இறந்தவர்களின் எண்ணிக்கை 359 | புதிய தாக்குதல்களுக்கு NTJ தயாராகிறதா?

இறந்தவர்களின் எண்ணிக்கை 359 | புதிய தாக்குதல்களுக்கு NTJ தயாராகிறதா?

Spread the love
இந்திய புலனாய்வு தகவல்

உயிர்த்தெழு ஞாயிறு குண்டு வெடிப்பு பற்றி சிறீலங்கா பாதுகாப்புத் தரப்பிற்கு இந்திய புலனாய்வுத் துறை முன்கூட்டியே தகவல்களை வழங்கியிருந்தமை தெரிந்ததே. தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய மதகுரு ஒருவரின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த இந்திய புலனாய்வுத் துறையினர் பெற்ற தகவலைக் கொண்டு சிறீலங்கா பாதுகாப்பு தரப்பிற்கு இதனை வழங்கியிருந்தனர். சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் அத் தகவல்களை உதாசீனம் செய்துவிட்டனர் என ஜனாதிபதி, பிரதமர் வட்டாரங்கள் ஒப்புக்கொண்டிருந்தன. இது சம்பந்தமாக 24 மணித்தியாலத்துக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக ஜானாதிபதி அறிவித்திருந்தார்.

தற்போது ஐசிஸ் இத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளதைத் தொடர்ந்து இந்திய புலனாய்வுத் துறையினர் சிறீலங்காவிற்கு மேலும் ‘தொழில்நுட்ப, புலனாய்வு’ விடயங்களில் உதவிகளை வழங்க முன்வந்த போதும் சில அரசியல் காரணங்களுக்காக இவ்வுதவி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதில் பங்குபற்றிய தற்கொலைதாரிகள் பலரும் சிறீலங்காவைச் சேர்ந்தவர்கள் எனினும் இந்த அளவிற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் அளவிற்கு அவர்களிடம் திறமை இருந்திருக்க முடியாது, வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் இங்கு முற்கூட்டியே வந்து இந்நடவடிக்கையை மேற்பார்வை செய்திருக்க வேண்டும் என சிறீலங்காவின் பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன. ஐசிஸ் ஏற்கெனவே இது போன்ற தாக்குதல்ளை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளிலுள்ள தேவாலயங்களில் மேற்கொண்டுள்ளது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னாலுள்ள தேசிய தவ்ஹீத் ஜம்மா அத் (NTJ) என்னும் அமைப்பு 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டது. இதே காலப் பகுதியில் தான் தென்னிலங்கையில் பொதுபல சேனா (BBS) என்ற தீவிரவாத பெளத்த இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது. பொ.ப.சே. யின் உருவாக்கத்தின் பின்னால் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனமான இண்டர் சேர்விஸ் இன்ரெலிஜென்ஸ் (Inter Service Intelligence (ISI)) இருப்பதாக இந்திய ஊடகமொன்று முன்னர் தெரிவித்திருந்தது. பொது பல சேனாவை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதன் மூலம் அதற்கு எதிராக முஸ்லிம்களின் ஆயுத அமைப்பொன்றை ஐ.எஸ்.ஐ. உருவாக்க முடிந்தது எனவும் அதுவே NTJ எனவும் இரண்டு அமைப்புக்களுக்குமே ஐ.எஸ்.ஐ. தான் பண உதவி செய்தது எனவும் அப்போது செய்திகள் வெளிவந்தன. தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி போதைப் பொருள், ஆயுதங்கள் என்பவற்றைக் கடத்தி இந்தியாவின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதே ஐ.எஸ்.ஐ. யின் நோக்கமென அவ்விந்திய ஊடகம் கருத்து தெரிவித்திருந்தது. (இச் செய்திகளை பி.பி.எஸ். அமைப்பின் நிர்வாகி மறுத்திருக்கிறார்). அதே வேளை பொ.ப.சே. யின் உருவாக்கத்தின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதாபய ராஜபக்ச உள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்திருந்தன. (http://dbsjeyaraj.com/dbsj/archives/17939) இதே வேளை தமிழ் நாட்டிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜம்மா-அத் (TNTJ) என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் ஆனால் தங்களுக்கும் சிறீலங்கா அமைப்பிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என அவ்வமைப்பின் செயலாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது. ஆயினும் முஸ்லிம் தீவிரவாதிகளை உருவாக்குவதில் இவ்வமைப்பு ஈடுபட்டுள்ளதென இந்திய புலனாய்வுத் துறை நம்புகிறது.

