகாரிகளுக்கும் இக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செல்லுபடியாகும்.
இலங்கைக்குத் திரும்பும் கப்பல் தொழிலாளர்கள், அதிகாரிகள், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், உல்லாசப் பயணிகள், வதிவிட விசா வைத்திருக்கும் வெளிநாட்டுக்காரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுதலுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ஓட்டல்கள், தனைமைப்படுத்தும் மையங்கள், பாதுகாப்பான இடங்கள் எனக் கருதப்படுமிடங்கள் ஆகியவற்றில் 14 நாட்கள் முற்றாகத் தம்மைத் தனிமைப்படுத்தியே ஆகவேண்டும்.
இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகள் கோவிட் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவோ அல்லது தனிமைப்படுத்திக்கொள்ளவோ தேவையில்லை.
12 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளும் வந்த அன்றே PCR பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; 2 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 11 முதல் 14 நாட்களுக்குள் பரிசோதனை செய்துகொண்டாகவேண்டும்.
சகல பயணிகளும் முதலாம் நாள் மற்றும் 11-14 ம்நாள் பரிசோதனைகளில் கோவிட் தொற்று இல்ல என நிரூபிக்கப்பட்ட பின்னரே அவரவர் தடுப்பு நிலையங்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொற்றாளர்களோடு தொடர்புகொண்டார்கள் எனத் தெரியவந்தால் அவர்களது தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும்.
இக் கட்டாயப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், தேவையேற்படின் மீள்பரிசீலனை செய்யப்படும்.
Related posts:
- யாழ்ப்பாணத்தில் தீவிரமாகப் பரவுகிறது கோவிட்-19 – பாடசாலைகள் மூடப்பட்டன!
- இலங்கை | உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாதாரத்துறை முற்றாக முடக்கப்படும் ஆபத்துண்டு – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!
- ராகம போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கோவிட் நோயாளிகள்
- வளரும் கிழக்கு | கல்முனை ஆதார வைத்தியசாலையின் அளப்பரிய சேவை