Spread the love

ஜூலை 29, 2020: இறுதிப் போரின்போது பொது மக்கள் எவருமே கொல்லப்படவில்லை என முன்னாள் மஹிந்த ராஜபக்ச அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குணவர்த்தனா இப்படித் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே தவிர பொது மக்களல்ல என அப்போதைய அரசு கூறியிருந்தது.

“பொது மக்கள் எவருமே கொல்லப்படவில்லை என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. போரென்றால் நிச்சயம் அப்பாவி மக்கள் தவறுதலாகக் கொல்லப்படுவது வழக்கம். பரனகம அறிக்கையை எடுத்துக்கொண்டால், அதில் 22,000 பேர்கள் காணாமற் போநமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளில் இக் காணாமலாக்கப்பட்டோர் அடக்கப்பட்டிருந்தார்கள். 1) இராணுவம் வந்து கூட்டிக்கொண்டு போனவர்கள் 2) விடுதலைப் புலிகள் வந்து கூட்டிக்கொண்டு போனவர்கள் 3) யார் கூட்டிகொண்டு போனார்கள் என்பது தெரியாது என்னும் வகையினர். எப்படியிருந்தாலும், இந்த காணாமற்போன 22,000 பேரின் வீடுகளுக்கும் கிராமம் கிராமமாகப் போய் எடுத்த தகவல்கள் வீடியோப் பதிவுகளாக உள்ளன. இது போன்ற விடயங்களை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும். எமது மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையே இது தான். நாம் எதற்கும் முகம் கொடுக்க மறுத்துவிடுவது. அப்போது எமது பாதுகாப்பு கொள்கையே வெளிவிவகாரக் கொள்கையையும் தீர்மானித்தது.” என குணவர்த்தனா மேலும் தெரிவித்தார்.



மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது சஜின் டி வாஸ் குணவர்த்தனா வெளிவிவகார அமைச்சில் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தார்.

“போருக்குப் பின்னர் நாம் தெளிவான வரைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். இறுதிப் போரில் நாம் இந்தியாவுடன், அமெரிக்காவுடன், பிரித்தானியாவுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து போரை முன்னெடுத்திருந்தோம். இறுதியில் எம்மோடு நின்றவர்கள் ஆபிரிக்க நாடுகளும், சீனாவும் மட்டுமே” என குணவர்த்தனா மேலும் தெரிவித்திருந்தார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை தேர்தல்கள் | பிந்திய செய்திகள்: த.தே.கூட்டமைப்புக்கு 15-19 ஆசனங்கள் வரை கிடைக்கலாம்?