இறுதிப்போரின்போது விடுதலைப்புலி போராளிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை – இராணுவப் பொறுப்பதிகாரி
இலங்கை இராணுவம் உட்படப் பலதரப்பினராலும் இதுவரை கூறப்பட்டு வந்தமைக்கு மாறாக இறுதிப்போரின்போது விடுதலைப்புலி போராளிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என இராணுவ பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு சரணடைந்த போராளிகளின் எண்ணிக்கை குறித்த தகவலைப் பெறும்பொருட்டு ‘தகவல் பெறும் உரிமைச்’ சட்டத்தின்கீழ் ஊடகவியலாளர் டி.நிரோஷ்குமார் பதிந்திருந்த வழக்கு இலங்கை தகவலுரிமை ஆணையத்தினால் (Right to Information Commission of Sri Lanka (RTICSL)) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாட்சியமளித்த இராணுவப் பொறுப்பதிகாரி மேற்படி தெரிவித்திருக்கிறார்.
தனது கோரிக்கையை நிறைவேற்ற இராணுவ தகவல் அதிகாரியால் முடியாமல் போனதையடுத்து நிரோஷ்குமார் தகவலுரிமை ஆணையத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கு நவம்பர் 3 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் நிரோஷ்குமாரின் சார்பில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தோன்றியிருந்தார்.
‘சரணடைந்த போராளிகள் இராணுவத்திடமல்ல அரசாங்கத்திடமே சரணடைந்திருந்தார்கள் என இதற்கு முன்னர் நிரோஷ்குமாரின் கோரிக்கைக்கு இராணுவம் எழுத்துமூலம் பதிலளிதிருந்தபோதும் உள்ளக இடம்பெயர்ந்தோர் மட்டுமே இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர் எனவும் இராணுவம் சரணடைந்தவர்களை இடப்பெயர்வு முகாம்களுக்கு கொண்டுசென்றது எனவும் இம் முகாம்கள் பொது மறுவாழ்வு ஆணையரால் நிர்வகிக்கப்பட்டன எனவும் சரணடைந்தவர்களுள் போராளிகளும் இருந்ததாக மறுவாழ்வு ஆணையத்துக்கு அப்போது கூறப்பட்டது எனவும் பொறுப்பதிகாரி பிரிகேடியர் நாகவத்த தகவலுரிமை ஆணைய விசாரணைகளின்போது தெரிவித்திருக்கிறார்.

நிரோஷ்குமார் தரப்பில் ஆணைய வழக்கில் பேசிய சட்டத்தரணி சுவஸ்திகா “இறுதிப் போரின்போது பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாக சரணடைதலை மேற்பார்வை செய்த அதிகாரிகளும், சரணடைந்த போராளிகளும் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கருணா அம்மான், டக்ளஸ் தேவாநந்தா, முன்னாள் இராணுவப் பேச்சாளர் ஆகியோரும் கூறிவந்திருக்கின்றனரர்” எனத் தெரிவித்திருந்தார். மேன்முறையீட்டு ஆணையம் இதுபற்றி பிரி.நாகவத்தயிடம் இவ்வாவணங்கள் பற்றி விசாரித்தபோது இவ்விடயத்தில் தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என நாகவத்த தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த ஆணையம் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தமையை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இருப்பின் அவற்றை எழுத்துமூலம் நவம்பர் 17ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் வாதி தரப்பிற்கும் அதற்கான பதிலை இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் கொடுக்கவேண்டுமென இராணுவத்தரப்பிற்கும் மேன்முறையீட்டு ஆணையம் கட்டளையிட்டுள்ளது. இவ்வழக்கு ஜனவரி 4, 2023 அன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வழக்கில் சட்டத்தரணிகள் கிஷாலி பின்ரோ-ஜயவர்த்தன, ஜகத் லியனாராச்சி, ஏ.எம்.நாஹியா ஆகியோர் ஆணையர்களாகவும், இராணுவம் சார்பில் பிரி.நாகவத்த மற்றும் நிரோஷ்குமார் சார்பில் சுவஸ்திகா அருள்லிங்கம் மற்றும் ஊடகவியலாளர் தரிண்டு இரங்க ஜயவர்த்தன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.