இலங்கைக்கான இந்திய கடனுதவி US$ 1 பில்லியன் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது

இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணிச் சுமையைத் தற்காலிகத் தளர்த்தும் நோக்குடன் இந்தியாவிடமிருந்து US$ 1 பில்லியனைக் கடனாகப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியவர்கள் ஈடுபட்டுவரும் பேச்சுவார்த்தைகள் நிறைவுறும் நிலையை எட்டியுள்ளதாகவும் விரைவில் இருதரப்பினரும் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இக் கடன் குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தை, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜயசங்கர் ஆகியோரிடையே ஜனவரி 18 அன்று இணையவழியாக நடைபெற்றிருந்தது. இதன் பிரகாரம் இந்தியா இலங்கைக்கு 1 பில்லியன் டாலருக்கான கடனுறுதியை (Line of Credit) வழங்குமெனவும் இலங்கையில் தற்போது நிலவிவரும் எரிபொருள் மற்றும் உணவுப்பொருள் இறக்குமதிகளுக்குத் தேவையான உடனடி நிவாரணத்தை இக் கடனுதவி வழங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் நோய்த்தொற்றிலிருந்து நாடு ஓரளவு விடுபட்டதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததும், அதே வேளை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் மீதான தடையை நீக்கி அவற்றைக் கொள்முதல் செய்ய இக்கடன் உதவிசெய்யுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்தும் பெறமுடியும். அத்தோடு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்கள் அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு சில அவசிய இறக்குமதிகள் செய்யவேண்டிய தேவைகள் அரசுக்கு உண்டு. எனவே இப் பணம் பொருளாதாரக் காரணங்களை விட பெரும்பாலும் அரசியற்காரணங்களுக்காகவே பயன்படுத்தப்படுமெனவே எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

இக் கடனை வழங்குவதற்கான நிபந்தனைகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனினும் இந்த $1 பில்லியன் கடனுதவியில் பெரும்பாலான கொள்முதல்கள் இந்தியப் பண்டங்களாகவே இருப்பதற்கான சாத்தியங்களுமுண்டு. சீனாவிடம் பெற்ற கடனுதவியின்போதும் இப்படியான நிபந்தனைகள் இடப்பட்டிருந்தன. கடந்த வருடம் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய வருகையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட $500 மில்லியன் கடனுறுதியைப் பாவித்து இலங்கை இந்தியாவிடம் அத்தியாவசிய எரிபொருளைக் கொள்முதல் செய்திருந்தது.

‘நாற்தூண்’ ஆதரவு (four-pillar package) என்ற திட்டத்தின் கீழ் கிடைக்கும் இந்த இந்தியக் கடனுதவி, உணவு, சுகாதாரம், எரிசக்தி, வெளிநாட்டுச்செலாவணிப் பற்றாக்குறை நிவர்த்தி ஆகிய தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமெனக் கூறப்படுகிறது.