• Post category:SRILANKA / NEWS
  • Post published:November 13, 2020
Spread the love

புதிய அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியைத் தடைசெய்ததிலிருந்து இலங்கையில் மஞ்சளுக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

உள்நாட்டு உற்பத்தியாளரை ஊக்குவிப்பதற்காக, ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, கடந்த டிசம்பரில், சில பொருட்களின் இறக்குமதியைத் தடைசெய்திருந்தார். இதில் மஞ்சளும் ஒன்று.

அதே வேளை மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது என்பதனால் கோவிட் நோய்த் தொற்றிலிருந்து தப்புவதற்கென மஞ்சளை மூலப்பொருளாகப் பாவித்துப் பல வகையான பானங்களும், மருந்துப் பொருட்களும் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இதனால் மஞ்சளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதே வேளை அரசின் தடை நடைமுறைக்கு வருவதற்கு முன்னால் இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட மஞ்சள் கொழும்பில் இரண்டு கப்பல்களில் இறக்கப்படாமல் இருக்கிறது. விரைவில் அதன் பயன்பாடு காலாவதியாகிவிடும் என்பதால் அவற்றைத் திருப்பி அனுப்பும்படி இந்தியா கேட்டிருந்தும் இலங்கை அதைத் தொடர்ந்து உதாசீனம் செய்து வருகிறது.

இறக்குமதி தடைசெய்யப்பட்டு ஒரு வருடமாகியும் உள்ளூர் உற்பத்தியாளரினால் தேவைகளைப் பூர்த்திசெய்யுமளவுக்கு மஞ்சளை உற்பத்திசெய்ய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட கடும் தட்டுப்பாட்டின் விளைவாக நாட்டிற்குள் கடத்தப்பட்டு வரும் மஞ்சள் கறுப்புச் சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகிறது.



இலங்கை அரசின் தரவுகளின்படி 2019 இல் மட்டும் இலங்கையர்கள் 7,500 தொன் மஞ்சளைப் பாவனைக்குட்படுத்தியிருக்கிறார்கள் எனவும் அதே வேளை மொத்த உள்ளூருற்பத்தி 2,000 தொன்கள் மட்டுமே எனவும் அறியப்படுகிறது.

இறக்குமதி தடை செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு கிலோ மஞ்சள் ரூ.350 ஆக இருந்தது எனவும் தற்போது அது கிலோ ரூ. 4,000 அளவில் விற்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரு கிலோ 60 இந்திய ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது.

இக் கடத்தல் பெரும்பாலும் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் நடைபெறுவதாகவும் இதில் சில அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியாகப் பாதுகாப்பு படைகள் பின்னணியில் இருக்கலாமென்ற சந்தேகமும் உள்ளது. இரு நாடுகளின் கடற் படைகளும் பல கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்துள்ளனர்.

கடத்தல் காரர்கள் இதுவரை தங்கம், கஞ்சா, கடலட்டை போன்றவற்றில் தான் குறி வைத்திருந்தார்கள். இப்போது மஞ்சள் தங்கத்துக்கு நிகராக வந்துவிட்டது என்கிறார்கள் பொதுமக்கள்.

Print Friendly, PDF & Email