இலங்கைக்குக் களவாகத் திரும்ப முயன்ற 6 தமிழர்கள் தமிழ்நாடு ‘கியூ’ பிரிவினால் கைது!

Spread the love

தனுஷ்கோடி, தமிழ்நாடு, டிசம்பர் 17, 2019

தமிழ்நாடு, தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற, 10 வயதுப் பையன் உட்பட்ட ஆறு பேரைத் தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு போலீஸ் கைதுசெய்துள்ளது.

இவ்வாறுபேரும் வெவ்வேறு காலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களென்றும், சென்னையில் வாழ்ந்த இவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்காகத் தனுஷ்கோடியிலுள்ள கோதண்டராமர் கோவிலுக்கு அருகாமையில் படகொன்றில் ஏறுவதற்குத் தயார் செய்துகொண்டிருந்த நிலையில், திங்களன்று கைதுசெய்யப்பட்டதாக’தி இந்து’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்குள் களவாககே குடிபுகுந்ததாக இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.சதீசன் (49), அவரது மனைவி டிலக்ஷனா (31), திருகோணமலையைச் சேர்ந்த எஸ்.சுதாகரன் (39), அவரது மனைவி சந்திரமதி (36), அவர்களது 10 வயது மகன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த அன்பு எனப்படும் உதயகுமார் (40) ஆகியோரே கைதுசெய்யப்படடவர்களாவர்.


இவர்களிடமிருந்து கடவுச் சீட்டுகள் , கைத்தொலைபேசிகள், சிம் கார்ட்டுகள், இந்தியப் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன . இவர்களில் சதீசனும் அவரது மனைவியும் 2012 இல் விமானம் மூலம் வந்து விசாவைப் புதுப்பிக்காமழும், போலீசில் பதியாமலும் வாழ்ந்தார்கள் எனவும், சுதாகரனும் அவரது மனைவியும் 2013 இலும், உதயகுமார் 2018 யிலும் களவாகக் கடல் மூலம் வந்திருந்தார்கள் எனவும் போலீசார் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

டிலக்சனாவின் தந்தையார் சுகவீனமாக உள்ளதாக அவரது தமையனார் தகவல் தந்ததையொட்டித் தாம் இலங்கைக்குத் திரும்புவதற்கு முயற்சித்ததாக டிலக்சனா தெரிவித்தார். சடட ரீதியாக நாட்டுக்குத் திரும்ப 3 இலட்சம் இந்திய ரூபாய்கள் தேவைப்படுமென்பதை அறிந்து தாம் படகு மூலம் திரும்புவதற்குத் தீர்மானித்ததாகவும் அப்போது சுதாகரனது குடும்பமும் உதயகுமாரும் இணைந்து கொண்டதாகவும் டிலக்சனா பொலிஸாருக்குத் தெரிவித்திருந்தார். ஒரு பயண முகவரின் உதவியுடன் ராமேஸ்வரம் சென்று அங்கு லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தபோது அவர்கள் ‘கியூ’ பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் போலீசாரிடம் கையளிக்கப்பட்டனர்.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 சிகிச்சை மருந்துக்கான தடையை நீக்கியது இந்தியா

Leave a Reply

>/center>