சிறீலங்கா NTJ அமைப்பை உருவாக்கியவர் சாஹ்ரான் ஹாஷிம். இவருக்கு அபு உபைடா என்றொரு பெயருமுண்டு. ஞாயிறன்று ஷங்கிரி-லா ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பைச் செய்த தற்கொலைதாரி இவர் தான் என நம்பப்படுகிறது. இவர் வெடித்த குண்டில் இராணுவ தர வெடி மருந்துகள் பாவிக்கப்பட்டிருந்தன என அறியப்படுகிறது.

தாக்குதலின் பின்னர் வெளியான அல் குபார எனும் ஊடகத்தால் வெளியிடப்பட்ட காணொலியில் சபதம் எடுக்கும் ஏழு பேரில் தலைக்கவசம் அணியாதவர் அபு உபைடா ஆகும். அந்த காணொலியில் தமிழிலும் அரபி மொழியிலும் அவர்கள் எடுத்த சபத உரை இருந்தது. “ஓ சிலுவைப் போர்க்காரரே இன்றய இரத்தம் தோய்ந்த நாள் (21-04) உங்களுக்கான பரிசு” என்ற வாசகம் அக் காணொலியில் இணைக்கப்பட்டிருந்தது.

இத் தாக்குதல்கள் மார்ச் 15 நியூசீலந்தில் நடத்தப்பட்ட முஸ்லிம் படுகொலைகளுக்குப் பதிலடி எனக் கொழும்பு அரசியல்வாதிகள் கூறினாலும் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே NTJ இதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டது எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். இக் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்டவர்களென்ற சந்தேகத்தில் சமீபத்தில் கட்டாரிலிருந்து திரும்பிய சிறீலங்காவைச் சேர்ந்த முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய புலனாய்வுத் துறை ஏப்ரல் 4ம் திகதியே இத் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை வழங்கியிருந்தாலும் சிறீலங்கா பாதுகாப்புத் துறை அவற்றை உதாசீனம் செய்துவிட்டதாகவும் மாறாக அவர்கள் தமிழ்ப் பிரிவினைவாதிகளின் மீளுருவாக்கத்தைத் தடுப்பதிலேயே கவனம் செலுத்தினர் எனவும் இந்திய தரப்பு கருதுவதாகத் தெரியவருகிறது.

இதே வேளை NTJ அமைப்பின் புதிய தலைவராகப் பணியேற்றிருக்கும் ஜால் அல்-குயிட்டல் (மறு பெயர் றில்வான் மார்சாக்) மேலும் பல தாக்குதல்களை மேற்கொள்ளலாமெனவும் இந்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. சாஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரான நூபார் மெளலவி கட்டாரிலிருந்து திரும்பி வந்துள்ளதாகவும் அவரே இனி NTJ அமைப்பைப் பொறுப்பெடுக்கவுள்ளதாகவும் இந்திய புலனாய்வுத் துறை தெரிவித்திருக்கிறதென அறியப்படுகிறது.

பிந்திய செய்தி:

தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 18 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 6 பேர் அளுத்கம பகுதியிலிருந்தும், 5 பேர் பேருவல பகுதியிலிருந்தும், 6 பேர் கட்டுவபிட்டிய பகுதியிலிருந்தும் கைது செய்யப்பட்டனர். அதே வேளை வரக்காபொல பகுதியிலிருந்து மேலுமொருவர் மோட்டார் சைக்கிள் மற்றும் வாக்கி – டோக்கி யுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

Print Friendly, PDF & Email