NewsSri Lanka

இருளில் மூளும் இலங்கை: இன்று முதல் தினமும் ஒன்றரை மணி நேரம் மின் வெட்டு

மின் பிறப்பாக்கிகளுக்குத் தேவையான எரிபொருள் இல்லாமையால் பல மின்பிறப்பாக்கிகளைச் சுழற்சி முறையில் நிறுத்திவிட இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இலங்கை முழுவதற்கும் மின்சாரத்தை வழங்கும் வலையமைப்பிற்கு நாளொன்றுக்கு 180 மெ.வாட் மின்சாரத்தை ஏற்ற வேண்டும். நீர்வீழ்ச்சியிலிருந்தும், டீசல் போன்ற எரிபொருளிலிருந்தும், நிலக்கரியிலிலிருந்தும் இயக்கப்படும் மின்பிறப்பாக்கிகள் இம் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

சமீப காலமாக ஏற்பட்டுவரும் பொருளாதார நிர்வாகத் தவறுகளால் வெளிநாடுகளிலிருந்து போதுமான டீசல் மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான பணப் போதாமையால் நாட்டில் மிக மோசமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில மின் பிறப்பாக்கிகளை நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாக மின்பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இத் தொழிலாளர் சங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்கெனவே முறுகல் நிலை இருப்பதும், சமீபத்தில் ஏற்பட்ட மின்வழங்கல் தடைக்கு இத் தொழிலாளர் சங்கத்தின் சதிவேலையே காரணமென்று சில அரசாங்க வட்டாரங்கள் கூறியிருந்தன.

இன்றுமுதல் அமுலுக்கு வரும் மின்வெட்டு தினமும் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடிக்கலாம் என மின் பொறியியலாளர்கள சங்கம் தெரிவித்துள்ளது.

நீர் வீழ்ச்சியால் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தின் அளவு 25 வீதத்திற்குக் குறைவடைந்துள்ளதெனவும் டீசல், பெற்றோல், நிலக்கரி ஆகியவற்றால் இயக்கப்படும் பிறப்பாக்கிகளின் மின்னுற்பத்தி 72 வீதத்தால் குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.